OUR CLIENTS
காணாமல் போன சமூக ஆர்வலர் முகிலன் ஆந்திராவில் கண்டுபிடிப்பு
காணாமல் போன சமூக ஆர்வலர் முகிலன் ஆந்திராவில் கண்டுபிடிப்பு Posted on 08-Jul-2019 காணாமல் போன சமூக ஆர்வலர்  முகிலன் ஆந்திராவில் கண்டுபிடிப்பு

சென்னை, ஜூலை 8-
காணமல் போன சமூக ஆர்வலர் முகிலன் நேற்று ஆந்திராவில் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் சென்னை அழைத்து வரப்பட்டார், முகிலைனை  சந்திக்க சென்னை வந்த அவரது மனைவி பூங்கொடி கார் விபத்தில் சிக்கினார்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலனை முகிலனை கண்டுபிடிக்கும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில், ஆந்திர மாநில போலீசார் முகிலனை கண்டுபிடித்துள்ளனர்.

திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலனை போலீசார் அழைத்து சென்ற வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

முகிலனை தங்களிடம் ஒப்படைக்குமாறு தமிழ்நாடு சி.பி.சி.ஐ.டி. போலீசார், ஆந்திர போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்று காட்பாடி ரயில்வே காவல் நிலையத்திற்கு முகிலன் கொண்டு வரப்பட்டார். சி.பி.சி.ஐ.டி. காவல் துறையினர் காட்பாடி சென்றனர். அங்கிருந்த ஆந்திர போலீசார், முகிலனை தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். பின்னர் முகிலனை வஜ்ரவேல் தலைமையிலான தமிழ்நாடு சி.பி.சி.ஐ.டி போலீசார் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வந்தனர்.

போலீஸாரால் கண்டுபிடிக்கப் பட்ட சமூக ஆர்வலர் முகிலனை சந்திப்பதற்காக அவரது மனைவி பூங்கொடி ஈரோடு - சென்னிமலையிலிருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டார். அவர் கள்ளக்குறிச்சி அருகே காரில் வந்த போது கார் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதனால் லேசான காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர், வேறொரு காரில் சென்னைக்கு வருகிறார்.

கடந்த பிப்ரவரி 15-ம் தேதி சென்னை  -சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஆவணங்களை வெளியிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார் சமூக செயற் பாட்டாளர் முகிலன். 

அன்று மாலையே ஊருக்கு புறப்படுவதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தவர் ஊர் சென்றடையவில்லை எனவும் காணாமல் போனதாகவும் பிப்ரவரி மாதம் 15-ம் தேதி சென்னை எழும்பூர் ரயில்வே போலீசாரிடம் லயோலா மணி என்பவர் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த எழும்பூர் ரயில்வே போலீசார் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என கூறி பல்வேறு சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இதனையடுத்து, முகிலன் காணாமல் போன வழக்கை விசாரிக்க சிபிசிஐடிக்கு உத்தரவிடுவதாக தமிழக காவல் துறை இயக்குனராக இருந்த டி. கே.ராஜேந்திரன் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார் முகிலனை தேடிவந்தனர். இந்நிலையில் 140 நாட்களுக்குப் பிறகு முகிலன் ஆந்திராவில் கண்டு பிடிக்கப்பட்டார். முகிலன் உயிருடன் இருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவுக்கு ஏன் சென்றார், எப்படி சென்றார், அங்கு என்ன செய்தார், அவர் மாறுவேடத்தில் இருந்ததற்கான காரணம் என்ன என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு போலீஸார் விடை தேடுகின்றனர்.

Label