OUR CLIENTS
ஆணவக் கொலைக்கு தனிச் சட்டம் இயற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும்
ஆணவக் கொலைக்கு தனிச் சட்டம் இயற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் Posted on 01-Jul-2019 ஆணவக் கொலைக்கு தனிச் சட்டம் இயற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும்


கோயம்புத்தூர், ஜூலை 1-

ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர், மேட்டுப்பாளையத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த இளம்பெண் கொலை செய்யப்பட்டார். அந்தப் பெண்ணின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் எல்.முருகன் கோவைக்கு சனிக்கிழமை வந்திருந்தார். முன்னதாக இதுதொடர்பாக கோவை அரசு விருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளருடன் ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

 மேட்டுப்பாளையம் ஆணவக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரும் கைது செய்யப்படுவார்கள். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ஆணையம் சார்பில் வழங்கப்படும் ரூ.8 லட்சத்து 25 ஆயிரத்தில், 50 சதவீத தொகையான ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 500-க்கான காசோலை முதல்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது.

 அவர்களின் அரசு வேலை, பசுமை வீடு போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய அனைத்து சலுகைகளும் அவரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும். தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் இடங்களில் சம்பந்தப்பட்ட இருதரப்பு மக்களையும் சேர்த்து சமூக நல்லிணக்க நிகழ்ச்சி நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் இரு சமுதாயத்தினருக்கிடையே மோதல்கள் குறையும். ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஆணையம் பரிசீலனை செய்யும். இதுபோன்ற வழக்குகளை ஆணையம் விசாரித்து உடனடி தீர்வு கிடைக்க வழிவகை செய்து வருகிறது. ஜாதி மறுப்பு, மறுமணம் செய்தவர்களுக்கு வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டில் 2 சதவீதம் வழங்கப்படுகிறது.

 இதனை 10 சதவீதமாக உயர்த்த மத்திய அரசுக்கு ஆணையம் பரிந்துரை செய்யும். மக்கள் தொகை அதிகமாக இருக்கும் உத்தரப் பிரதேசத்தைவிட கேரளம், மேற்கு வங்கம், கர்நாடக மாநிலங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வன்கொடுமை அதிகமாக உள்ளது என்றார்.

 

Label