ஜெ., ஆதரவு பெண் ஓட்டு குறி வைக்கிறார் ஸ்டாலின்! Posted on 27-Mar-2019
வேலூர், மார்ச் 27-
அ.தி.மு.க., தொண்டர்கள் மற்றும் பெண்களின் ஓட்டுகளை பெறவே தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தன் பிரசாரத்தில் ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின் முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க., செயல்படுகிறது. லோக்சபா மற்றும் 18 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் ஏப்ரல் 18ல் நடக்கிறது. அதில் போட்டியிடும் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். அவர் தன் பிரசாரத்தில் பேசியதாவது: ஜெயலலிதாவுடன் நமக்கு கொள்கை, கருத்து வேறுபாடு இருக்கலாம்.
ஆனால் இறந்தது என்ன சாதாரண நபரா. இந்த மாநிலத்தின் முதல்வர். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் திட்டங்கள் தீட்டுவது, மக்கள் பணி ஆற்றுவது போன்ற பணிகள் ஒருபுறம் இருந்தாலும் முதல் வேலையாக ஒன்று உள்ளது.
அது என்னவெனில் ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்கு சொல்வோம். குற்றவாளிகளை சிறைக்கு அனுப்புவோம். பன்னீர்செல்வமும், பழனிசாமியும் அ.தி.மு. க.,வை அமித்ஷாவிடம் அடகு வைத்து விட்டனர். இவ்வாறுஅவர் பேசி வருகிறார்.
கட்சியில் சாதாரண தொண்டர்களுக்கும் மேயர், எம்.எல்.ஏ., - எம்.பி., அமைச்சர் போன்ற பதவிகளை கொடுத்தவர் ஜெயலலிதா. இதனால் அ.தி.மு.க., தொண்டர்கள் அவர் மீது அதிக பற்று வைத்து இருந்தனர். அவரின் ஆளுமை திறன் பெண்களை கவர்ந்தது.
இதனால் பல பெண்கள் அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க முன்னுரிமை தந்தனர். இதன் விளைவாகவே ஜெ., மீதான அனுதாப ஓட்டுக்கள் மற்றும் பெண்களின் ஓட்டுக்களை தி.மு.க.,வுக்கு திருப்பி விடும் நோக்கில் ஸ்டாலின் தன் பிரசாரத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பேசி வருகிறார்.