OUR CLIENTS
வேலூர் அடுத்த ஆற்காட்டான்குடிசையில் அழிவின் விளிம்பில் மூலிகைப்பண்ணை!
வேலூர் அடுத்த ஆற்காட்டான்குடிசையில் அழிவின் விளிம்பில் மூலிகைப்பண்ணை! Posted on 02-Jul-2019 வேலூர் அடுத்த ஆற்காட்டான்குடிசையில்  அழிவின் விளிம்பில் மூலிகைப்பண்ணை!


வேலூர், ஜூலை 2- 
வேலூர் அருகே ஆற்காட்டான்குடிசை கிராமத்தை ஒட்டி இயற்கை எழில்சூழ்ந்த வனப்பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறை சார்பில் தொடங்கப்பட்ட மூலிகை பண்ணை இன்று கவனிப்பாரற்று அழிவை சந்தித்துள்ளதுடன், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளதாக வேதனை குரல் எழுந்துள்ளது.

இயற்கையாக மூலிகை செடிகள் வளர்ந்துள்ள காடு மற்றும் மலைப்பகுதி 'மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகளின் பாதுகாப்பு பகுதி (மெடிசினல் பிளாண்ட் கன்சர்வேஷன் ஏரியா)'' மருத்துவ செடிகளை உருவாக்கி பாதுகாக்கும் பகுதி, 'மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகள் மேம்பாடு பகுதி (மெடிசினல் பிளாண்ட் டெவலப்மென்ட் ஏஜன்சி)'' என இரண்டு வகை மூலிகைப் பண்ணைகள் மாநிலம் முழுவதும் வனத்துறை மூலம் ஏற்படுத்தப்பட்டது. இந்த மூலிகை பண்ணைகள் மருத்துவ செடி மேம்பாட்டுப்பகுதிகளாக சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டை மணி விழுந்தான், தருமபுரி மாவட்டம் தோப்பூர், கோயம்புத்தூர் மாவட்டம் மருதமலை, நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா, மதுரை மாவட்டம் பூச்சம்பட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் புல்லேரி, வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த ஆற்காட்டான்குடிசை ஆகிய இடங்களில் ஏற்படுத்தப் பட்டன. இந்த மூலிகை பண்ணைகளில் ஒரு சிலவற்றை தவிர மற்றவை போதிய நிதியின்றியும், பராமரிப்பின்றியும் அழிவின் விளிம்பில் தத்தளித்து வருகின்றன.

இதில் வேலூர் மாவட்டம் வேலூர் நகரில் இருந்து சுமார் 12 கி.மீ தென்கிழக்கில் ஆற்காட்டான் குடிசை கிராமத்தை ஒட்டி மலையை சார்ந்த 6 ஆயிரம் ஏக்கர் பாலமதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஏறத்தாழ 5 ஏக்கர் பரப்பளவில் 1997ம் ஆண்டு ஆற்காட்டான்குடிசை மூலிகைப் பண்ணை ஆரம்பிக்கப்பட்டது. இப்பண்ணையில் வில்வம், நாவல், மலை வேம்பு, வேம்பு, பெருநெல்லி, வாதநாராயணன், மூங்கில், புளி, புங்கன், இலுப்பை, நீர் மருது, கடுக்காய், சாதிக்காய், தான்றிக்காய், சீமை கொருக்காபுள்ளி, பூவரசன், நீலகிரி, ஆல், கொடுக்காபுளி, இலந்தை, சிறியாநங்கை, சிறுகுறிஞ்சான், வல்லாரை, தூதுவலை, ஞான குண்டுமணி, வசம்பு, பொன்னாங் கண்ணி, கருவேலன், ஊமத்தை, கருநொச்சி, கீழாநெல்லி, கருந்துளசி, சீதா துளசி, மல்லி, முல்லை, சித்தரட்டை, செம்பருத்தி, ஆடுதொடா, மருதாணி, நாயுருவி, தொட்டாச்சிணுங்கி, நிலவேம்பு, அவுரி, சீத்தனாங்கொடி, தும்பை,  அருகம்புல், ஆமணக்கு, வெள்ளை எருக்கன், நொனா, பிரண்டை, ஆவாரம், கற்பூரவள்ளி, சோற்றுக் கற்றாழை, வெப்பாலை, சர்ப்பகந்தா என செடி, கொடி, மரம் வகைகளை சேர்ந்த 39 மூலிகை தாவரங்கள் வளர்க்கப்பட்டன.

இதற்காக வனத்துறை சார்பில் பராமரிப்பாளர் ஒருவரும் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டார். மூலிகை பண்ணையை பாதுகாக்க சுற்றிலும் கம்பிவேலி அமைக்கப்பட்டது. 
மேலும் மூலிகைப் பண்ணையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அப்பகுதியில் கால்நடை வளர்ப்போர், தங்கள் கால்நடைகளை பண்ணைக்குள் மேய்க்காம லிருக்க விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இங்கு வளர்க்கப்பட்ட மூலிகை தாவரங்களை பாரம்பரிய மருத்துவர்களும், பொது மக்களும் விரும்பி வாங்கிச் சென்றனர். இவ்வாறு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த மூலிகை பண்ணை நாளடைவில் முறையாக பராமரிப்பின்றி தாவரங்களின் எண்ணிக்கை குறைந்தது. பண்ணை யிலிருந்த மின் மோட்டார், மற்றும் கருவிகள், பண்ணையைச்சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலி மாயமானது. பாதுகாப்பில்லாத பண்ணை தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. 

குடிமகன்கள் திறந்தவெளி பாராக பயன் படுத்துவதால், பண்ணை உள்ளே மதுபாட்டில்கள், தண்ணீர் பாக்கெட், குளிர்பான பாட்டில்கள் சிதறிக் கிடக்கின்றன. சிலர் பெண்களையும் அழைத்து வந்து உல்லாசமாக இருந்துவிட்டு செல்வதாக கூறுகின்றனர் ஆற்காட்டான் குடிசை கிராமத்தை சேர்ந்த மக்கள். பண்ணையில் பெரும்பாலான மூலிகை தாவரங்கள் மாயமாகி விட்டன.  

இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, அரசின் நிதி ஒதுக்கீடு இல்லாததே மூலிகை பண்ணையை மேற்கொண்டு பராமரிக்க முடியவில்லை. இவ்விஷயத்தை உயர் அதிகாரிகள் மட்டத்தில் கொண்டு சென்றுள்ளோம். விரைவில் விடிவு கிடைக்கும் என்று தெரிவித்தனர். 

வனத்துறையின் மூலிகை பண்ணையின் இரும்பு கேட் திறந்தே கிடப்பதால் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் சர்வசாதாரணமாக மூலிகை பண்ணை வழியாகவே பாதுகாக்கப்பட்ட வனத்துக்குள் அத்துமீறி நுழைகின்றனர். இவர்களுடன் சமூக விரோதிகளும் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபடுகின்றனர் என்று புகார் தெரிவிக்கின்றனர் ஆற்காட்டான் குடிசை கிராம மக்கள். 

பாலமதி மலைத் தொடர்களில் இருந்து வரும் சிற்றோடைகளில் இருந்து தினமும் டிப்பர் லாரிகளில் வண்டல் மணல் கடத்தப்படுவதாகவும், இதற்கு வனத்துறை அதிகாரிகள் துணை போவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

Label