OUR CLIENTS
திறப்பு விழா காணாமல் மெல்ல மதுபாராகும் ஆடுவதை கூடம்!
திறப்பு விழா காணாமல் மெல்ல மதுபாராகும் ஆடுவதை கூடம்! Posted on 03-Jul-2019 திறப்பு விழா காணாமல் மெல்ல மதுபாராகும் ஆடுவதை கூடம்!


ராமேஸ்வரம், ஜூலை 3-
ராமேஸ்வரத்தில் நகராட்சி மார்க்கெட்டில் ரூ.50 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட ஆடுவதைக்கூடம் திறக்கப்படாததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ராமேஸ்வரம் நக ராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் சாலையோரத்தில் இறைச்சி கடைகள் இயங்கி வருகிறது. நகராட்சி தினசரி மீன் மார்க்கெட் வளாகத்திற்குள் உள்ள இறைச்சி கடைகள் மட்டுமல்லாது நகராட்சி தெருக்களில் ஆங்காங்கே சாலையோரங்களில் இருக்கும் கடைகளையும் சேர்த்து 25க்கும் மேற்பட்ட கடைகளில் அங்கேயே ஆடுகள் வெட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சாலையோரங்களிலும், நகராட்சி தினசரி மீன் மார்க்கெட்டிலும், சாலையோரத்திலும் கடைகளில் நகராட்சி அனுமதி இன்றி ஆடுகள் வெட்டப்படுகிறது. இதனால் நோயற்ற நல்ல சுகாதாரமான நிலையில் உள்ள ஆடுகள்தான் வெட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா என்ற கேள்விக்குறி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கறிக்காக வெட்டப்படும் ஆடுகள் சுகாதாரமாக உள்ளது என்பதை நகராட்சி சுகாதார ஆய்வாளர்தான் உறுதி செய்ய வேண்டும். இவரது ஆய்வுக்குப்பின்பு கட்டணம் செலுத்தியதும் விற்பனைக்குள்ள ஆடுகள் வெட்டப்பட்டு நகராட்சி முத்திரை பதிக்க வேண்டும். நகராட்சியில் இயங்கி வந்த ஆடு வதைக்கூடம் இடிந்து விழுந்ததை தொடர்ந்து ஆங்காங்கே இஷ்டம் போல் ஆடுகள் வெட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் புதிதாக நவீன ஆடுவதைக்கூடம் கட்டப்பட்டது. 2013-2014ம் ஆண்டு இயக்குதல் மற்றும் பராமரித்தல் இடைவெளி நிரப்பும் திட்டத்தின் மூலம் ரூ.50 லட்சம் செலவில் ராமேஸ்வரம் நகராட்சி தினசரி மீன்மார்க்கெட் வளாகத்தின் ஒரு பகுதியில் புதிதாக நவீன ஆடு வதைக்கூடம் கட்டி முடிக்கப்பட்டது.

பணிகள் முடிந்து 5 ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் உள்ளது. சாலையோரத்தில் இறைச்சி கடை வைத்திருப்பவர்கள் அவர்கள் நோக்கம் போல் ரோட்டிலேயே துடிக்க துடிக்க ஆடுகளை வெட்டி விற்பனை செய்து வருகின்றனர்.

 வெட்டப்படும் ஆடுகளின் கழிவுகளும் முறையாக அகற்றப்படாமல் ரோட்டோரத்தில் கொட்டப்படுவதால் சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுபோல் கோழிக்கறி கடைகளிலும் கழிவுகளை முறையாக அகற்றாமல் கண்ட இடங்களில் கொட்டுகின்றனர். இதே நிலைதான் பாம்பன், தங்கச்சிமடம் ஊராட்சி பகுதியிலும் உள்ளது. ஆடு வெட்டும் நவீன இயந்திரங்களும் இயக்கப்படாமல் துருப்பிடித்து வருகிறது. இன்னும் சில ஆண்டுகள் போனால் பயன்படுத்த முடியாமல் எடைக்கு போட வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். மேலும் ஆடுவதைக் கூடத்தின் மெயின் கேட் திறந்தே கிடப்பதால் இரவு, பகல் எந்நேரத்திலும் குடிமகன்களில் பாராக செயல்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் பலான விசயங்களும் நடப்பதாக இப்பகுதியில் குடியிருப்பவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். ரூ.50 லட்சம் செலவில் ஆடுவதைக் கூடம் கட்டப்பட்டும் செயல்படாததால் நிதி விரயமாக்கப்பட்டதுடன் சாலையோரம் வெட்டப்படும் ஆடுகளும் நகராட்சி சுகாதார ஆய்வாளரால் ஆய்வு செய்யப்படும் பணியும் முடக்கப்பட்டுள்ளது. 

மக்கள் நலன் கருதி உடனடியாக ஆடுவதை கூடத்தை திறந்து செயல்பட வைப்பதற்கும், சாலையோரத்தில் ஆடுகள் வெட்டப்படுவதை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும் என பொதுமக்களும், வியாபாரிகளும் தெரிவித்துள்ளனர்.

Label