புதன்கிழமை நள்ளிரவு எல்லை கடந்த தாக்குதல் : அமெரிக்கா, சீனா உட்பட 25 நாட்டு தூதர்களுக்கு தகவல் தெரிவித்த இந்தியா! Posted on 30-Sep-2016
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலம் யூரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா புதன்கிழமை இரவு
12.30 மணி முதல் அதிகாலை 4.30 மணிவரை ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் எல்லைக்குள்
புகுந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும், தீவிரவாத இலக்குகளை குறிவைத்து
நடத்தும் தாக்குதலை வெற்றிகரமாக முடித்து சுமார் 40 தீவிரவாதிகளை கொன்று
குவித்து ஆபத்தின்றி திரும்பியது.
இதுபற்றி
டெல்லியில், 25 நாடுகளின் தூதர்களிடம் மத்திய வெளியுறவுத்துறை விளக்கம்
அளித்துள்ளது. மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப்
கூறும்போது, "பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதல் குறித்து
டெல்லியில் உள்ள அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 25
நாடுகளின் தூதர்களிடம் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் எஸ்.ஜெயசங்கர்
தகவல் தெரிவித்தார்.
காஷ்மீர் மற்றும் இதர இந்திய நகரங்களில்
தாக்குதல் நடத்துவதற்காக தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதால் அந்த
முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் எடுத்துரைத்தார். இதுபோன்று
மேற்கொண்டு தாக்குதல் நடத்தும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்றும், அதேநேரம்
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதை பாதுகாப்புப் படையினர் அனுமதிக்க
மாட்டார்கள் என்றும் அவர்களிடம் கூறினார்" என்றார்.