OUR CLIENTS
தீவனப்பயிர் சாகுபடிக்கு அரசு மானியம்
தீவனப்பயிர் சாகுபடிக்கு அரசு மானியம் Posted on 21-Sep-2016 தீவனப்பயிர் சாகுபடிக்கு அரசு மானியம்

சேலம்:
சேலம் மாவட்டத்தில் 2016-2017 ஆம் ஆண்டில் அரசு மானியத்துடன் கூடிய  தீவனப்பயிர்  சாகுபடி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.


கால்நடைகளின் உற்பத்தி திறனுக்கு தீவனம் மற்றும்  பசுந்தீவனம் மிகவும் இன்றியமையாத காரணிகள் ஆகும். பால் உற்பத்தியை   பெருக்குவதற்கு  கறவைமாடுகளுக்கு தேவையான அளவு பசுந்தீவனம்  வழங்குவது  மிகவும் இன்றியமையாதது. கால்நடைகளுக்கான மொத்த உற்பத்தி செலவினத்தில் 75 சதவீதம் தொகை  தீவனம் மற்றும்  பசுந்தீவன உற்பத்திக்கு மட்டுமே  செலவிடப்படுகிறது.

எனவே,  தீவன  பற்றாக்குறையை  நிவர்த்தி செய்யும் வகையிலும்,  கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழக அரசு கடந்த  5  ஆண்டுகளாக மாநில தீவன அவிருத்தி  திட்டத்தை (State Fodder Development Scheme)  செயல்படுத்தி  வருகிறது. நடப்பு  2016-2017 -ஆம் நிதியாண்டில் அரசு மானியத்துடன் கூடிய தீவனப்பயிர் சாகுபடி  திட்டங்களை செயல்படுத்தப்பட உள்ளது.
    
இறவையில்  கம்பு,  நேப்பியர் தீவனப்பயிர்  1/4  ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்திட தீவன புல் கரணைகள் பயனாளிகளுக்கு அதிகபட்சம் 1 ஏக்கருக்கு  வழங்கப்படும்.  மானாவரியில்  1/4   ஏக்கர்   பரப்பில்  தீவன சோளம் மற்றும் தீவன தட்டைப்பயிறு  சாகுபடி செய்திட  தீவன விதைகள் பயனாளிகளுக்கு அதிகபட்சம்  2 ஏக்கருக்கு வழங்கப்படும். முற்போக்கு  விவசாயிகள்  மூலம்  சான்றிதழ்  பெற்ற தீவனச்சோளம் மற்றும் தீவன தட்டைப்பயிறு  விதைகளை உற்பத்தி  செய்வதற்கு தீவன விதைகள்  இலவசமாக வழங்கப்படும்.  கால்நடைகள் வளர்ப்போரிடையே  நவீன தீவன உற்பத்தி முறைகள்  குறித்து  ஒரு  நாள் பயிற்சி புதுக்கோட்டை  மாவட்ட  கால்நடைப்பண்ணையில்  வழங்கப்படும்.

தீவனப்பயிர் அதிக  அளவில்  கிடைக்கும்  காலங்களில்  அவற்றை சேகரித்து,  பதப்படுத்தி, ஊறுகாய்ப்  புல்லாக கால்நடைகளுக்குத் தீவனப்பற்றாக்குறை  காலங்களில் வழங்குவதற்கேற்ப  ஒரு  பயனாளிக்கு  ஊறுகாய்ப்புல் தயாரிக்கும்   பொருட்டு   250  கிலோ கொள்ளளவு  கொண்ட 4  சைலேஜ்  பைகள் இலவசமாக   வழங்கப்படும். மின்சாரத்தால் இயங்கும்  புல் நறுக்கும்  கருவிகள் நிறுவுவதற்கு 60ரூ சதவீதம் மானியம் வழங்கப்படும். அசோலா திடல்  அமைக்க 100  சதவீத மானியத்துடன்  ஒவ்வொரு பயனாளிக்கும் அதிகபட்சம் 2  அசோலா அலகுகளுக்கு  வழங்கப்படும்.
    
மரவகை தீவனத்தின் முக்கியத்துவத்தை  உணர்த்த  கல்யாணமுருங்கை, அகத்தி, சூபாபுல்  போன்ற மரக்கன்றுகள்  விவசாயிகளுக்கு வழங்கப்படும். மரவகை தீவனப்பயிர் உற்பத்தியை பெருக்குதல் மூலம் கோடை மற்றும் தீவன பற்றாக்குறைக்  காலங்களில்  தீவனம்  கிடைக்கச்  செய்ய  வேண்டும்.  விலையில்லா  ஆடுகள் வழங்கப்பட்ட  பயனாளிகளுக்கு 10 அகத்தி மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்.  எனவே இத்திட்டங்களில்  பயனடைய  விரும்பும்  விவசாயிகள் அருகிலுள்ள  கால்நடை மருந்தக கால்நடைஉதவி  மருத்துவரை அணுகி விண்ணப்பங்களை  அளிக்கலாம்.

Label