OUR CLIENTS
ஆவடியில் இப்ப விழுமோ எப்ப விழுமோ அபாய நிலையில் உள்ள வணிக வளாகம்!
ஆவடியில் இப்ப விழுமோ எப்ப விழுமோ அபாய நிலையில் உள்ள வணிக வளாகம்! Posted on 02-Jul-2019 ஆவடியில் இப்ப விழுமோ எப்ப விழுமோ  அபாய நிலையில் உள்ள வணிக வளாகம்!


திருவள்ளூர், ஜூலை 2-
ஆவடி ரயில்வே ஸ்டேஷன் சாலையில் கட்டப்பட்ட வணிக வளாகம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதை சீரமைக்கவோ அல்லது இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டவோ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

ஆவடி ரயில்வே ஸ்டேஷன் சாலையில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான வணிக வளாகம் மற்றும் தங்கும் விடுதி உள்ளது. இதில், தரை தளத்தில் 6 கடைகளும், முதல் தளத்தில் 6 தங்கும் விடுதிகளும் உள்ளன. இதனை அப் போதைய ஆவடி நகராட்சி நிர்வாகம் ஏலத்திற்கு விட்டு பயன்படுத்தி வந்தனர். மாதந்தோறும் கடை மற்றும் தங்கும் விடுதிக்கு ரூ.1200 வாடகை வசூலிக்கப் பட்டது. இந் நிலையில், அப் போதைய நகராட்சி நிர்வாகம் இந்த கட்டடத்தை முறையாக பராமரிக்கவில்லை. இதனால், கட்டட சுவர் மற்றும் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.இதனால், மழைக் காலங்களில்  கட்டடத்துக்குள் தண்ணீர் ஒழுகி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து படிப்படியாக ஒவ்வொரு கடைகளும் இழுத்து மூடப்பட்டன. தங்கும் விடுதிகளில் இருந்தவர்கள் அறையை காலி செய்து சென்றுவிட்டனர். இதன் காரணமாக வணிக வளாகம் மற்றும் தங்கும் விடுதி கட்டடம் முழுவதும் பாழடைந்து 6 ஆண்டுக்கு மேல் மூடிக்கிடக்கிறது. மேலும், இந்த கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. 

இந்த கட்டடத்தை சுற்றி ஆவடி தாலுகா அலுவலகம், முருகன் கோயில், ரயில் நிலையம், வணிக வளாகம் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. மேற்கண்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள், பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் அனைவரும் ரயில்வே ஸ்டேஷன் சாலை வழியாக  பாழடைந்த வணிக வளாகம்,  தங்கும் விடுதி கட்டடத்தை கடந்து செல்ல வேண்டும். அப்படி செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே, இந்த ஆபத்தான வணிக வளாக கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பலமுறை நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, ஆவடி மாநகராட்சி நிர்வாகம், பாழடைந்து இடியும் நிலையில் உள்ள வணிக வளாகம் மற்றும் தங்கும் விடுதியை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டி ஏலம் விட்டு வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பாழடைந்த வணிக வளாக கட்டடத்தில் இரவு நேரங்களில்  மது அருந்துவது, கஞ்சா புகைப்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அந்த வழியாக இரவு நேரங்களில்  பொதுமக்கள்,  ரயில் பயணிகள் செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர்.

 மேலும், பயன்படாத அந்த  கட்டடத்தின் உட்பகுதி மற்றும் வெளிப்பகுதியில் அக்கம் பக்கத்தினர்  குப்பைகள், மாமிச கழிவுகளை கொட்டுகின்றனர்.  இதன் காரணமாக,  துர்நாற்றம்  வீசுகிறது. பாழடைந்த கட்டடம் வழியே நடந்து செல்லும் பொதுமக்கள் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்துடன் செல்கின்றனர்.

Label