OUR CLIENTS
மாதத்துக்கு ரூ.6,000 வருமானம் ராகுலின் அறிவிப்பு சாத்தியமா?
மாதத்துக்கு ரூ.6,000 வருமானம் ராகுலின் அறிவிப்பு சாத்தியமா? Posted on 27-Mar-2019 மாதத்துக்கு ரூ.6,000 வருமானம் ராகுலின் அறிவிப்பு சாத்தியமா?

சென்னை, மார்ச் 27-

காங்கிரஸ் அறிவித்துள்ள ஏழைகளுக்கான குறைந்தபட்ச மாதாந்திர வருவாய் திட்டம் எப்படி செயல்படுத்தப்படும் என்பது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.

லோக்சபா தேர்தல் களைகட்டியுள்ளது. அதிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட, ஒரு அறிவிப்பு பெரும் புயலையே உருவாக்கியுள்ளது.  காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஏழை குடும்பங்களுக்கு மாதம் தலா ரூ.6000 குறைந்தபட்ச வருமானம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி. ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 நிதி வழங்கும் ராகுல் காந்தியின் திட்டத்தை அமல்படுத்தவே முடியாது என ‘நிதி ஆயோக்‘ துணைத்தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.6,000 என்ற வகையில் ஆண்டுக்கு ரூ.72,000 அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதிரடியாக அறிவித்துள்ளார்.  சிறு, குறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.500 வீதம் ஆண்டுக்கு 6,000 நிதியுதவி வழங்கப்படும் என்ற பாஜகவின் திட்டத்தை விட, ராகுலின் இந்த வாக்குறுதி அதிரடி அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மத்திய அரசின் ‘நிதி ஆயோக்‘ அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி பணி மனப்பான்மைக்கு எதிராக அமைவதுடன், நிதி ஒழுங்குமுறையை சிதற செய்துவிடும் என்றும், இத்திட்டத்தை செயல்படுத்த எங்கிருந்து நிதி வரும் எனவும் கேள்வி எழுப்பினார். இந்த திட்டம் பொருளாதார வல்லுநர் அமர்தியா சென் வகுத்த, ஏழ்மைக்கான வரையறை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. உதாரணத்திற்கு, ஒரு குடும்பத்தின், மாத வருமானம் ரூ.4000 அல்லது ரூ.8000 என்று வைத்துக்கொள்வோம். மாதம் ரூ.12 ஆயிரம் என்பது குறைந்தபட்ச வருமான இலக்கு என்பதால் முறையே, ரூ.8000 அல்லது ரூ.4000 மாத உதவித் தொகையாக வழங்கப்படும் என்று விளக்கம் அளித்தார் காங்கிரஸ் தலைவர் ஒருவர். பயனாளிகளை கண்டறிவதுதான் மிகப்பெரிய வேலையாகும். இதற்கு என்எஸ்எஸ்ஓ மற்றும் சிஎஸ்ஓ உதவியை நாட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் பதில் அளிக்கையில், 10-15 தொழிற்சாலைகளுக்காக ரூ.3,16,000 கோடியை பாஜக அரசு தள்ளுபடி செய்யும்போது, காங்கிரசால் ஏன் முடியாது என்று பதில் கேள்வி எழுப்புகிறார்கள்.
இந்திய புள்ளியியல் நிறுவனத்தின், பொருளாதார நிபுணர் குர்பசன் சிங், கூறுகையில், 2019-20ம் ஆண்டு விலைவாசிப்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவீதம் அளவுக்கு அரசு வழங்கப்போகும் (ஒருவேளை காங்., அரசு அமைந்து திட்டத்தை செயல்படுத்தினால்), நிதி அளவு இருக்கும் என்கிறார். இந்த திட்டத்தை செயல்படுத்துவது, மிகப்பெரிய விஷயம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்பதை இந்த புள்ளி விவரம் உணர்த்துகிறது.
