OUR CLIENTS
நான் அமெரிக்க அதிபரானால் ஹிலாரியை சிறையில் தள்ளுவேன்: டிரம்ப் ஆவேசம்
நான் அமெரிக்க அதிபரானால் ஹிலாரியை சிறையில் தள்ளுவேன்: டிரம்ப் ஆவேசம் Posted on 10-Oct-2016 நான் அமெரிக்க அதிபரானால் ஹிலாரியை சிறையில் தள்ளுவேன்: டிரம்ப் ஆவேசம்

செயின்ட் லுாயிஸ்:
அமெரிக்கா அதிபராக நான் பொறுப்பேற்றால் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை சிறையில் அடைப்பேன் என டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.


அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிடுகிறார்கள்.

இவர்கள் இருவரும் பங்குபெற்ற இரண்டாவது நேரடி விவாத நிகழ்ச்சி இன்று மிசோரி மாநிலத்தின் செயிண்ட் லூயிஸ் நகரில் நடைபெற்றது. சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விவாதத்தில் இருவரும் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

விவாதத்தின் போது கொள்கைகள் தொடர்பான அம்சங்களைவிட ஒருவரையொருவர் தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்டுவதிலேயே பெரும்பகுதி நேரம் கழிந்தது. பெண்களைத் தரக்குறைவாகப் பேசியவர், வரிகட்டாமல் ஏமாற்றியவர் என டொனால்ட் மீது ஹிலாரி கிளிண்டன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.

அதற்கு பதில் அளித்த டிரம்ப், “அது, நடந்து முடிந்த பழைய கதை. நான் வெள்ளை மாளிகையில் அதிபராகும் வாய்ப்பைப்பெற்றால், ஹிலாரி கிளிண்டனைச் சிறையில் அடைப்பேன். அரசு அலுவல்களுக்காக தனிப்பட்ட இமெயில் சர்வரை பயன்படுத்தி, அதன்வழியாக நாட்டின் முக்கிய ரகசியங்கள் கொண்ட சுமார் 30 ஆயிரம் முக்கிய கடிதங்களை கசியவிட்டு, நாட்டின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கிய ஹிலாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அதை விசாரிக்கத் தனிப்பட்ட வழக்குரைஞரையும் நியமிப்பேன்” என்றார்.

தேசிய பாதுகாப்புக்குத் ஹிலாரி பங்கம் விளைவித்துவிட்டதாகவும் அவர் சாடினார். தமது செயல்களுக்காக ஹிலாரி வெட்கப்படவேண்டும் என்றும் டிரம்ப் கூறினார்.

இதற்கு பதில் அளித்த ஹிலாரி, “இவ்வளவு ஆவேசம் கொண்ட நபரை இந்த நாட்டின் சட்டத்தை பாதுகாப்பவராக வெள்ளை மாளிகைக்கு நீங்கள் (வாக்காளர்கள்) அனுப்பாமல் இருப்பது நல்லது” என்றார்.

இதற்கு பதிலடி கொடுத்த டிரம்ப், “ஏனென்றால், (நான் வெள்ளை மாளிகையில் சட்டத்தை பாதுகாக்கும் அதிபர் பொறுப்புக்கு வந்து விட்டால்) நீங்கள் சிறைக்கு போக வேண்டியதாகிவிடும்” என்று கூறினார்.

சிரியா விவகாரம், லிபியாவில் நடந்த யுத்தம், அகதிகள் பிரச்னை போன்றவை குறித்தும் பொதுமக்கள் கேள்வி எழுப்பினார்கள். ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க வேட்பாளர்களுக்கு 2 நிமிடங்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த விவாதத்தில் ஹிலாரியே டிரம்பை விடவும் சிறப்பாக செயல்பட்டதாக சி.என்.என். செய்தி நிறுவனம் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த விவாதம் டுவிட்டரிலும் டிரெண்டானது. விவாதம் தொடர்பாக மொத்தம் 1.7 கோடி பதிவுகள் இடப்பட்டன. இந்த வகையில் இந்த விவாதம் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

வரும் 19-ந் தேதி டிரம்ப் - ஹிலாரி ஆகியோருக்கு இடையிலான 3-வது நேரடி விவாத நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Label