OUR CLIENTS
தமிழக மக்களின் வரி பணத்தில் வாங்கிய பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை
தமிழக மக்களின் வரி பணத்தில் வாங்கிய பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை Posted on 08-Jul-2019 தமிழக மக்களின் வரி பணத்தில் வாங்கிய பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை


சென்னை, ஜூலை 8-
தமிழக மக்களின் வரி பணத்தில் வாங்கிய புதிய பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை என திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்து உள்ளார்.கனிமொழியின் டுவிட்டர் கேள்விக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மொத்தம் 1,500 கோடி ரூபாய் செலவில் 5,000 புதிய பேருந்துகளை வாங்க அரசாணை வெளியிடப் பட்டது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1,001 கோடி ரூபாய் செலவில் 3,381 பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை 4ம் தேதி, தலைமைச் செயலகத்தில் 500 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை மாநகர போக்குவரத்திற்கு 100 பேருந்துகள், அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 150 பேருந்துகள், நெல்லை, கோவை, சேலம், மதுரை, கும்பகோணம், விழுப்புரம் ஆகிய 6 கோட்டங்களுக்கு 250 புதிய பேருந்துகள் என மொத்தம் 500 பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

தமிழ் இல்லை புதிய பேருந்தில் EMERGENCY, FIRE EXTINGUISHER  என்று குறிப்பிடும் பகுதியில் தமிழுக்கு பதிலாக ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதப்பட்டு உள்ளது. இதற்கு தி.மு.க. எம்.பி கனிமொழி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

கனிமொழி வெளி யிட்டுள்ள டுவிட்டர் பதிவு, தமிழக மக்களின் வரி பணத்தில் புதிதாக வாங்கியிருக்கும் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை. 

மத்திய அரசின் இந்தி திணிப்பு ஒருபுறம் என்றால், நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று இந்தியை திணிக்கும் அ.தி.மு.க. அரசுக்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் என தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை விளக்கம்  மத்திய அரசை போல அதிமுக அரசும் தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியிருந்தார்.
தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் இந்தி எழுத்துகள் இல்லை என போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. வெளி மாநிலத்தில் தயாரித்து கொண்டு வரப்பட்ட ஒரு பேருந்தில் இந்தி ஸ்டிக்கர் இருந்ததாகவும்  பயணிகளின் சேவைக்கு விடுவதற்கு முன்பே பேருந்தில் இருந்த இந்தி ஸ்டிக்கர் அகற்றப்பட்டு விட்டதாகவும் போக்குவரத்து துறை கூறியுள்ளது.  தமிழ்நாட்டில் ஓடும் பேருந்துகளில் இந்தி எழுத்துகள் இலலை என்றும் போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது.

Label