OUR CLIENTS
சென்னையில் 150க்கும் மேற்பட்டஇடங்களில் வாகன சோதனை
சென்னையில் 150க்கும் மேற்பட்டஇடங்களில் வாகன சோதனை Posted on 01-Jul-2019 சென்னையில் 150க்கும் மேற்பட்டஇடங்களில் வாகன சோதனை


சென்னை, ஜூலை 1-

உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து சென்னை முழுவதும் தலைக்கவசம் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் மீது தீவிரமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

சாலை விபத்துகளின் போது தலைக்கவசம் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாகி வருவதாக கவலை தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும் தலைக்கவசம் அணிவதை உறுதி படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டது.

மேலும் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை, தமிழக அரசு முறையாக அமல்படுத்தவில்லை எனவும் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

இதையடுத்து கடந்த இரு நாட்களாக சென்னை முழுவதும் 150க்கும் மேற்பட்ட இடங்களில், போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதில் தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகள், மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். ஒரே நாளில் மட்டும் தலைக்கவசம் அணியாமல் சென்றதற்காக 20 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 20 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப் பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த 2 ஆண்டுகளில் ஏற்பட்ட விபத்துகள் மற்றும் அதில் பலியானவர்கள் குறித்த விவரங்களையும் வெளியிட்டுள்ளனர்.

அதன் படி 2017ம் ஆண்டில் விபத்துகள் தொடர்பாக 7 ஆயிரத்து 517 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், விபத்துகளில் சிக்கி ஆயிரத்து 347 பேர் பலியாகியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதே போல் கடந்த 2018ம் ஆண்டில் விபத்து தொடர்பாக 7 ஆயிரத்து 794 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்ப தாகவும், பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 297 ஆக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் 2018ம் ஆண்டில் சாலை விபத்துகளில் பலியான 792 இருசக்கர வாகன ஓட்டிகளில், 769 பேர் தலைக்கவசம் அணியாததால் பலியானவர் என்றும் அதிர்ச்சி தகவலை வெளியிடப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டில் மட்டும் தலைக்கவசம் அணியாமல் பயணித்ததற்காக 24.5 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் 27 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

Label