OUR CLIENTS
பட்டப்பகலில் பாலாற்றில் மரம் வெட்டி கடத்தல்!
பட்டப்பகலில் பாலாற்றில் மரம் வெட்டி கடத்தல்! Posted on 26-Mar-2019 பட்டப்பகலில் பாலாற்றில் மரம் வெட்டி கடத்தல்!

வேலூர், மார்ச் 26-

வேலூர் ஸ்மார்ட் சிட்டி ஆக மாறுவதற்குள் அதை நாறடித்து நாசப்படுத்தாமல் ஓயமாட்டார்கள் என்று எண்ணத்தோன்றும் அளவுக்கு திட்டப்பணிகளை மாநகராட்சியினர் மிக மட்டமாக செய்து வருகிறார்கள் என்பதை வேலூருக்குள் கால்வைத்தால் புரிந்துகொள்ளலாம்.  

 வேலூர் மாநகரை பராமரிக்கும் மாநகராட்சியிடம் சிக்கி மாநகரம் பலவகையில் சின்னாபின்னமாகிறது. குப்பைகழிவுகளை கொட்டி அதை முறைப்படி அழிக்கத்தெரியாமல் நகரின் மையப்பகுதியான பாலாற்றில் குப்பைகழிவுகளை கொட்டி எரிப்பது மாநகராட்சியினரின் தினசரி தலையாய கடமையாக உள்ளது. மேலும் பொதுமக்களின் எதிர்ப்பையும் பாலாற்றின் தூய்மையையும் புறந்தள்ளிய மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனும், காட்பாடி 1வது மண்டல  துணை ஆணையர் மதிவாணனும் பாலாற்றின் கரையோரத்தில் உள்ள சர்க்கார் தோப்பை அழித்து நூறாண்டுகள் கடந்து ஓங்கி வளர்ந்திருந்த  மரங்களை வேரோடு பிடுங்கி கரையோர காடுகளை அழித்து ஏராளமான மரங்களை வெட்டி யாருக்கும் தெரியாமல் விற்றுள்ளனர். அரசின் கணக்கில் வராத இந்தப்பணம் யார் வாய்க்கு போனது என்று மாநகராட்சி ஆணையருக்கே வெளிச்சம். மேலும் நேற்று ஒரு தனியாருக்கு சொந்தமான குட்டி யானை வாகனம் முழுக்க வெட்டப்பட்ட பச்சை மரங்கள் ஏற்றிச் செல்வதை கண்ட அப்பகுதி மக்கள் அந்த வண்டியை பிடித்து காட்பாடி காவல் ஆய்வாளருக்கு தகவல் கொடுத்தனர்.  அவர் அது வருவாய்துறை சம்பந்தப்பட்டது தாசில்தாரிடம் பேசுங்கள் என்று கூறி இன்ஸ்பெக்டர் ஒதுங்கிக் கொண்டார். தாசில்தாரிடம் பேசியதில் நான் இங்கு மாவட்ட ஆட்சியரின் மீட்டிங்கில் இருக்கிறேன் என்று கூறிவிட்டு அவரும் ஒதுங்கிக் கொண்டார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு பிறகு சிப்பந்தி வந்து அந்த மரத்தை கடத்திக் கொண்டுபோன டிரைவரை அழைத்துப் போனார். பின்னர் மதியம் வரை காத்திருந்த மக்கள் கலைந்த பின்னர் அந்த குட்டியானை அங்கிருந்து எடுத்துச்செல்லப்பட்டது., இவ்வளவு விஷயத்தையும் மாநகராட்சி ஆணையரிடம் கூறினால் மரங்களை எங்கள் வாகனமா கொண்டு சென்றது? எனக்கு தெரியாது என்றதோடு அவரும் ஒதுங்கிக்கொண்டார். பட்டப்பகலில் பெரிய மரத்தை வெட்டி துண்டுகளாக்கி கொண்டு செல்பவர்களை வாகனத்துடன் பிடித்து கொடுத்தும் ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அனுப்பிவைத்த காவல்துறை, வருவாய்த்துறை, மற்றும் மாநகராட்சியினர் இவர்களால் மாநகராட்சியின் இயற்கை வளத்திற்கும் மக்களின் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும்   என்ன பயன் என்பது குறித்து இதற்கு மேலும் விளக்க வேண்டுமா?.  கால்வாய்களில் விளம்பரப்பதாகைகளை வைத்து கல்லா கட்டும் மாநகராட்சி நிர்வாகம் வேலூரிலிருந்து சாலை வழியாக பிற ஊர்களுக்கு செல்லும் வழிகளை விளக்கும் வழிகாட்டி பதாகைகளை வைக்காமல் வெளியூர் வாகன ஓட்டிகளை திணறவைப்பதில் திறமை காட்டுகிறார்கள். வேலூர் மாநகருக்குள் எந்த சாலையையும் ஒரு அங்குலம் கூட விரிவுபடுத்தவில்லை. போக்குவரத்தை பாதிக்கும் வகையில் நடைபாதை அமைத்துள்ளனர்.   மொத்தத்தில் வேலூர் மக்கள் கொள்ளையர்களுக்கு மத்தியில் வாழ்க்ககையை நடத்துகின்றனர். மாநகராட்சியினரின் அத்துமீறல்களை கண்காணித்து வருகிறேன் அவர்களை கூண்டிலேற்றுவேன் என காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன் கர்ஜித்துள்ளார். அவரது செயல்பாடுகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label