OUR CLIENTS
கர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகரை இன்று சந்திக்க உச்சநீதிமன்றம் ஆணை
கர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகரை இன்று சந்திக்க உச்சநீதிமன்றம் ஆணை Posted on 11-Jul-2019 கர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகரை இன்று சந்திக்க உச்சநீதிமன்றம் ஆணை

புதுடெல்லி, ஜூலை 12-

    ராஜினாமா கடிதம் கொடுத்த கர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகர் முன்பு இன்று மாலை ஆஜராக   அவர் கோரும் விளக்கமளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக அங்கு குழப்பமான அரசியல் சூழ்நிலை நிலவிவந்த நிலையில், சில நாட்களாக பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.


இந்நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்களும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். மேலும் 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர்

குமாரசாமி அரசு மெஜாரிட்டி பலத்தை இழந்துவிட்டதால் குமாரசாமி அரசு பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சியான பாஜக வலியுறுத்தி வருகிறது. அதேசமயம், ஆட்சியை கவிழ்ப்பதற்காகவே தங்கள் கட்சி எம்எல்ஏக்களிடம் பேரம் பேசி அவர்களை பாஜக ராஜினாமா செய்ய வைத்திருப்பதாக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.


இதற்கிடையில், எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்றுக்கொள்ளாமல் இருந்துவருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்த எம்.டி.பி.நாகராஜ், கே.சுதாகர் ஆகியோர் நேற்று தங்கள் எம்எல்ஏ பதவியை விட்டு விலகினர். அவர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் கொடுத்தனர். இதனால் பதவி விலகிய எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. ராஜினாமா செய்த எம்எல்ஏக்களில் 12 பேர், மும்பை அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பாந்திரா பகுதியில் உள்ள சோபிடெல் என்ற நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


இதற்கிடையே பதவி விலகிய எம்.எல்.ஏ.க்களில் பிரதாப் கவுடா பாட்டீல், ரமேஷ் ஜார்கிகோளி, பைரதி பசவராஜ், பி.சி.பாடீல், எஸ்.டி.சோமசேகர், அர்பைல் சிவராம் ஹெப்பார், மகேஷ் குமதல்லி, கே.கோபாலையா, எச்.டி.விஸ்வநாத், நாராயண் கவுடா ஆகிய 10 பேர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், தங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் சபாநாயகர் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாகவும், ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக தங்களை பதவிநீக்கம் செய்ய முயற்சிப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.


மேலும் தங்கள் ராஜினாமாவை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிடுமாறும், அவர் தங்களை பதவி நீக்கம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் 10 எம்எல்ஏக்களும் கேட்டுக்கொண்டனர்.

இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு வியாழனன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றனர். அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.


அப்போது நீதிபதிகள், எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம் குறித்து பதிலளிக்க கர்நாடக சட்டசபை சபாநாயகர் அலுவலகத்திற்கு உத்தரவிட்டனர். ராஜினாமா கடிதம் கொடுத்த எம்எல்ஏக்கள் 10 பேரும் இன்று மாலை 6 மணிக்குள் சபாநாயகர் முன்பு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். சபாநாயகர் ராஜினாமாக்கள் குறித்து இன்று முடிவு எடுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


சபாநாயகர் எடுத்த முடிவை நாளை நீதிமன்றத்தில் தெரிவிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குமாறு கர்நாடக டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், விசாரணையை நாளை   (ஜூலை 12) ஒத்திவைத்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவினால், கர்நாடக அரசியலில் இன்று இரவுக்குள் ஒரு முடிவு கிடைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Label