OUR CLIENTS
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இயங்கும் இரவு கடைகளை மூட காவல் துறையினர் உத்தரவு!
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இயங்கும் இரவு கடைகளை மூட காவல் துறையினர் உத்தரவு! Posted on 02-Jul-2019 வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இயங்கும் இரவு கடைகளை மூட காவல் துறையினர் உத்தரவு!


வேலூர், ஜூலை 2-
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இயங்கும் இரவு கடைகளை மூட காவல் துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால் கடைக்காரர்களும், பொதுமக்களும் கடும் பாதிப்புக்கு மீண்டும் ஆளாகியுள்ளனர்.

வேலூர் வேகமமாக வளர்ந்து வரும் மாநகரமாகும். இந்நிலையில் இரவு பகல் என்று 24 மணி நேரமும் புதிய பேருந்து நிலையம் சுறுசுறுப்பாக காணப்படும். இந்நிலையில் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் கடைகள் இயங்கி வந்தன. இடையில் 11 மணிக்கு கடைகளை அடைத்து விட வேண்டும் என்று காவல் துறையினர் எழுதப்படாத சட்டத்தை கொண்டு வந்தனர். இந்நிலையில் வேலூர் வடக்கு போலீசார் என்ன காரணம் என்று சொல்லாமல் கடைக்காரர்களையும், பொதுமக்களையும் வாட்டி வதைத்தனர். இதற்கிடையே கடைக்கு மட்டும் மாமூல் வசூல் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர் வடக்கு காவல் நிலைய போலீசார். வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் கடைக்கு தலா ரூ. 500 மாமூல் வாங்கி கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு பிறகு நள்ளிரவு 12 மணிக்கு புதிய பேருந்து நிலையத்துக்குள் வரும் நெடுஞ்சாலை ரோந்து பணி போலீசார் (ஹைவே பேட்ரால்) கடைக்கு தலா ரூ.200 வசூலிப்பதாக கடைக்காரர்கள் கூறுகின்றனர். இதனால் இரவு விளக்குகளை அணைத்து விட்டு இருட்டில் கடையை நடத்திக் கொண்டிருந்தனர். இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் இரவு மட்டுமின்றி 24 மணி நேரமும் கடையை நடத்திக் கொள்ள அனுமதி அளித்தார். அந்த உத்தரவு கிடைக்கப் பெற்றதில் இருந்து வேலூரில் புதிய பேருந்து நிலையம் சுறுசுறுப்பாக காணப்பட்டது. வேலூருக்கு வெளியூர்களில் இருந்து வருபவர்கள் வயிறாற இரவு உணவை சாப்பிட்டு விட்டு சென்றனர். 

இந்நிலையில் வேலூர் வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன் என்பவர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஏ டூ இசர்ட் என்ற உணவகத்துக்கு சென்று கடையை மூட வேண்டும் என்று இரவு 11 மணிக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த கடைக்காரர் ஐயா இப்போதுதான் 24 மணி நேரமும் கடை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதே என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த உதவி ஆய்வாளர் இரவு 11 மணிக்கு மேல் கடை நடத்த உனக்கு தகுதியில்லை என்று சொல்லியுள்ளார். மல்டி பிளக்ஸ் காம்ப்ளக்ஸில் கடை நடத்த வேண்டும். 10 பேர் ஊழியர்கள் இருக்க வேண்டும். அவர்களுக்கு பி.எஃப்., பிடிக்க வேண்டும். இதற்கெல்லாம் உனக்கு தகுதியுள்ளதா? அப்படித்தான் நீ கடை நடத்துகிறாயா? என்று சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார். அத்துடன் எனக்கே சட்டம் சொல்லித் தருகிறாயா நீ?  என்று சொல்லிக் கொண்டே ஆயுதப்படை போலீசாரை அழைத்து அந்த கடையில் இருந்த 2 காஸ் சிலிண்டர்களை தூக்கிச் சென்றுவிட்டார். அந்த காஸ் சிலிண்டர்கள் ஃபுல் லோடு என்று கடைக்காரர் கூறி கதறுகிறார். இப்படி ஏழைகள் வயிற்றில் அடித்து பிழைப்பதுதான் காவல் துறையினரின் வேலையா?. எளியோரிடம் வீரம் காட்டும் காவல் துறை நண்பர்கள் ஏன் வலியோரிடம் காண்பிப்பது இல்லை. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு  அமல்படுத்தியதில் இருந்து ஒரு வாரம் செயல்பட்ட கடைகள் மறுபடி 11 மணிக்கெல்லாம் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையால் மாநகராட்சி கடைகளை ஏலம் எடுத்தவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மாதம் ஒன்றுக்கு இந்த கடைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வாடகையாக  செலுத்த வேண்டியுள்ளது என்று கடைக்காரர்கள் கூறி புலம்புகின்றனர். காவல் துறையினரை பார்த்து பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களை பார்த்தாலே வந்துவிட்டான்கடா என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமாக மாறியுள்ளது வேலூர் மாநகரில் என்று சொன்னால் அது மிகையாகாது. 

இதனால் வெளியூர் சென்று வேலூர் திரும்புவர்கள் வழக்கம்போல இரவு உணவின்றி அல்லாட வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பக்கத்து மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை போன்ற ஊர்களில் செயல்படும் பேருந்து நிலையங்களில் இரவு நேர கடைகள் தொடர்ந்து இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வேலூருக்கு மட்டும் என்ன புதிய சட்டம் ஏதாவது போடப்ட்டுள்ளதா என்பதே புரியாத புதிராக உள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள்  காவல் துறையில் பணியாற்றுகின்றனரா? கலெக்ஷன் துறையில் பணியாற்றுகின்றனரா? என்ற சந்தேகம் பொதுமக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. தற்போது திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தில் இருந்து மீண்டும் வந்துள்ள வேலூர் வடக்கு காவல் ஆய்வாளர் நாகராஜன் இந்த நிலைமையை மாற்றியமைப்பாரா? அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் புதிய பேருந்து நிலைய விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு இரவு கடைகளை இயக்க அனுமதி வழங்குவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Label