OUR CLIENTS
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா? குளம், ஏரிகள் தூர்வார நடவடிக்கை தேவை!
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா? குளம், ஏரிகள் தூர்வார நடவடிக்கை தேவை! Posted on 03-Jul-2019 குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?  குளம், ஏரிகள் தூர்வார நடவடிக்கை தேவை!

திண்டிவனம், ஜூலை 3-
திண்டிவனம் நகராட்சி பகுதியில் நிலத்தடி நீரை பாதுகாக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக நகரைச் சுற்றி அமைந்துள்ள ஏரிகள் மற்றும் குளங்களை தூர்வாருவதற்கு மாவட்ட நிர்வாகம், நகராட்சி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திண்டிவனம் நகரம் குடிநீர் வளமற்ற வறண்ட பூமியாக இருப்பதால் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நகர மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகின்றனர். ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்படுவதற்கு முந்தைய காலத்தில் நகரைச் சுற்றியுள்ள ஏரி மற்றும் குளங்களில் இருந்து தண்ணீரை எடுத்து குடிநீராக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். திண்டிவனம் நகரம் மற்றும் விரிவாக்கப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொகை எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கு மேல் அதிகரித்துவிட்டது. இவர்களுக்கு குடிநீர் சப்ளை செய்வது நகராட்சி நிர்வாகத்திற்கு பெரும் சவலாக உள்ளது. நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக 18 கி.மீ., தூரத்தில் உள்ள ரெட்டணை, 40 கி.மீ., தூரத்தில் உள்ள கண்டரக்கோட்டை மற்றும் 26 கி.மீ., தூரத்தில் உள்ள புளிச்சப்பள்ளம் ஆகிய இடங்களில் இருந்து, குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. தற்போது கடும் வறட்சி காரணமாக புளிச்சப்பள்ளத்திலிருந்து மட்டும்தான் திண்டிவனத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. திண்டிவனம் நகரில் குடிநீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

தற்போது குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கண்டரக்கோட்டையிலுள்ள வடவாம்பலத்திலிருந்து பைப் லைன் மூலம் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப் பணிகள் நிறைவு பெறவில்லை. இதனால் நகரத்தில் குடிநீர் பற்றாக்குறை தொடர்ந்து வருகின்றது. இந்த புதிய திட்டத்தின் மூலம் தற்போது தற்காலிகமாக பைப் லைன் மூலம் தினந்தோறும் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் திண்டிவனத்திற்கு கொண்டு வரப்படுகின்றது. நகர மக்களுக்கு தினந்தோறும் 95 லட்சம் லிட்டர் தண்ணீர் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது 25 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகின்றது. இதன் காரணமாக நகர மக்களின் அன்றாட குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமல், நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. திண்டிவனம் நகர பகுதியில் ஆழ்குழாய் கிணறு மூலம் கிடைக்கும் தண்ணீர் உவர்ப்பு நீராக உள்ளது. நிலத்தடி நீரை பாதுகாப்பதன் மூலம் உவர்ப்பு நீரை மாற்றி, குடிநீராக பயன்படுத்த முடியும்.திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கிடங்கல் ஏரி, ரோஷணை ஏரி, ரோஷணை தாங்கல் ஏரி, அவரப்பாக்கம் ஏரி, முருங்கப்பாக்கம் ஏரி, பெலாக்குப்பம் ஏரி, காவேரிப்பாக்கம் ஏரி மற்றும் திண்டிவனம் ஏரி ஆகிய 8 ஏரிகள் அமைந்துள்ளன.இதேபோல் தீர்த்தக்குளம், ராஜாங்குளம், மார்செட்டிக்குளம், அகல்குளம், நாகலாபுரம் குளம் உள்ளிட்ட குளங்களும் இயற்கையின் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதில் நாகலாபுரம் உள்ளிட்ட குளங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளது.நகரைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரிகள் மற்றும் குளங்களை தூர்வாரி, முழுமையான நீர் பிடிப்பு பகுதியாக மாற்றிட வேண்டும். இவற்றை முறையாக பாதுகாப்பதன் மூலம் நிலத்தடி நீரை சேமிக்க முடியும். நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தால்தான் நகரில் தற்போது கிடைக்கும் உவர்ப்பு நீரை குடிநீராக பயன்படுத்த முடியும். தற்போது கிடங்கல் ஏரி உள்ளிட்ட பல ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

நகரத்தின் மையப்பகுதியிலுள்ள காவேரிப்பாக்கம் ஏரி நீர்பிடிப்பு பகுதியாக உள்ளது. இந்த ஏரியை நம்பி ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதியை பெறுகின்றது. இதேபோல் ராஜாங்குளத்திற்கு நீர்வரத்து வரும் வாய்க்காலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கை பொது மக்கள் மத்தியில் வலுத்து வருகின்றது.

Label