OUR CLIENTS
10 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் முதல்வர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்!
10 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் முதல்வர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்! Posted on 08-Jul-2019 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் முதல்வர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்!


சென்னை, ஜூலை 8-
மருத்துவப் படிப்புகளில் முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் திட்டம் குறித்து விவாதிக்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு சட்டப் பேரவையில்  மானியக் கோரிக்கை மீதான விவாதம் முடிந்த பிறகு, மாலை 5.30 மணியளவில் முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு முன்வைத்துள்ளது. இதனை இப்போது நடைபெறவுள்ள எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கலந்தாய்விலேயே கொண்டு வரவும் தீர்மானித்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய மருத்துவக் கவுன்சில் அனுப்பி வைத்துள்ளது.

இந்த திட்ட அறிக்கையில் உள்ள விவரங்கள் குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூட்டியுள்ளார்.

இதுதொடர்பான பிரச்னையை சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் முன் வைத்தார்.

முன்னேறிய விகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தரும் மத்திய சட்டம் பற்றி தமிழக அரசின் நிலை என்ன? முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்டவர்கள் பாதிக்கப்படுவர். தமிழகத்தில் சமூக நீதியை காப்பாற்றுவது பற்றி அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி விவாதிக்க வேண்டும். சமூக நீதியை காப்பாற்ற தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இடஒதுக்கீடு குறித்து விவாதிக்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் கூட்டத்துக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

இந்தக் கோரிக்கையை சட்டசபையிலேயே ஏற்றுக் கொண்ட முதல்வர் பழனிசாமி, சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிந்ததும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பின்படி, அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று  மாலை 5.30 மணியளவில் தொடங்கவுள்ளது.

இக்கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், மாநிலத்திலுள்ள முக்கியமான கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இந்தக் கூட்டத்தில், ஒருமனதாக எடுக்கப் படும் முடிவுகளை முதல்வர் பழனிசாமி அறிவிக்க வுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சென்னையில் தெரி வித்தார்.

மருத்துவக் கல்வி இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடு, பொதுப் பிரிவு, 69 சதவீத இடஒதுக்கீடு போன்றவற்றின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மத்திய அரசின் 10 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளும் மாநிலங்கள், 25 சதவீதம் மருத்துவக் கல்வி இடங்களை அதிகரித்துக் கொள்ளலாம் என இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்துக்கு கர்நாடகம், தமிழ்நாடு தவிர்த்து மற்ற அனைத்து மாநிலங்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளன. 25 சதவீத மருத்துவக் கல்வி இடங்கள் அதிகரித்தாலும், நமது மாநிலத்திலுள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. எனவே, இதுபோன்ற அம்சங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன.

Label