OUR CLIENTS
கொப்பரை தேங்காய்க்கு ஆதார விலை நிர்ணயம்
கொப்பரை தேங்காய்க்கு ஆதார விலை நிர்ணயம் Posted on 12-Jul-2019 கொப்பரை தேங்காய்க்கு  ஆதார விலை நிர்ணயம்


சென்னை, ஜூலை 12
கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக 99 ரூபாய் 20 பைசா நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், இன்று முதல் அடுத்த ஆறு மாதங்களுக்கு கொள்முதல் செய்யப்படும் எனவும் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு, பொள்ளாச்சி ஜெயராமன், கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, கிலோவுக்கு 100 ரூபாய் 21 பைசாவாக நிர்ணயிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து பேசிய வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, தமிழகத்தில் 4 லட்சத்து, 35 ஆயிரத்து 621 ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது என்றும், 470 கோடியே 64 லட்சம் தேங்காய்கள்  உற்பத்தியாவதாகவும் குறிப்பிட்டார். கொப்பரை தேங்காய்களுக்கு நல்ல விலை கிடைக்கும் பொருட்டு தேங்காய் அதிகம் விளையும் மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரைகள், குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்யப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். 

தென்னை விவசாயிகளிடமிருந்து எளிதில் கொள்முதல் செய்வதற்காக, கொள்முதல் மையங்களை திறக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மத்திய அரசு அறிவித்த குறைந்த பட்ச ஆதார விலையின் அடிப்படையில், பந்து கொப்பரை கிலோ ஒன்றுக்கு 99 ரூபாய் 20 பைசா வீதத்திலும், அரவை கொப்பரை கிலோ ஒன்றிற்கு 95 ரூபாய் 21 பைசா வீதத்திலும் கொள்முதல் செய்யப்படும் எனவும் துரைக்கண்ணு கூறினார்.

இன்று முதல் அடுத்த ஆறு மாத காலத்திற்கு கொள்முதல் பணி நடைபெறும் எனவும் அவர் விளக்கமளித்தார். ஆறு மாதங்களில் 5 ஆயிரம் மெட்ரிக் டன் பந்து கொப்பரையும், 45 ஆயிரம் மெட்ரிக் டன் அரவைக் கொப்பரையும் கொள்முதல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

விவசாயிகள் கொள்முதல் நிலையங்களை அணுகி தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அவர் கூறினார். பெயர்களை பதிவு செய்யும் போது நில சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்தார்.

Label