OUR CLIENTS
வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ரூ.8.39 கோடி ஒதுக்கீடு : மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் தகவல்
வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ரூ.8.39 கோடி ஒதுக்கீடு : மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் தகவல் Posted on 26-Oct-2016 வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ரூ.8.39 கோடி ஒதுக்கீடு  : மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் தகவல்

தருமபுரி:
தருமபுரி  மாவட்ட விவசாயிகளின் உற்பத்தியினை இருமடங்காக பெருக்கவும் அதன் மூலம் வருவாயினை மும்மடங்காக உயர்த்த   தமிழக  அரசு பல்வேறு  வேளாண் திட்டங்களை அறிவித்துள்ளது.  அதன்படி தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல், தானியங்கள்,  பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள்  மற்றும் பருத்தி போன்ற பயிர்களில்  தரமான விதைகள் உற்பத்திக்கு  ஊக்கத் தொகை மற்றும் விதை விநியோகம்,  உயிர் உரம் விநியோகம், நுண்ணூட்ட சத்துக்கள்,  இயந்திர முறையில் சாகுபடி முறையினை ஊக்குவித்தல்,  ஜிப்சம் விநியோகம்,  இலைவழி டி.ஏ.பி  தெளித்தல, வரப்புகளில் பயறுவகை சாகுபடி,  பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி மற்றும் தென்னங்கன்று விநியோகம் ஆகிய இனங்களில் 50 சதவீத மான்யத்தில் திட்டம் செயல்படுத்தும் வகையில்  ரூ. 301 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பெருந்தானியங்கள் மற்றும் பயறு வகை பயிர்களில் உற்பத்தி திறன் மற்றும் உற்பத்தியினை அதிகரிக்கும் பொருட்டு  நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி 2500 எக்டர் பரப்பில்  செயல் விளக்கத் திடல்கள் அமைக்க ரூ.107 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  மேலும் தரமான பயறு வகைகள் உற்பத்தி ஊக்கத் தொகை மற்றும் விதைகள் விநியோகம்,  நுண்ணூட்டச் சத்துக்கள் விநியோகம், ஜிப்சம் விநியோகம் மற்றும் வேளாண் கருவிகளான  ரோடாவேட்டர், பூச்சி மருந்து தெளிப்பு கருவிகள், பம்பு செட், டிராக்டர் மற்றும் நீர் எடுத்து செல்லும் குழாய்கள் ஆகிய இனங்களில் திட்டம் செயல்படுத்தும் வகையில் ரூ.153.75 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய எண்ணெய் வித்து மற்றும் எண்ணெய்ப் பனை இயக்கத்தின் கீழ் நிலக்கடலை பயிரில்  தரமான விதைகள் உற்பத்தி மான்யம் மற்றும் விதைகள் விநியோகம் மற்றும் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி 450 எக்டர் பரப்பில் செயல்விளக்கத் திடல்கள் அமைக்க  ரூ.41.185 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  அதேபோன்று எண்ணெய்ப் பனை பயிரில் நடப்பு ஆண்டில் 40 எக்டர் பரப்பில் எண்ணெய்ப் பனை  செயல்விளக்கத் திடல் அமைக்க ஒரு எக்டருக்கு ரூ.8000/- வீதம் மொத்தம் ரூ. 3.2 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   கடந்த ஆண்டுகளில் சாகுபடி செய்யப்பட்ட எண்ணெய் பணை பயிர்களுக்கு  பராமரிப்பு மற்றும் ஊடுபயிர்  சாகுபடி மான்யம்,  கருவிகள் மற்றும் விவசாயிகள் பயிற்சி ஆகிய இனங்களை திட்டம் செயல்படுத்தும் வகையில் ரூ.8.71 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பருத்தி சாகுபடி இயக்கத்தின் கீழ் பருத்தியில் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்கும் பொருட்டு உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், களைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாட்டிற்கு பின்னேற்பு மான்யம் வழங்குதல் இனத்தில்  ரூ.35 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் - மானாவாரி மேம்பாடு திட்டத்தின்கீழ் விவசாயிகள் ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் சாகுபடி மேற்கொள்ளும் பொருட்டு   200 எக்டர் பரப்பில் இராகி மற்றும் கொள்ளு பயிர்களில் செயல்விளக்கத் திடல்கள் மற்றும் ஒரு கறவை மாடு வழங்கும் இனத்தில் எக்டர் ஒன்றுக்கு  ரூ.27500/- என்ற வீதத்தில் மொத்தம் ரூ.55 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இதேபோன்று 100 எக்டர் பரப்பில் கொள்ளு மற்றும் எள் பயிர்களில் செயல்விளக்கத் திடல்கள் மற்றும் ஆடுகள் வழங்கும் இனத்தில் எக்டர் ஒன்றுக்கு ரூ.23500/- என்ற வீதத்தில் மொத்தம் ரூ.23.55 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  மேலும்  நிலையான மற்றும் தற்காலிகமான மண்புழு உரக்கூடம் மற்றும் விவசாயிகள் பயிற்சி ஆகிய இனங்களை  செயல்படுத்தும் வகையில் ரூ.6.15 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மை முறையில் 250 ஏக்கரில் சாமை சாகுபடி மற்றும் அங்கக வேளாண்மை முறையில் சாகுபடி  செய்ய தேவையான வேளாண் இடுபொருட்¢கள் மான்யத்தில் வழங்கும் பொருட்டு ரூ.35.377 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

விதைக் கிராம திட்டத்தின் கீழ் நெல், சிறுதானியங்கள் , பயறுவகைகள்  மற்றும் எண்ணெய் வித்துக்கள் ஆகிய பயிர்களில் 324 மெ.டன் தரமான விதைகள் விநியோகம் மேற்கொள்ள மொத்தம் ரூ.65.705 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு வேளாண் திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு இவ்வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறு  மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

Label