OUR CLIENTS
எத்தனை சதவீதம் வாக்களிப்பை உறுதி செய்ய முடியும்? தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
எத்தனை சதவீதம் வாக்களிப்பை உறுதி செய்ய முடியும்? தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி Posted on 26-Mar-2019 எத்தனை சதவீதம் வாக்களிப்பை உறுதி செய்ய முடியும்?  தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி, மார்ச் 26-

வாக்களிப்பு எந்திரம் மூலம் மக்கள் அளிக்கும் வாக்குகளில் குறைந்தபட்சம் 50 சதவீதத்தையாவது வாக்களிப்பு உறுதி செய்யும் எந்திரங்களின் மூலம் உறுதி செய்ய வேண்டும் என்று கோரி 21 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உச்சநீதிமன்றத்தின் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்தல் கமிஷன் மக்கள் அளிக்கும் வாக்குகளில் உயர்ந்தபட்ச அளவுக்கு வாக்களிப்பு உறுதி எந்திரங்கள் (VVPT) மூலமாக உறுதி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் விரும்புவதாக தெரிவித்தனர்.

இதன் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் நிலை என்ன? எத்தனை சதவீத வாக்குகளை தேர்தல் ஆணையம் வாக்களிப்பு உறுதி செய்யும் இயந்திரம் மூலம் உறுதி செய்ய இயலும் என்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படி தலைமை நீதிபதி கேட்டுக் கொண்டார்.
வாக்காளர் ஒருவர் வாக்களித்ததும் அந்த வாக்கு எந்திரத்தில், வாக்களிப்பு உறுதி எந்திரம் இணைக்கப்பட்டிருந்தால் அதன் மேற்பகுதியில் உள்ள ஒரு சிறு கண்ணாடியில் யாருக்கு வாக்கு அளிக்கப்பட்டது, எந்த கட்சி? அக்கட்சியின் சின்னம் என்ன? ஆகிய விவரங்கள் தோன்றும். 7 வினாடிகள் அதை வாக்களித்தவர் பார்க்க முடியும். 7 வினாடிகள் முடிந்ததும் வாக்காளர் கண்ணுக்கு தோன்றிய அந்தப் பகுதி துண்டிக்கப்பட்டு சீலிடப்பட்ட ஒரு பெட்டிக்குள் விழுந்துவிடும். இதன் மூலம் வாக்களித்தவர் தான் வாக்களித்த கட்சிக்கு அல்லது வேட்பாளருக்கு தனது வாக்குபோய் சேர்ந்து விட்டதா என்பதை உடனுக்குடன் உறுதி செய்யலாம்.
அது மட்டும் அல்ல அவர் வாக்களிப்பதற்கான சான்றாவணமாக துண்டு சீட்டு வரிசைப்படி சீலிடப்பட்ட பெட்டிக்குள் பாதுகாக்கப்படுகிறது. இதனால் வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்வது தடுக்கப்படும் என அரசியல் கட்சிகள் கருதுகின்றன.
தற்பொழுது ஒரு தொகுதிக்கு ஒரு வாக்குச்சாவடியில் பதிவாகும் வாக்குகள் மட்டுமே வாக்களிப்பு உறுதி எந்திரங்கள் மூலம் உறிதி செய்யப்படுகிண்றன.
அதனால் 50 சதவீத வாக்குகளாவது வாக்களிப்பு எந்திரம் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும் என மனு செய்துள்ளனர்.
முன்னதாக அரசியல் கட்சிகளின் சார்பில் 100 சதவீத வாக்குகளும் வாக்களிப்பு எந்திரம் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது ஆனால் தேர்தல் ஆணையம் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை.
30 சதவீத வாக்குகளை வாக்களிப்பு எந்திரம் மூலம் உறுதி செய்வதே பெரிய கடினமான வேலையாக அமையும் என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டது.
இந்த நிலையில் மிக உயர்ந்த பட்ச அளவுக்கு வாக்குகளை உறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கோரிக்கை முன்வைத்ததோடு, தேர்தல் ஆணையம் தன் நிலையை தெளிவுபடுத்த அறிக்கை தாக்கல் செய்யும்படியும் சுப்ரீம் கோர்ட் கோரியுள்ளது. 
கடந்த 2013-ம் ஆண்டு தேர்தல் தொடர்பான தீர்ப்பு ஒன்றில் சுதந்திரமான நேர்மையான தேர்தல்களுக்கு வாக்களிப்பு உறுதி செய்யும் எந்திரங்கள் மிகவும் அவசியமானவை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத் தகுந்தது.

Label