OUR CLIENTS
இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு...!- தேவாலயங்கள், 5 ஸ்டார் ஓட்டல்கள் குறிவைத்து தாக்குதல்
இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு...!- தேவாலயங்கள், 5 ஸ்டார் ஓட்டல்கள் குறிவைத்து தாக்குதல் Posted on 21-Apr-2019 இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு...!- தேவாலயங்கள், 5 ஸ்டார் ஓட்டல்கள் குறிவைத்து தாக்குதல்

 கொழும்பு, ஏப்.21-
இலங்கை தலைநகர் கொழும்புவில் தொடர் பயங்கர  குண்டுவெடிப்பு.  தேவாலயங்களையும் நட்சத்திர ஓட்டல்களையும் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன. இன்று  நிழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பில் சுமார் 200க்கும் மேற்ப்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  
இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் ஆலயங்களில் திரண்டு இருந்தனர்.  இன்று  காலை 8.45 மணி அளவில் கொழும்பில் உள்ள 3 தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.
கொச்சிக்கடை அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் உள்ள கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியில் உள்ள தேவாலயம் ஆகிய இடங்களில் பிரார்த்தனை நடைபெற்று கொண்டு இருக்கும்போது திடீரென சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன.

குண்டு வெடித்ததும் 3 தேவாலயங்களில் பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். அங்கு ஒரே அலறல் சத்தம் கேட்டது. பொதுமக்கள் நாலாபுறம் சிதறி ஓடினார்கள். இதேபோல கொழும்பில் உள்ள ஷாங்ரிலா, சினமான் கிராண்ட், கிங்ஸ்பரி ஆகிய நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டு வெடித்தது. இதனால் அங்கிருந்தவர்களும் தூக்கி வீசப்பட்டனர்.  குண்டு வெடிப்பு நடந்த இடங்களில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
6 இடங்களில் குண்டுவெடிப்பு
3 தேவாலயம், 3 நட்சத்திர ஓட்டல்கள் ஆகிய 6 இடங்களில் அடுத்தடுத்த நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களால் இலங்கை முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


7வது குண்டுவெடிப்பு
இதனை தொடர்ந்து கொழும்புவில் உள்ள தெஹிவளை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில்  இன்று  பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் ஏழாவதாக நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது. 
8வது குண்டுவெடிப்பு
அடுத்த சில நிமிடங்களில் தெம்மட்டகொடா என்ற இடத்தில் மஹவிலா உதயனா சாலையில் உள்ள ஒரு பகுதியில் எட்டாவதாக ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.   இன்று  நடந்த 8 குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 207 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 500 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.இதனால் உயிர்ப்பலி அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.
காயம் அடைந்த 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நட்சத்திர ஓட்டல்களில் சுற்றுலா பயணிகள் தங்கியிருந்தனர். இதனால் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்பட்டது. 
27 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன் மேலும் 5 வெளிநாட்டவர்களை காணவில்லை. வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். குண்டு வெடிப்புச் சம்பவங்களில் காயமடைந்த வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை குறித்து வெளிவிவகார அமைச்சு தகவல்களை வெளியிடவில்லை. 
பிரார்த்தனையில் குழந்தைகளும் ஏராளமாக பங்கேற்று இருந்தனர். இதனால் குண்டு வெடிப்பில் பல குழந்தைகளும் உயிரிழந்து இருக்கலாம். மட்டக்களப்பு பகுதி தமிழர்கள் அதிகம் நிறைந்த இடமாகும். இதனால் ஏரராளமான தமிழர்கள் உயிரிழந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களால் கொழும்பில் பதட்டம் நிலவுகிறது. நகரின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் யார் என்று தெரியவில்லை. அங்குள்ள தீவிரவாதிகள் இந்த நாசவேலையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 
ஊரடங்கு உத்தரவு
இந்நிலையில், இன்று மாலை 6 மணியில் இருந்து நாளை காலை 6 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக இலங்கை அதிபர் மாளிகை அறிவித்துள்ளது.  நாளையும், நாளை மறுநாளும் (ஏப்ரல் 22, 23) அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
சமூகவலைத்தளங்கள் முடக்கம் 
இந்நிலையில், குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பான தவறான செய்திகளும், வதந்திகளும் பரவாமல் தடுக்கவும், பாதுகாப்பு கருதியும், வாட்ஸ்அப், டுவிட்டர், பேஸ்புக், வைபர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை அரசு முடக்கியது.
கொழும்பில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்டவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, கொழும்பு ஷங்ரி-லா நட்சத்திர விடுதியில் zahran hashim  என்ற நபரே தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணையையும் அந்நாட்டு பாதுகாப்பு முகமைகள் மேற்கொள்கிறது. இந்நிலையில் குண்டு வெடிப்புகள் சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் விஜயவர்தன் தெரிவித்துள்ளார்.    
குண்டு வெடிப்புகள் இடம்பெற்ற இடங்கள்
இந்நிலையில் இலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்ற இடங்களை பட்டியலிடப்பட்டுள்ளது.
இது வரையில் 9 வெடிப்புச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதுடன் அவற்றில் இரண்டு வெடிப்புச் சம்பவங்கள் ஒரே இடத்தில் இடம்பெற்றுள்ளன.
1.கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம்; 2. நீர்கொழும்பு, கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயம்; 3. மட்டக்களப்பு, சியோன் தேவாலயம்; 4. கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டல்; 5. கொழும்பு, சங்கரில்ல ஹோட்டல்; 6. கொழும்பு, சினமன் கிராண்ட்; 
7. கொழும்பு, தெஹி வளை ட்ரொபிகல் இன்; 
8. கொழும்பு, தெமட்ட கொடை மகவிலபூங்கா-1; 
9. கொழும்பு, தெமட்ட கொடை மகவிலபூங்கா-2  
இதுவரை எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பொறுப்பு ஏற்கவில்லை.

Label