OUR CLIENTS
ஆபத்தான சமுதாய நல கூடம் அகற்றப்படுமா?
ஆபத்தான சமுதாய நல கூடம் அகற்றப்படுமா? Posted on 12-Jul-2019 ஆபத்தான சமுதாய நல கூடம் அகற்றப்படுமா?

கன்னியாகுமரி, ஜூலை 12-
செண்பகராமன்புதூர் பகுதியில் கடந்த 1999- 2000 ஆண்டின் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து செண்பக விநாயகர் சமுதாய நல கூடம் கட்டப்பட்டது. 

இந்த கட்டடத்தை பொது மக்கள் தங்களது வீடுகளில் நடைபெறுகின்ற சுப காரியங்களுக்கு பயன்படுத்தி வந்தனர். கட்டடம் நாளடைவில் ஆங்காங்கே பழுதான நிலையில் 2006 -2007 ஆம் ஆண்டு மீண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பழுது பார்க்கப்பட்டது. கட்டடத்தை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வந்த நிலையில் அதன் பக்க சுவர்களில் விரிசல் விழ தொடங்கியது. 

இந்த விரிசல் நாளடைவில் பெரியதாகி பக்க சுவர் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுகின்ற நிலைக்கு மாறியது. மேலும் கட்டடத்தின் மாடிக்கு செல்கின்ற படிக்கட்டு துண்டாக உடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழுகின்ற நிலையில் உள்ளது. இதனால் கட்டடத்தை பொதுமக்கள் பயன்படுத்துவதை படிப்படியாக நிறுத்திவிட்டனர். தற்போது அங்கு எந்த நிகழ்ச்சியும் நடப்பது இல்லை. கட்டடத்தின் அருகே கோவில் உள்ளதால் பொதுமக்கள் அதிக அளவில் அந்த பகுதிக்கு வந்து செல்கின்றனர்.  இதே போல் அருகிலேயே விளையாட்டு மைதானமும் உள்ளது. ஆகவே இளைஞர்களின் நடமாட்டமும் அந்த பகுதியில் உள்ளது. தற்போது சமுதாய நல கூட கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலைதான் உள்ளது. இதனால் அந்த பகுதிக்கு வரும் பொதுமக்கள், இளைஞர்களுக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. 

எனவே ஆபத்து நிகழ்வதற்கு முன்பு கட்டடத்தை இடிக்க வேண்டும் எனவும், புதிதாக மீண்டும் ஒரு சமுதாய நல கூடம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label