OUR CLIENTS
மூடி மறைக்காததீர்கள்! : ஜெ., உடல்நிலை பற்றி விஜயகாந்த் தகவல்
மூடி மறைக்காததீர்கள்! : ஜெ., உடல்நிலை பற்றி விஜயகாந்த் தகவல் Posted on 12-Oct-2016 மூடி மறைக்காததீர்கள்! : ஜெ., உடல்நிலை பற்றி விஜயகாந்த் தகவல்

சென்னை:
தமிழக உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும், உரிய பாதுகாப்புடன் மக்கள் வாக்களிக்கும் வகையிலும் நடத்திட தேர்தல் ஆணையமும், ஆளுங்கட்சியும் மக்களுக்கு நம்பிக்கை தர வேண்டியது அவசியம். இன்றைய தமிழ்நாடு, நிரந்தர ஆளுநர் இல்லாத நிலையிலும், ஒரு மருத்துவமனையில் 15 நாட்களுக்கு மேல் அனுமதிக்கப்பட்டு செயல்படாத முதல்வரை கொண்டதாகவும் உள்ளது. தமிழகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு உடனடி கவனம் செலுத்தி உரிய முடிவுகளை எடுக்க முடியாத அரசாக இந்த அரசு உள்ளது. எனவே, முதல்வர் உடல்நிலை சீராகும் வரை அந்த பொறுப்புக்கு வேறு ஒரு நபரை இந்த அரசு தேர்ந்தெடுக்க வேண்டும். மருத்துவமனையில் நடக்கும் உண்மை நிலையை மக்களுக்கு அறிவிக்கும் வண்ணம் முதல்வர் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும்.


இந்த கருத்தை வலியுறுத்தி அனைத்து எதிர்கட்சியினர் கேட்டும், செவிடன் காதில் ஊதிய சங்கு போல அரசு செயல்படுவது முறையல்ல. நீங்கள் எதிர்கட்சி தலைவராகவோ அல்லது ஆட்சியில் இல்லாதவராகவோ இருந்தால் இதுபற்றி  யாரும் பேசவேண்டிய அவசியமில்லை. ஆளும் முதல்வர், வாக்களித்த மக்களுக்கு உங்கள் விளக்கத்தை தர வேண்டியது மிக முக்கியம். தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்றினீர்கள். இப்பொழுது மருத்துவமனையையே தலைமைச் செயலகமாக மாறி இருப்பது வருத்தம் அளிக்கிறது. அரசு தொய்வில்லாமல் செயல்படுவதைப் போல மக்களை நம்ப வைத்து கொண்டிருக்கிறீர்கள். மனிதனாக பிறந்த அனைவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போவதும், பின்னர் குணமடைவதும் இயற்கையான ஒன்று. எனவே மூடி மறைக்க வேண்டிய அவசியமில்லை என்பதை கருத்தில் கொண்டு உரிய அறிவிப்பை இந்த அரசு உடனே மேற்கொள்ள வேண்டும்.

லண்டனில் இருந்து வந்த மருத்துவர் மேலும் சில நாட்கள் ஜெயலலிதாவுக்கு ஓய்வு தர வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளனர். முதல்வரின் உடல்நிலை பற்றி அப்போலோ மருத்துவமனைதான் அதிகாரபூர்வ அறிக்கையை தருகிறது. ஆளுநர் வித்யாசாகர் தந்த அறிவிப்பை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளது. உண்மை நிலையை ஜெயலலிதா அவர்களே தன்னிலை விளக்கம் கொடுத்துவிட்டால் தொடர்ந்து மக்களிடையே பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். இவ்வாறு தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Label