OUR CLIENTS
இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு: இந்திய குடியரசுத்தலைவர், பிரதமர் கடும் கண்டனம்
இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு: இந்திய குடியரசுத்தலைவர், பிரதமர் கடும் கண்டனம் Posted on 21-Apr-2019 இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு: இந்திய குடியரசுத்தலைவர், பிரதமர்  கடும் கண்டனம்

புதுடெல்லி, ஏப்.21-

இலங்கையில் இன்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் உள்ள கிறிஸ்தவ மக்கள், தேவாலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அங்கு பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

3 தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர ஓட்டல்களை குறி வைத்த நடத்தப்பட்ட பயங்கர குண்டுவெடிப்புகளில் 160 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தற்கொலைப்படை தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என தெரிகிறது. எனினும் இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இதற்கு பொறுப்பேற்கவில்லை.

இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காலையிலிருந்து 6 குண்டுகள் வெடித்த நிலையில், மதியம் 2:00 மணியளவில் 7வது குண்டும், மதியம் 2:50 மணியளவில் 8வது குண்டும் வெடித்துள்ளது.

தொடர் குண்டுவெடிப்பால் இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கருதியும், வதந்தியை தடுக்கவும் வாட்ஸ்அப், பேஸ்புக், வைபர் ஆகிய இணையதளங்கள் இலங்கையில் முடக்கப்பட்டுள்ளன.

குடியரசு தலைவர் கண்டனம்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில்,

”இலங்கையில் நடந்துள்ள தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. அந்நாட்டு மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அப்பாவி மக்களை குறிவைத்து நடத்தப்படும் இதுபோன்ற முட்டாள்தனமாக வன்முறை சம்பவங்கள் நாகரீகமான இந்த சமுதாயத்தில் நடைபெறக்கூடாது. இந்த நேரத்தில் இலங்கைக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில்,

”இலங்கையில் நடந்த இந்த கொடூரமான குண்டுவெடிப்பி தாக்குதல்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு நமது பிராந்தியத்தில் இடமில்லை. துயரமான இந்த வேளையில் இலங்கை மக்களுடன் இந்தியா துணையாக நிற்கும். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’’ என பதிவிட்டுள்ளார்.

Label