OUR CLIENTS
சட்டம் தடுக்கவா, தண்டிக்கவா? குற்றம் குறைய என்னதான் வழி!
சட்டம் தடுக்கவா, தண்டிக்கவா? குற்றம் குறைய என்னதான் வழி! Posted on 03-Jul-2019 சட்டம் தடுக்கவா, தண்டிக்கவா? குற்றம் குறைய என்னதான் வழி!


வேலூர், ஜூலை 3-
சட்டம் தன் கடமையைச் செய்யும் என்கிற வாக்கியத்தை அடிக்கடி நாம் கேள்விப்பட்டிருப்போம்.  அப்படி என்ன அந்தச் சட்டம்? அதன் கடமை என்ன? மனித சமுதாயம் தோன்றியதிலிருந்து நடைபெற்ற ஏற்றுக்கொள்ள இயலாத செயல்பாடுகளை முறைப்படுத்தும் வகையில் ஒரு முறையை வகுத்து, அதை மீறுபவர்களுக்கு தண்டனை என்கிற நோக்கில்தான் இந்தச் சட்டம் என்பது நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும்.

சிலரால் விவாதித்து ஏற்றுக் கொள்ளப்பட்டு அதைப் பலருக்கும் பொருந்தும்படி வரையறை செய்து அமைக்கப்பட்டதுதான் சட்டம்.  இதற்குக் கட்டுப்படாதவர்கள், மீறுபவர்களுக்கு தண்டனை என்ற ஒன்றை வைத்தனர்.  தொடக்கத்தில் இதில் ஆதிக்க மனப்பான்மைதான் இருந்திருக்கும்.  இது ஒருபுறம் இருக்க, சட்டம் தன் கடமையைச் செய்வதற்கு அதற்குப் பாதுகாவலர்களாக நீதிபதிகள் (சட்ட நுணுக்கங்களை நன்றாக அறிந்தவர்கள்) இருந்து வழிநடத்தும் முறை அமலுக்கு வந்தது. அப்படி குற்றத்தை அது ஆராய்ந்து அதற்கான தண்டனை அல்லது தீர்வை அறிவிக்கும் இடமாக நீதிமன்றம் உருவானது. தனிப்பட்ட நீதியரசர்களின் தீர்ப்புகளும் மறுஆய்வு செய்யும் நிலை ஏற்பட்டவுடன், ஒன்றுக்கும் மேற்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஏற்படுத்தப்பட்டு வழக்கின் நிலையை முழுமையாக ஆராய்ந்து முறைப்படி தீர்ப்பு வழங்கும் நிலை உருவானது.  

குற்றங்கள் ஏற்படாமல் தடுக்கவேண்டிய சட்டங்கள், குற்றத்தை நிரூபிக்க தகுந்த  சாட்சிகள் வேண்டும் என்ற முறையைச் சொல்லும்போது, எப்படி, எந்தெந்த வழிகளில்  தப்பிக்கலாம் எனும் வழிகாட்டுதல்களை வழங்கிவிட்டது என்றே கூற வேண்டும்.  காரணம், தவறு செய்யும் எந்தவொரு நபரும் தன் செயலுக்கு வருந்தாமல், தான் செய்ததற்கு ஒரு சுய நியாயத்தைக் கற்பிப்பதோடு, அது குற்றமாக இருந்தால் தப்பிக்க என்ன வழி என முயற்சிக்கும் சூழ்நிலையே நிலவுகிறது. இனி எதை வைத்து இனிவரும் தலைமுறைக்கு நாம் சட்டம் பற்றிய பாடத்தைக் கற்பிப்பது?  குற்றம் செய்தால் தண்டனை கிடைக்கும் என மாணவ சமுதாயத்துக்கு நாம் கற்பிக்கும்போது, நாட்டில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்து அப்படி தண்டனை கிடைக்காமலும் இருக்கும் என்பதை அவர்களாகவே உணர்ந்து கொள்ளும் நிலை வந்துவிட்டதே!

