OUR CLIENTS
உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுமா?
உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுமா? Posted on 04-Jul-2019 உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுமா?

சென்னை, ஜூலை 4-
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை 2017ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதிக்குள் வெளியிட்டு, நவம்பர் 17ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கவேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 4.9.2017ம் தேதி உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை. உள்ளாட்சி தேர்தலும் நடத்தப்படவில்லை. இதனால் பெருநகர் முதல் கடைக்கோடி கிராமம் வரை குடிநீர் விநியோகம், தார் சாலை, தெருவிளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகள் எதுவுமே மேற்கொள்ளப் படவில்லை. இதனால், மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

உள்ளாட்சி நிர்வாக குளறுபடி தொடர்பான பிரச்னைகளை யாரிடம் போய் புகார் தெரிவிப்பது என தெரியாமல் மக்கள் திக்குமுக்காடுகின்றனர். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்ளாட்சி தேர்தலை இன்னும் ஏன் நடத்தவில்லை, காலதாமதம் ஏன்? பதிலை 2 வாரத்திற்குள் பிரமாண பத்திரமாக சமர்ப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

வழக்கு விசாரணை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  இவ்வழக்கு விசாரணை கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தபோது இதேபோல் சென்னை உயர்நீதிமன்றமும் தமிழக அரசுக்கு சாட்டையடி கொடுத்தது. நீதிபதிகள் சத்தியநாராயணன், சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவில், ஏற்கனவே போதுமான அளவு காலஅவகாசம் வழங்கப்பட்டு விட்டது. 2016ல் நடத்த வேண்டிய உள்ளாட்சி தேர்தல் இரண்டு ஆண்டு ஆகியும் இன்னும் நடத்தப்படவில்லை. மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்தியாக இல்லை, இதே நிலை நீடித்தால் 2019ம் ஆண்டு வரைகூட தேர்தல் நடத்தி முடிக்க மாட்டீர்கள் என சாட்டையடி கொடுத்தனர். நீதிமன்றங்கள் மூலம் அடுத்தடுத்து குட்டு வாங்கியும் தமிழக அரசு இன்னும் விழித்துக்கொள்ளவில்லை. திட்டமிட்டு ஏதாவது ஒரு காரணத்தை கூறி உள்ளாட்சி மன்ற தேர்தலை நடத்தாமல் தமிழக அரசு இழுத்தடித்து வருகிறது என்பது ஊர் அறிந்த விஷயம்.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை பின்பற்றி அதன்படி நடக்கவேண்டியது அரசின் கடமை. இனியும் தமிழக அரசு விழித்துக்கொள்ளாவிடில் மக்கள் விழித்துக்கொள்வார்கள். தமிழக அரசின் இழுத்தடிப்பு நடவடிக்கை மக்களிடையே கடும் கோபத்தை உருவாக்கியுள்ளது. இதை, ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல், இனியும் காலம் தாழ்த்தினால் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள்போல் அடுத்தடுத்து தேர்தல் முடிவுகள் வெளிவரும் என்பதில் சந்தேகம் இல்லை. உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் பல வளர்ச்சிப் பணிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. அதிகாரிகள் காட்டில் கனமழை பொழிகிறது. இதனால் அவர்கள் நண்டு மாதிரி உண்டு கொழிக்கின்றனர். 

வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், அதிகாரிகள்,  மாநகராட்சி ஆணையர்கள் உண்டு கொழிக்கினறனர். உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் தடுப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதையெல்லாம் திமுகவினர் கனகச்சிதமாக செய்து வருகினற்னர். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் என்பது இந்த ஆண்டாவது நடத்தப்படுமா? என்பது பொதுமக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாக உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் நடந்தால் மட்டுமே வளர்ச்சிப் பணிகள் முழுவீச்சில் நடைபெறும். அதிகாரிகள் தற்போது மிகவும் சோம்பேறிகளாக மாறிவிட்டனர். எதற்கெடுத்தாலும் சாக்கு போக்கு சொல்லிவிட்டு தப்பிச் சென்று விடுகின்றனர். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு உண்மைநிலை உலகுக்கு தெரியக் கூடாது என்று அதிமுக அரசு உறுதியாக உள்ளது. திமுவினர் மட்டும் தேர்தல் நடத்தக் கோரி முழக்கமிட்டு வருகின்றனர்.

இது ஆரோக்கியமான சூழல் இல்லை என்றே சொல்லலாம். தமிழக அரசும் சாமர்த்தியமாக காய் நகர்த்தி வரும் வேளையில் பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற கேள்வி எழாமல் இல்லை. இந்த முறையாவது உள்ளாட்சி தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று நம்புவோமாக!.

Label