OUR CLIENTS
தலைமைச் செயலாளராக கே.சண்முகம் டிஜிபியாக திரிபாதி பதவியேற்பு
தலைமைச் செயலாளராக கே.சண்முகம் டிஜிபியாக திரிபாதி பதவியேற்பு Posted on 01-Jul-2019 தலைமைச் செயலாளராக கே.சண்முகம் டிஜிபியாக திரிபாதி பதவியேற்பு

சென்னை, ஜூலை 1-
தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம், போலீஸ் டிஜிபியாக திரிபாதி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.

தமிழகத்தின் 45-வது தலைமைச் செயலாளராக, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி நியமிக்கப்பட்ட கிரிஜா வைத்தியநாதன் நேற்று பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து தமிழ்நாடு அரசின் 46-வது தலைமைச் செயலாளராக கே. சண்முகம் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அதிகாரிகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  

புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் கே.சண்முகம் 1960-ம் ஆண்டு ஜூலை 7-ம்  தேதி பிறந்தார். சேலம் மாவட்டம், வாழப்பாடி அவரது சொந்த ஊர். வேளாண்மை கல்வியில் எம்.எஸ்சி. பட்டம் பெற்று உள்ளார்.  பின்னர் ஐ.ஏ.எஸ். ஆன அவர் 1985-ம் ஆண்டு ஆகஸ்டு 27-ம்  தேதி தமிழக அரசு பணியில் சேர்ந்தார். சேரன்மகாதேவியில் பயிற்சி உதவி கலெக்டராக பணியை தொடங்கிய இவர் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களின் மாவட்ட கலெக்டர் மற்றும் கூட்டுறவுத்துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து உள்ளார்.   2010-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சி காலத்தில் நிதித்துறை செயலாளராக நியமிக்கப் பட்டார். திறமையான பணியின் காரணமாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் அவர் நிதித்துறை செயலாளராக நீடித்தார். அந்த வகையில் கருணாநிதி, ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி ஆகிய 4 முதலமைச்சர்களிடத்திலும் பணியாற்றி நற்பெயரை ஈட்டியிருப்பவர் அவர். நிதித்துறையில் அவர் பெற்ற அனுபவம் காரணமாக அரசு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் சிறப்பாக செயல்படுபவராக திகழ்ந்தார். நிதி நெருக்கடி காலங்களிலும் நிதிச்சுமையை குறைக்க அரசுக்கு ஆலோசனைகளை வழங்கியவர் கே.சண்முகம்.


தமிழ்நாடு அரசின் 29வது டிஜிபியாக ஜே.கே. திரிபாதி நேற்று மாலை டிஜிபி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு டி.கே.ராஜேந்திரன் பணி ஓய்வு பெற்றார்.  திரிபாதியின் சொந்த மாநிலம் ஒடிசா. டெல்லி ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி பட்டம் பெற்றவர். 1985-ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்வில் தேர்ச்சிபெற்று, தமிழ்நாடு காவல்துறையில் பணிக்குச் சேர்ந்தார். 

9 மாவட்டங்களில் எஸ்.பி-யாக பணியாற்றியவர் திரிபாதி. டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் தற்போது பதவி வகித்து வருகிறார் திரிபாதி. சிறந்த பணிக்காக குடியரசுத்தலைவர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்று உள்ளார். தமிழகத்தில் சமூக காவல் பணி என்ற மக்கள் சேவை பணியை இவர்தான் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். திரிபாதி தென்சென்னை இணை கமிஷனராக பணியாற்றியபோது என்கவுண்ட்டர் முறையில் 16 ரவுடிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். ஜே.கே.திரிபாதி சென்னை அண்ணா நகரில் குடும்பத்தோடு வசிக்கிறார்.  இவரது மனைவி பெயர் அனுஜா திரிபாதி. ஜட்வன் திரிபாதி எனும் மகனும், ஜிகிஷா என்ற மகளும் உள்ளார்கள். மகள் டாக்டர் பட்டமும், மகன் இன்ஜினீயரிங் பட்டமும் பெற்று உள்ளனர்.

Label