OUR CLIENTS
ஜமாபந்தியில் கொடுத்த மனுக்கள் நிலை என்ன?
ஜமாபந்தியில் கொடுத்த மனுக்கள் நிலை என்ன? Posted on 01-Jul-2019 ஜமாபந்தியில் கொடுத்த மனுக்கள் நிலை என்ன?


வேலூர், ஜூலை 4-
காட்பாடியில் நடந்த ஜமாபந்தியில் கொடுத்த மனுக்களின் நிலை என்ன என்பதை அறிந்து கொள்ள முடியாமல் பொதுமக்கள் அலைந்து திரிகின்றனர். வட்டாட்சியர் கூறுவதை மண்டல துணை வட்டாட்சியர் காது கொடுத்து கேளாமல் பொதுமக்களை அலைகழிக்கச் செய்கிறார்.

காட்பாடி தாலுகா அலுவலகத்தில் ஆண்டு வருவாய்த் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி கடந்த வாரம் நடந்து முடிந்தது. நந்திகேஸ்வரன் வருவாய்த் தீர்வாய அலுவலராக செயல்பட்டடார். அவர் பொதுமக்கள் கொடுத்த மனுக்களை முறையாக விசாரித்து பணிகளை முடித்து தருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். காட்பாடி வட்டாட்சியர் சுந்தரும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து பணிகளை முடித்து தருமாறு தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் எந்த அதிகாரியும் வட்டாட்சியர் சொல்வதை கேட்டு நடக்கவில்லை. மாறாக பொதுமக்களை அலைகழிக்கும் நிலையில் உள்ளனர். அதாவது மண்டல துணை வட்டாட்சியர் ராஜேஸ்வரி பொதுமக்கள் தாங்கள் கொடுத்த மனுக்கள் என்னவாயிற்று என்று கேட்டால் வருவாய் ஆய்வாளரை சென்று பாருங்கள் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். எந்த மனு எங்குள்ளது என்று பார்ப்பதே இல்லை. இப்படி பொறுப்பற்ற முறையில் பொறுப்பாக பணியாற்றுகிறார் இந்த கடமை தவறாத அதிகாரி ராஜேஸ்வரி. இது காட்பாடி வட்டாட்சியர் சுந்தருக்கு தெரியுமா? தெரியாதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஜமாபந்தியில் பொதுமக்கள் கொடுத்த முதியோர் ஓய்வூதியம், இலவச மனைப்பட்டா போன்றவைகளுக்கு உரிய பதில் சொல்ல உத்தரவிட வேண்டும். 

அத்துடன் புரோக்கர்கள் மூலம் கொடுக்கப்பட்ட மனுக்கள் மட்டும் பரிசீலனை செய்யப்பட்டு தலா ரூ.3 ஆயிரம் ÔபÕவைட்டமின் வாங்கி கொண்டு முதியோர் ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர். இலவச மனைப்பட்டாவும் புரோக்கர்கள் கொடுத்த மனுக்கள் மட்டும் பரிசீலனை செய்யப்பட்டு மனைகள் வழங்கப்பட்டன. மற்ற மனுக்களுடைய நிலை என்னவென்றே தெரியவில்லை. புரோக்கர்கள் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டுள்ளது காட்பாடி தாலுகா அலுவலகம் என்று சொன்னால் அது மிகையாகாது. ஜமாபந்தியில் கொடுத்த மனுக்கள் குப்பைக்கு சென்று விட்டனவா என்று பொதுமக்கள் புலம்பும் நிலைக்கு வந்து விட்டனர். ஜமாபந்தியில் கொடுத்தால் பணிகள் விரைவில் முடியும் என்று பொதுமக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் இந்த ஆண்டு தவிடுபொடியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது. முதியோர் ஓய்வூதியம் வழங்கும் பிரிவில் பணியாற்றும் நபர்கள் கொண்டைகடலை சுண்டல் சாப்பிட்டு கொண்டே பொதுமக்களுக்கு தெனாவெட்டாக பதில் அளிக்கிறார்கள். காட்பாடி தாலுகா அலுவலகம் அவரவர் விருப்பம் போல செயல்படுகிறது. தேர்தல் பிரிவு மட்டும் சிறப்பாக செயல்படுகிறது. 

சேவை பிரிவு, ஆதார் கார்டு பிரிவுகளை பற்றி சொல்லி மாளாது. அந்த இரு பிரிவுகளும் பொதுமக்களை விரட்டும் வேலையில்தான் ஈடுபடுகின்றனர். புரோக்கர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள்.  

காட்பாடி வட்டாட்சியர் சுந்தரை சக ஊழியர்கள் நன்கு ஏமாற்றுகிறார்கள் என்பது மட்டும் நிதர்சன உண்மையாகும். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ஜமாபந்தியின் குறிக்கோளே நிறைவேறாமல் போய்க் கொண்டுள்ளது. நரிக்குறவர்களுக்கு மட்டும் 32 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு முதியவருக்கு மட்டும் முதியோர் ஓய்வூதியம் பெற ஆணை வழங்கப்பட்டது. இப்படி ஜமாபந்தி நிறைவு விழாவில் உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு நடத்தி பொதுமக்களுக்கு நிலைமையை தெளிவுபடுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அரசு என்ன காரணத்துக்காக ஜமாபந்தியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறதோ அந்த நன்மை இந்த ஆண்டு சரிவர பொதுமக்களுக்கு சென்று சேரவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் நம்பி வந்து மனு கொடுத்தும் இங்கும் அவர்களுக்கு கிடைத்தது பெருத்த ஏமாற்றம் மட்டுமே. 

தகுதியுள்ளவர்களுக்கு அரசு நலத்திட்டங்களை வாரி வழங்க வேண்டிய வருவாய்த்துறை அதிகாரிகள் அலைகழிப்பது சரியானது அல்ல. ஜமாபந்தி முடிவுகளை காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தகவல் பலகையில் ஒட்டினால் கூட பொதுமக்கள் தங்கள் மனு எந்த நிலையில் உள்ளது என்பதை அறிந்து கொள்ள வசதியாக இருக்கும். வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் வீடுகள் கூட ஒரு பிரச்னையும் இல்லாமல் வழங்கி முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காட்பாடியில் மட்டும் தில்லாலங்கடி அலுவலர்கள் தங்கள் கைவரிசையை தொடர்ந்து காண்பித்து வருகின்றனர். காட்பாடி வட்டாட்சியர் சுந்தர், மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் என்ன நடவடிக்கை எடுக்கின்றனர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Label