OUR CLIENTS
உள்ளாட்சி தேர்தல் நடக்குமா?
உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? Posted on 11-Jul-2019 உள்ளாட்சி தேர்தல் நடக்குமா?

சென்னை, ஜூலை 11-
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை 2017ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதிக்குள் வெளியிட்டு, நவம்பர் 17ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கவேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 4.9.2017ம் தேதி உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை. 

உள்ளாட்சி தேர்தலும் நடத்தப்படவில்லை. இதனால், பெருநகர் முதல், கடைக்கோடி கிராமம் வரை, குடிநீர் விநியோகம், தார்ச்சாலை, தெருவிளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகள் எதுவுமே மேற்கொள்ளப்படவில்லை. இதனால், மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சி நிர்வாக குளறுபடி தொடர்பான பிரச்னைகளை யாரிடம் போய் புகார் தெரிவிப்பது என தெரியாமல் மக்கள் திக்குமுக் காடுகின்றனர். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். 

அந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்ளாட்சி தேர்தலை இன்னும் ஏன் நடத்தவில்லை, காலதாமதம் ஏன்? பதிலை 2 வாரத்திற்குள் பிரமாண பத்திரமாக சமர்ப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. வழக்கு விசாரணை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

இவ்வழக்கு விசாரணை, கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தபோது, இதேபோல் சென்னை உயர்நீதிமன்றமும் தமிழக அரசுக்கு சாட்டையடி கொடுத்தது. நீதிபதிகள் சத்தியநாராயணன், சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவில், ஏற்கனவே போதுமான அளவு காலஅவகாசம் வழங்கப்பட்டு விட்டது.  2016ல் நடத்த வேண்டிய உள்ளாட்சி தேர்தல் இரண்டு ஆண்டு ஆகியும் இன்னும் நடத்தப்படவில்லை. மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்தியாக இல்லை, இதே நிலை நீடித்தால் 2019ம் ஆண்டு வரைகூட தேர்தல் நடத்தி முடிக்க மாட்டீர்கள் என சாட்டையடி கொடுத்தனர். 

நீதிமன்றங்கள் மூலம் அடுத்தடுத்து குட்டு வாங்கியும் தமிழக அரசு இன்னும் விழித்துக்கொள்ளவில்லை.  திட்டமிட்டு ஏதாவது ஒரு காரணத்தை கூறி உள்ளாட்சி மன்ற தேர்தலை நடத்தாமல் தமிழக அரசு இழுத்தடித்து வருகிறது என்பது ஊர் அறிந்த விஷயம். சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை பின்பற்றி அதன்படி நடக்கவேண்டியது அரசின் கடமை. இனியும் தமிழக அரசு விழித்துக் கொள்ளாவிடில் மக்கள் விழித்துக் கொள்வார்கள்.

 தமிழக அரசின் இழுத்தடிப்பு நடவடிக்கை மக்களிடையே கடும் கோபத்தை உருவாக்கியுள்ளது. இதை, ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல், இனியும் காலம் தாழ்த்தினால் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள்போல் அடுத்தடுத்து தேர்தல் முடிவுகள் வெளிவரும் என்பதில் சந்தேகம் இல்லை. 

நீதிமன்றங்கள் கரடியாக குரல் உயர்த்தியும், கண்டித்தும், கடிந்தும் நடவடிக்கை எடுப்பதாக மிரட்டியும் தமிழக அரசு பணியவில்லை. காரணம் உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் நிலைமை என்ன ஆகுமோ என்ற ஒரு இனம் காணாத பயம் உள் மனதில் ஒருபுறம் எழுந்துள்ளது மட்டும் தெள்ளத் தெளிவாக புலனாகிறது. இதனால் மக்களிடம் கடும் சரிவை ஆளும்கட்சி சந்திக்க கூடும் என்பதால் கெட்டப் பாதி, செட்டப் மீதி என்ற ரீதியில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது ஆளும் கட்சி என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆதலால் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? என்ற ஐயப்பாடு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் நிலைப்பாட்டை புரிந்து கொள்ள முடியவில்லை என்பது மட்டும் நிதர்சன உண்மையாகும். 

Label