OUR CLIENTS
பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டட பணி!
பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டட பணி! Posted on 04-Jul-2019 பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள  அங்கன்வாடி மைய கட்டட பணி!


மன்னார்குடி, ஜூலை 4-
 திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் தென்பரை மேலக்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் இரு வகுப்பறைகள் உள்ளன. பள்ளி அமைந்துள்ள வளாகத்திற்குள் பழைய ஒட்டு கட்டடம் ஒன்று இருந்தது. இதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் செயல்ப்பட்டு வருகிறது . இதில் சுமார் 25 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். 

அங்கன்வாடி பழமையான ஓட்டு கட்டடத்தில் இயங்கி வந்தது. போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால் அக்கட்டடம் காலப்போக்கில் சேதமடைந்து விட்டது. இதனால் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அக்கட்டிடமும் இடிக்கப்பட்டு விட்டது. இதனால் அங்கன்வாடி மையம் தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள 2 வகுப்பறைகளில் ஒன்றில் தற்காலிகமாக இயங்கி வந்தது. எனவே அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் ஒன்று கட்டித்தர வேண்டுமென கிராம மக்கள், மாணவர்களின் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.   அதனடிப்படையில் கோட்டூர் யூனியன் அலுவலகம் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ 8.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2016 - 17 ம் ஆண்டில் மேலக்காடு தென்பரை கிராமத்தில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி வளாகத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. 

பணிகளை தனியார் ஒப்பந்தக்காரர் ஒருவர் செய்து வந்தார். கட்டடம் 75 சதவீதம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் பணிகள் நிறுத்தப்பட்டு விட்டன. இதற்கான காரணமும் தெரிவிக்கப் படவில்லை. இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமானது. பள்ளிக்கென இருந்த இரு வகுப்பறைகளில் ஒன்றில் அங்கன்வாடி மையம் தற்காலிகமாக செயல்பட்டு வந்ததால் புதிதாய் பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு வகுப்பறை இல்லாது பிரச்னை எழுந்தது. அதனை தொடர்ந்து வகுப்பறையில் இயங்கி வந்த அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்படாத புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. அரை குறை வேலையோடு முழுமை பெறாத கட்டடத்தில் அங்கன்வாடி மையம் கடந்த 1 ஆண்டாக செயல்பட்டு வருகிறது. இதனால் அதில் கல்வி பயிலும் குழந்தைகள் வேதனையில் உள்ளனர். இது குறித்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு பலமுறை கிராம மக்கள் எடுத்து கூறியும் நடவடிக்கை இல்லை. எனவே அரை குறை வேலைகளோடு நிற்கும் அங்கன்வாடி மைய கட்டிடத்தை அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு நிறுத்தப்பட்டுள்ள கட்டடப் பணிகளை துரிதப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், கட்டடப்பணி பாதியில் நிற்பது உண்மையில் வேதனையளிக்கிறது. என்ன காரணத்திற்காக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் கட்டட பணிகள் தொடங்கும். புதிய பொலிவுடன் அங்கன்வாடி மைய கட்டடம் கட்டி முடிக்கப்படும். அதற்கான நடவடிக் கைகளை துரிதப்படுத்தியுள்ளோம் என கூறினர்.

Label