இனி என்ன செய்யப் போகிறோம்?  எதை வைத்து நாம் நல்ல ஒழுக்கங்களை, நீதி போதனைகளைக் கற்பிப்பது?  எந்த குற்றமாக இருந்தாலும் சரி, சட்டத்தின் நுணுக்கங்களைப் பயன்படுத்தித் தப்பிப்பது தொடர்ந்து நடைபெறுகிறது. சட்டம் கடுமையாக இருந்தால் இப்படியான குற்றங்கள் நடைபெறாது என வாதம் செய்பவர்கள் உண்டு. அனைத்தையும் சட்டம் போட்டு தடுத்துவிட முடியாது; தனி மனித ஒழுக்கமும் வாழ்க்கை குறித்த புரிதலும் அனைவருக்கும் இருக்க வேண்டும்.  இதற்கான அடிப்படை கல்வியறிவு வழங்கப்பட வேண்டும். 
உலகிலேயே வலுவான  அரசியலமைப்புச் சட்டம் கொண்ட நாடு இந்தியா. அரசியலமைப்புச் சட்டத்தில் அவ்வப்போது  திருத்தங்களும் செய்யப்படுகின்றன. சட்டம், நீதி, காவல் துறை, அரசு, ஊடகங்கள் என இருந்தாலும் ஆங்காங்கே பல்வேறு குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதில் கொலை, கொள்ளை, பாலியல் கொடுமை, திருட்டு, வழிப்பறி, ஏமாற்றுதல், லஞ்சம், ஊழல், முறையற்ற சொத்துக் குவிப்பு, பதுக்கல், வங்கிக் கடன்  செலுத்தாமல் இருப்பது முதலிய குற்றங்களின் எண்ணிக்கையும் வகைகளும் அதிகரித்துள்ளன. ஆனால், தண்டனைகள் குறைந்துகொண்டு வருகின்றன.

வசதியும் வாய்ப்பும் இருப்பவராக குற்றவாளி இருந்தால் சிறந்த வழக்குரைஞர் மூலம் வழக்கிலிருந்தும், தண்டனையிலிருந்தும் தப்பிவிடும் சூழல் உள்ளது.  எனவே, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதெல்லாம் ஏட்டளவில்தான் உள்ளது. வசதி உள்ளோருக்கு ஒரு நீதியும், வசதி இல்லாதோருக்கு ஒரு நீதியும்தான் கிடைக்கிறது.  எனினும், ஆயிரம் குற்றவாளிகள் தப்பிவிடலாம், ஆனால், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்ற பிரபல சொற்றொடர் தொடர்கிறது.  

சட்டத்தின் மூலம் குற்றம் நடைபெறுவதை முழுமையாகத் தடுக்க முடியவில்லை; குற்றம் நடைபெற்றாலும் தண்டிப்பதற்கு மிகுந்த காலதாமதம் ஏற்படுகிறது. இத்தகைய சட்டத்தைப் பாதுகாக்க இத்தனை வரையறைகள் எதற்கு? சாதாரண குடிமக்களுக்கு யார் பாதுகாப்பு? சட்டத்தைத் தங்கள் இஷ்டம்போல் வசதியானவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்ற  குற்றச்சாட்டு நீண்ட காலமாக உள்ளது.சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல்... என திருவள்ளுவர் கூறியது போன்று,  தங்களுக்கு உரிய சான்றோரின் தன்மையோடு  நீதியரசர்கள் நடுவுநிலை காத்தல் வேண்டும். நீதியைக் காக்கும் நீதியரசர்கள் மனதில் சமநிலையோடு இருந்து நீதியின் பக்கம் நின்று உண்மையை உரைக்க வேண்டும்.  இதைவிட முக்கியமானது, குற்றவாளி மனம் திருந்தி வாழ வழிவகை செய்வதும், அப்படி அவர் முற்பட்டால் இந்தச் சமூகம் சரியாக உதவ வேண்டும் என்பதுதான்.

தெரியாமல் செய்து விட்டாலும் குற்றம் குற்றமே என்பதால், சூழ்நிலை காரணமாக தண்டனை பெற்றுவிட்ட ஒருவரை இந்தச் சமுதாயம்  என்றென்றும் பரம்பரை குற்றவாளி போல் பார்ப்பது அந்த மனிதரை மனம் நோகச் செய்துவிடும்.  அவர் மனதில் ஏற்படும் தீராத வடுக்கள்தான் ஒருவரை மீண்டும் மீண்டும் தவறு செய்யத் தூண்டுகிறது. எனவே, குற்றவாளிகள் மனம் திருந்தி மறுவாழ்வு வாழ உதவ வேண்டும்.  காலச் சூழல் காரணமாக தண்டனை பெற்று, அது முடிவடைந்து வருவோரை முன்பு போலவே சமுதாயம் அங்கீகரிக்க வேண்டும். சிறைச்சாலையில் இருப்பவர்கள் அனைவரும் குற்றவாளிகள் இல்லை. சிறைக்கு வெளியே இருக்கும் அனைவரும் உத்தமர்கள் இல்லை என ஒரு சொல்லாடல் உண்டு.  ஏதோ சந்தர்ப்பச் சூழலில் தவறிழைத்து விடுகின்றனர்.

 எனவே, குறிப்பிட்ட கால தண்டனைக்குப் பிறகு மன்னித்து மறுவாழ்வு அமைந்தால், இயல்பான பாதையில் அவர்கள் பயணிப்பர்.  குற்றங்கள் குறையும்.

Label