ரங்கராஜன் குழு கணக்கெடுப்புபடி இந்திய மக்கள் தொகையில் 29.5 சதீவீதம் அதாவது 269 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ளனர். கிராமங்களில் மாதம் ரூ.5000த்திற்கும் குறைவாக வருவாய் ஈட்டுவோரும், நகர்ப்புறங்களில் மாதம் ரூ.7,050 வருமானம் ஈட்டுவோரும் வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ளோர் என வரையறுக் கப்பட்டுள்ளது. எனவே, ரூ.6000 அரசு வழங்கினால், குறைந்தபட்சமாக இவர்கள் மாதம் ரூ.12 ஆயிரம் என்ற அளவுக்கு மேல் வருவாய் ஈட்டும் பிரிவினராக மாற அதிக வாய்ப்பு உண்டு. ஆனால் இதையெல்லாம் தாண்டி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மாதம் ரூ.6000 என்பது சாத்தியமற்றது. இதனால் பணி மனப்பான்மைக்கு எதிராகத்தான் மக்களின் போக்கு மாறும். அதுமட்டுமின்றி இலவசங்களே மக்களின் மனபான்மையை மாற்றியமைத்துள்ளது. இந்நிலையில் இந்த அறிவிப்பு சாத்தியமற்றும் என்றும், மக்களின் மனம் இதற்கு அடிபணியாது. இதைவிட அடிப்படை வசதி கல்வி, மருத்துவம் நாட்டின் மற்றும் கிராமப்புற வளர்ச்சி முறையாக அறிவித்திருக்கலாம். பல அறிவிப்புகள் இன்று அறிவிப்புகளாகவே உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை கூறி வாக்கு கேட்பதுதான் இன்றைய அரசியல். அதைவிட ஆட்சியில் இருக்கும்போது செய்தவற்றை கூறி வாக்கு சேகரிக்க கட்சிகளே இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் பலமான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். அதனால்  தேர்தல் அறிக்கை என்றும் மாறாது தேர்தல் அறிக்கையாகவே இருக்கும். இலவச பொருட்களை தாண்டி மாதம் ரூ.6000  என்பது பொருளாதாரத்திற்கும், பணி மனப்பான்மைக்கும் எதிரானதாகவே அமையும். உலகிலேயே இந்த திட்டம் போன்று வேறு எந்த திட்டமும் இல்லை. இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் வறுமையை ஒழிப்போம் என்கின்றார் காங்., தலைவர் ராகுல் காந்தி. வறுமை ஒழிகிறதோ இல்லையோ... குடிமகன்கள் பெருகுவார்கள், வேலை தேடுவது போய் வேலைக்கு ஆட்கள் தேடும் நிலைமை தலைவிரித்தாடும் என்கின்றனர் ஒருசாரர். எதுஎப்படியோ  மீன் கொடுப்பதைவிட மீன் பிடிப்பதை கற்றுக்கொடுக்கலாமே என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். முதியோர் உதவித்தொகையே கொடுக்க முடியாமல் தமிழகத்தில் மாநில அரசு திணறுகிறது. ஆனால் மாதம் ரூ.6 ஆயிரம் என்பது சாத்தியப்படுமா?. வாக்காளர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். இதுபோன்ற சாத்தியப்படாத, நடக்காத வாக்குறுதிகளை கூறி ஓட்டுக்களை வாங்கிக் கொண்டு வெற்றி பெற்றுவிடலாம் என்று தப்புக்கணக்கு போட்டுள்ளனர் என்று எண்ணத் தோன்றுகிறது. தேர்தல் வாக்குறுதி என்பது நடக்காத ஒன்றை கூறி ஓட்டுக்களை பெற்றுவிடலாம் என்பதே அவர்களது எண்ணம் என்பது வெட்டவெளிச்சத்துக்கு வந்துள்ளது. வாக்காளர்களே விழிப்புடன் இருங்கள், செயல்படுங்கள்.

Label