OUR CLIENTS
நீஸ் தாக்குதலுக்கு ஐ.நா., உலக தலைவர்கள் கண்டனம்
நீஸ் தாக்குதலுக்கு ஐ.நா., உலக தலைவர்கள் கண்டனம் Posted on 16-Jul-2016 நீஸ் தாக்குதலுக்கு ஐ.நா., உலக தலைவர்கள் கண்டனம்

பாரீஸ்:
பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் நேற்று முன்தினம் இரவு பாஸ்டில் தின கொண்டாட்டங்களின்போது கூட்டத்தினர் மீது பயங்கரவாதி ஒருவன் லாரியை மோதி தாக்குதல் நடத்தி, 84 பேரை கொன்று குவித்திருப்பது உலகமெங்கும் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஒருசேர உருவாக்கி உள்ளது.

இந்த தாக்குதலுக்கு உலகத்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“இந்த தாக்குதல் காட்டுமிராண்டித்தன தாக்குதல், கோழைத்தனமான தாக்குதல்” என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டித்துள்ளது.

மேலும், “எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் குற்றம்தான். அதை நியாயப்படுத்த முடியாது” எனவும் கூறியது. அது மட்டுமின்றி பிரான்ஸ் தயாரித்த கண்டன தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒருமனதாக நிறைவேற்றி உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, பிரான்ஸ் தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்கையில், “அமெரிக்க மக்களின் சார்பில், இந்த தாக்குதலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இது ஒரு கொடூரமான பயங்கரவாத தாக்குதல் ஆகும். இந்த தருணத்தில் எங்கள் பழமையான கூட்டாளியான பிரான்சுடன் அமெரிக்கா ஒன்றுபட்டு, தோள் சேர்ந்து நிற்கிறது. இந்த தாக்குதலில் இருந்து பிரான்ஸ் மீண்டு வரும்” என கூறினார்.

“இந்த துயரமான தருணத்தில், பிரான்ஸ் மக்களுடன் அமெரிக்கா தொடர்ந்து உறுதிபட நிற்கும். அவர்களுக்கு என்ன ஆதரவு தேவை என்றாலும் அதை வழங்குவோம்” என அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி தெரிவித்தார்.

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், “பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் பிரான்சுடன் ஜெர்மனி சேர்ந்து நிற்கும். பிரான்ஸ் கூட்டாளிகள் வார்த்தைகளை அரிதாகவே வெளிப்படுத்த முடியும்” என குறிப்பிட்டார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூதியு, “நேற்று இரவு (நேற்று முன்தினம் இரவு) நீஸ் நகரில் நடந்த இந்த தாக்குதல், கனடா மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. பாதிப்புக்கு ஆளான மக்களுக்கு எங்களின் அனுதாபங்கள். பிரான்ஸ் மக்களுடன் இந்த நேரத்தில் நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்” என ‘டுவிட்டர்’ வலைத்தளத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயின் செய்தி தொடர்பாளர், “இது ஒரு பயங்கரமான சம்பவம். நாங்கள் அதிர்ச்சியில் உறைந்து போனோம். மிகுந்த கவலைக்குள்ளாகி இருக்கிறோம்” என்று கூறினார்.

ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்க், “இந்த நாள் பிரான்சுக்கு ஒரு மோசமான நாள். உரிமையை, சமத்துவத்தை, சகோதரத்துவத்தை கொண்டாடியபோது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் மிகவும் துயரமான நிகழ்வு ஆகும்” என கூறி உள்ளார்.

தொடர்ந்து பயங்கரவாத தாக்குதலுக்கு ஆளாகி வரும் துருக்கி நாட்டின் பிரதமர் பினாலி யில்டிரிமும் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Label