OUR CLIENTS
நயன்தாரா குறித்த பேச்சுக்கு ராதாரவி வருத்தம்-திமுகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
நயன்தாரா குறித்த பேச்சுக்கு ராதாரவி வருத்தம்-திமுகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு Posted on 26-Mar-2019 நயன்தாரா குறித்த பேச்சுக்கு ராதாரவி வருத்தம்-திமுகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

சென்னை, மார்ச் 26-

நயன்தாரா குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ள நடிகர் ராதாரவி, என்னால் திமுகவுக்கு பாதிப்பு என்றால் கட்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

கொலையுதிர் காலம் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு பேசுகையில், படத்தின் நாயகி நயன்தாராவை பற்றி பேசினார்.
நயன்தாரா நல்ல நடிகைதான். நயன்தாராவை பற்றி வராத செய்தி எல்லாம் இல்லை. அதையும் தாண்டி திரையுலகில் நிலையாக நிற்கிறார். தமிழ்நாட்டு மக்கள் எல்லாத்தையும் 4 நாளில் மறந்துவிடுவார்கள். அதனால் அதை எல்லாம் தாண்டி நடித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. 
நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதாவாகவும் நடிக்கிறார். தற்போது எல்லாம் யார் வேண்டுமானாலும் சாமி வேஷம் போடலாம். ஏன் என்றால் பார்த்த உடனேயே கும்பிடத் தோன்றுபவரையும் போடலாம். பார்த்த உடனேயே கூப்பிடத் தோன்றுபவரையும் போடலாம்.
நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வருவது இல்லை. இந்நிலையில் படத்தை துவங்கும் போதே விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வர வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்க வேண்டும் என்றார் ராதாரவி. 
கொலையுதிர் காலம் பட விழாவில் கலந்து கொண்டு படத்தை பற்றி ராதாரவி பேசியதை விட மற்றவர்களை அசிங்கப்படுத்தியது தான் அதிகம்.
திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம்
தி.மு.கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வருவதாலும் திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நடிகர் ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்க பதிவில் திரைத்துறை பெண் கலைஞர்கள் குறித்த நடிகர் ராதாரவி கூறியிருக்கும் கருத்து ஏற்க இயலாது என்றும் ராதாரவியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள கண்டன பதிவில்,
பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவியின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ராதாரவி பதில்
நடிகர் ராதாரவி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கொலையுதிர் காலம் பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நான் பேசியது உங்கள் மனதை புன்படுத்தி இருந்தால் அதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நான் பேசிய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு ராதாரவி விளக்கம் அளித்துள்ளார்
மேலும் என்னால் திமுகவுக்கு பாதிப்பு என்றால் கட்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன் என ராதாரவி தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்
நடிகை நயன்தாராவை விமர்சித்து பேசிய நடிகர் ராதாரவிக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இன்று கண்டனம் தெரிவித்துள்ளது.
நடிகர் ராதாரவி தொடர்ந்து இதுபோல் தொடர்ந்து பேசிவந்தால்,  தொழில்தொடர்பான ஒத்துழைப்பு வழங்குவதை மறுபரிசீலனை செய்யப்படும் என தென்னிந்திய நடிகர் சங்கம் கடுமையாக எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

Label