OUR CLIENTS
கள்ளக்குறிச்சி தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது தலைவர்கள், நடிகர்கள் வருகை தொடங்கியது!
கள்ளக்குறிச்சி தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது தலைவர்கள், நடிகர்கள் வருகை தொடங்கியது! Posted on 29-Mar-2019 கள்ளக்குறிச்சி தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது  தலைவர்கள், நடிகர்கள் வருகை தொடங்கியது!

விழுப்புரம், மார்ச் 29-

கள்ளக்குறிச்சி லோக்சபா தேர்தலையொட்டி கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்கு கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து படையெடுக்கத் தொடங்கி விட்டதால், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியதுடன் கட்சித் தொண்டர்களும் உற்சாகமடைந்துள்ளனர். 

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் தி.மு.க.,வில் கவுதம சிகாமணி, அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வில் சுதீஷ், அ.ம.மு.க.,வில் முன்னாள் எம்.எல்.ஏ., கோமுகி மணியன் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இதில், ஆளுங்கட்சியான அ.தி.மு.க., ஆதரவுடன் களமிறங்கும் தே.மு.தி.க., சுதீஷ் மற்றும் எதிர்க்கட்சியான தி.மு.க., வேட்பாளரும், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனுமான கவுதம சிகாமணி ஆகியோரை கூட்டணி கட்சியினர் முன்னிலையில் அறிமுகம் செய்து தேர்தல் பிரசார பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அ.தி.மு.க., - தி.மு.க.,வினருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருவதால் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இரு கட்சி வேட்பாளர்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த கையோடு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய சட்டசபை தொகுதிகளிலும், சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி, ஏற்காடு, ஆத்தூர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கும் சென்று முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருவதோடு மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகின்றனர். பிரசாரத்தின் போது, தங்களின் கெத்தைக் காட்டும் வகையில் இரு கட்சியினரும், கூட்டத்தை கூட்டி வருகின்றனர். மற்றொரு பக்கம் வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி முழுவதும் தி.மு.க., வேட்பாளர் கவுதம சிகாமணியை ஆதரித்து ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். இதன் தொடர்ச்சியாக தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து, நேற்றுமுன்தினம் வைகோவும், வரும் ஏப்.,5ம் தேதி தி.மு.க., தலைவர் ஸ்டாலினும் கள்ளக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். பலத்தை நிரூபிக்கும் வகையில் அ.தி.மு.க., வினரும் தலைவர்கள், நடிகர்களை வரவழைத்து தி.மு.க., வினரை தாக்கி பிரசாரம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளனர். அதன் முன்னாட்டமாக கடந்த 27ம் தேதி தே.மு.தி.க., வேட்பாளர் சுதீஷை ஆதரித்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார். இதே போன்று விரைவில் அ.ம.மு.க., வேட்பாளர் கோமுகி மணியனை ஆதரித்து டிடிவி.தினகரன் கள்ளக்குறிச்சியில் பிரசாரம் செய்ய உள்ளார். அ.தி.மு.க., - தி.மு.க., இரு கட்சியினரும் போட்டி போட்டுக்கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்கு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்கு கட்சி தலைவர்கள், நடிகர்கள், அடுத்தடுத்து படையெடுக்க உள்ளதால், கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஒருபுறம் சிறப்பு கவனிப்பும் அரங்கேறி வருகிறது. ஸ்டாலினிடம் போராடி தனது மகனுக்கு சீட்டு வாங்கி வந்துள்ளார் பொன்முடி. வெற்றி பெற்றாக வேண்டும் என்ற ரீதியில் களம் இறங்கியுள்ளார். இளம்வேட்பாளரான கவுதம சிகாமணி களம் இறங்கியுள்ளார். தந்தையின் செல்வாக்கு மட்டுமே கவுதம சிகாமணிக்கு கை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பலகோடி செலவு செய்து வெற்றிக்கனியை பறித்து விட துடியாய் துடிக்கிறார் பொன்முடி. இதில் ஏதாவது எசக்கு பிசக்காக நடந்து விட்டால் ஸ்டாலினை நெருங்க முடியாது மற்றும் மாவட்ட செயலாளர் பதவியை துறக்க வேண்டிய பரிதாப நிலை பொன்முடிக்கு ஏற்படுவது உறுதியாகி விட்டது. தனது மகன் பம்பரமாக சுழல்கிறாரோ இல்லையோ, பொன்முடி சுழல்கிறார். 'ப' வைட்டமினை வாக்காளர்களுக்கு தாராளமாக கொடுத்து வெற்றி வாகை சூட முடிவு செய்துவிட்டனர் சில வேட்பாளர்கள். இந்நிலையில் தேர்தல் முடிவு திமுகவுக்கு சாதகமாக அமையுமா? பாதகமாக அமையுமா? என்பது வாக்காளர்கள் கையில்தான் உள்ளது. 

Label