தமிழியல் பட்டப்படிப்பில் புலம்பெயர் மாணவர்கள் உலக சாதனை Posted on 29-Sep-2016
பிரான்ஸ்:
பிரான்ஸ் தமிழ்ச் சோலை தலைமைப் பணியகம் தமிழ் இணையப் பல்கலைக்கழத்துடன் சேர்ந்து நடத்தும் தமிழியல் இளங்கலைமாணி பட்டப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் புலம்பெயர் மண்ணில் பிறந்த மாணவிகள் உலக சாதனை படைத்துள்ளனர்.
2016 ஆண்டில் நடைபெற்ற நுழைவுத் தேர்வில் செல்வி. பரமேஸ்வரன் சுசானி ,எழுத்துப்பகுதி மற்றும் இணைய வழி வினாக்கள் என இரண்டு பகுதிக்கும் மொத்தமாக 96 புள்ளிகள் பெற்றுள்ளார். இதேவேளை 2015 ஆண்டில் நடைபெற்ற நுழைவுத் தேர்வில் செல்வி தட்சாயணி தங்கதுரை இணைய வழித் தேர்வில் 100 புள்ளிகளை பெற்று சாதனை படைத்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த தமிழியல் இளங்கலைமாணி பட்டப்படிப்பு கடந்த மூன்று வருடங்களாக நடந்து வருகிறது. ஏற்கனவே பட்டப்படிப்பை முடித்து இரண்டு தொகுதி மாணவர்கள் பட்டம் பெற்று வெளியேறியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழ்ச்சோலையில் பன்னிரண்டாம் ஆண்டு வரை தமிழ்க் கல்வி கற்ற புலம்பெயர் மண்ணில் பிறந்த மாணவர்கள் நுழைவுத் தேர்வு மூலம் பட்டப்படிப்பில் நுழைந்து வருகின்றனர். அவர்களாலேயே இந்த சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.