OUR CLIENTS
விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்: கோவில்களில் சிறப்பு வழிபாடு
விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்: கோவில்களில் சிறப்பு வழிபாடு Posted on 06-Sep-2016 விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்: கோவில்களில் சிறப்பு வழிபாடு

சென்னை :
இந்துக்களின் விழாக்களில் விநாயகர் சதுர்த்திக்கு முக்கிய இடம் உண்டு. நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சாமந்தி, மல்லிகை பூக்கள், மாவிலை தோரணம், பழங்கள், பொரி விற்பனை அமோகமாக இருந்தது. களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய வகை விநாயகர் சிலைகள் ரூ.50 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டது. விநாயகர் சிலைகளை குழந்தைகளுடன் கடை வீதிக்கு சென்ற பெண்கள் வாங்கி, வீட்டில் வைத்து வழிபட்டனர்.

பெண்கள் தங்கள் வீட்டை சுத்தம் செய்து, வீட்டின் முன்பு தோரணம் கட்டி, விநாயகரை அருகம்புல், எருக்கம் பூவால் அலங்கரித்து, கொழுக்கட்டை, லட்டு, பொறி, சுண்டல், பாயாசம், பழங்கள் ஆகியவற்றை படைத்து வழிபாடு நடத்திய காட்சிகளை பார்க்க முடிந்தது. விநாயகருக்கு படைக்கப்பட்ட உணவு வகைகளை தங்கள் உற்றார், உறவினர், நண்பர்களுக்கு கொடுத்து, விநாயகர் சதுர்த்தி நாளை உற்சாகமாக கொண்டாடினர்.

விநாயகர் கோவில்களில் நேற்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவில்கள் மட்டுமின்றி, சென்னையில் பல இடங்களில் தெருவுக்கு, தெரு பல்வேறு விதமான வண்ண வண்ண விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது. தியாகராயநகரில் கடலை மிட்டாயால் செய்யப்பட்ட விநாயகர், சவுகார்பேட்டையில் ஐஸ்கட்டி விநாயகர், திருவல்லிக்கேணியில் நவரத்தின விநாயகர் சிலை உள்ளிட்ட விநாயகர் சிலைகள் மக்களின் கவனத்தை ஈர்த்தது.

விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் ஒலிபெருக்கி மூலமாக, விநாயகரின் பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது. பல இடங்களில் ரூபாய் நோட்டு மாலைகளை விநாயகருக்கு சூட்டி, பக்தர்கள் மகிழ்ந்தனர். தங்களது சொந்த செலவில் அன்னதானங்களை வழங்கினர். இதனால் சென்னை மாநகரில் திரும்பிய திசையெல்லாம் விழாக்கோலமாகவே காட்சி அளித்தது.

வளசரவாக்கம், சிவன் கோவில் அருகே விபூதி விநாயகர், திருவல்லிக்கேணி இந்து முன்னணி சார்பில் 18 அடி உயரம் வீர விக்னேஸ்வரர், ஆழ்வார்திருநகரில் நாகபரண கணபதி, சர்மாநகர், பாரதிநகர் 12 அடி விஷ்ணு விநாயகர் சிலை அமைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர்.நகர் மார்க்கெட் அருகில் இந்து மக்கள் கட்சி சார்பில் 11 அடி உயரத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. காவிரி பிரச்சினை தீர்வதற்கும், தமிழக விவசாயிகளின் பிரச்சினை தீரவும் இந்த விநாயகருக்கு 21 புனிதநீர் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது.

சாலைகளில், தெருக்களில் கூடாரம் அமைத்து வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பூஜைக்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் பூஜை முடிந்த பின்னர் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளது. வருகிற 10 மற்றும் 11-ந்தேதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடக்கிறது. சென்னை காசிமேடு, பட்டினப்பாக்கம், நீலாங்கரை கடற்பகுதியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது.

Label