OUR CLIENTS
இடிந்து விழும் நிலையில் புட்லூர் நியாய விலை கடை!
இடிந்து விழும் நிலையில் புட்லூர் நியாய விலை கடை! Posted on 11-Jul-2019 இடிந்து விழும் நிலையில்  புட்லூர் நியாய விலை கடை!

திருவள்ளூர், ஜூலை 11-
பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடத்தில் இயங்கும் நியாய விலை கடையால் பொதுமக்களும் கடை ஊழியர்களும் அச்சத்தில் உள்ளனர்.

திருவள்ளூர் ஒன்றியம், புட்லூர் ஊராட்சி அலுவலகம் அருகில் நியாய விலை கடை இயங்கி வருகிறது. இங்கு 1,200க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். கடந்த 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட இந்த கட்டடம் தற்போது மிகவும் சேதமடைந்து உள்ளது. 

கூரையின் காரை பெயர்ந்து உதிர்ந்து விட்டது. உள்ளிருக்கும் இரும்பு கம்பிகள் வெளியில் தெரிகின்றன. துருப்பிடித்த நிலையில் கம்பிகள் இருப்பதால் கட்டடத்தின் கூரை எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் கட்டடத்தின் பக்கவாட்டுச் சுவர்கள் விரிசல் அடைந்தும் ஜன்னல்கள் சேதமடைந்தும் காணப்படுகின்றன. நியாய விலை கடையின் முன்பகுதியில் தரையில் உள்ள சிமென்ட் பெயர்ந்து பள்ளமாக காட்சியளிக்கிறது. மழைக்காலத்தில் இந்த கட்டடத்தில் தண்ணீர் உட்புகுந்து உள்ளிருக்கும் பொருட்கள் நனைந்து வீணாகி விடுகின்றன. 

இதனால் பணிபுரியும் ஊழியர்களும் கடைக்கு வரும் பொதுமக்களும் அச்சத்தில் வந்து செல்கின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் பாழடைந்த இந்த கட்டடத்தை இடித்து அகற்றி புதிய கட்டடம் கட்டித் தருமாறு பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Label