OUR CLIENTS
சமாதானத்தை தரும் மன்னிப்பு
சமாதானத்தை தரும் மன்னிப்பு Posted on 25-Nov-2016 சமாதானத்தை தரும் மன்னிப்பு

இயேசு தனது போதனைகளில் அன்பையும், அதன் வெளிப்பாடான மன்னிப்பையும் தவறாமல் போதித்தார். தன்னைச் சுற்றி நின்ற சீடர்களிடம் ஒரு முறை இயேசு இப்படிச் சொன்னார்: ‘உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள்’. (மத்தேயு 5:44)

அன்பே அனைத்திற்கும் அடிப்படை என்பதை இயேசு வலியுறுத்தினார்.

‘மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்’. (மத்தேயு 6:14,15)

அந்த அன்பின் வெளிப்பாடு மன்னிப்பு வழியாய் மலர வேண்டும் என்பதையும் இயேசு தெளிவுபடுத்தினார். இயேசுவோடு இருந்த சீடர்களுக்கு இந்த போதனை விளங்கவில்லை.

பேதுரு ஒரு சந்தர்ப்பத்தில் இயேசுவிடம் கேட்டார், ‘ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்து வந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?’.

இயேசு அவரிடம், ‘ஏழு முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழு முறை என நான் உனக்குச் சொல்கிறேன்’ என்றார்.

அதாவது, ‘கணக்கு பார்க்காமல் மன்னிக்க வேண்டும்’ என்பதே அதன் உள்ளார்ந்த பொருள்.

எல்லோருக்கும் தெரிந்த பல உண்மைகள் உண்டு. அவற்றை நாம் நிரூபிக்கப்பட்ட உண்மைகள் என்று சொல்வோம். உதாரணமாக, இந்தியாவுக்கு மேற்கே இங்கிலாந்து இருக்கிறது என்று சொல்லலாம். அது பூலோக உண்மை.இரண்டு பங்கு ஹைட்ரஜனும், ஒரு பங்கு ஆக்சிஜனும் இணைந்தால் தண்ணீர் உருவாகும் என்பது விஞ்ஞான உண்மை.

இப்படி நம்மைச் சுற்றி நிலவுகின்ற உண்மைகள் பல. சொல்பவருடைய வாழ்க்கைத் தரத்தைப் பொறுத்து அல்லது அவருடைய குணாதிசயத்தைப் பொறுத்து, இத்தகைய நிரூபிக்கப்பட்ட உண்மைகள் மாறப்போவதில்லை.

ஆனால் அறநெறி உண்மைகள் அப்படியல்ல. ஒருவனுடைய வாழ்க்கையும், அவனுடைய போதனைகளும் நேர்கோட்டில் இல்லாவிட்டால் மக்கள் அவனுடைய போதனையை ஏற்றுக்கொள்வதில்லை.

இயேசு மக்களுக்கு அன்பையும் மன்னிப்பையும் போதித்தார். அவருடைய வாழ்க்கையில் அவர் அவற்றை முழுமையாய்க் கடைப்பிடிக்காமல் இருந்திருந்தால் அவரது போதனைகள் வலுவிழந்திருக்கும், நிராகரிக்கப்பட்டிருக்கும். ஆனால் இயேசுவோ தனது வாழ்வில் எல்லாவற்றையும் இயல்பாகவே கடைப்பிடித்தார்.

மனித இயல்புகள் அடிக்கடி மாறும். ‘நீ நல்லவனா இருந்தா நானும் நல்லவனா இருப்பேன், நீ மிருகமானா நானும் மிருகமாவேன்’ என்றும், ‘ஒரு மனுஷன் எவ்வளவு தான் பொறுத்துப் போவான்’ என்றும் மனித உணர்வுகள் பேசும்.

ஆனால் இயேசு அப்படியல்ல. அதன் உயர்ந்தபட்ச உதாரணம் சிலுவைக் காட்சியில் நிகழ்ந்தது. இயேசுவின் மண்ணுலக வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் அவரை சிலுவையில் அறைந்தார்கள். தாங்கள் செய்வது பாவம் என்பது கூட அந்த ஆணி அடித்த காவலர்களின் மனதில் உறைக்கவில்லை. அவரை துன்புறுத்திய மக்களுக்குப் புரியவில்லை. அவரை ஏளனம் செய்தவர்களுக்கு விளங்கவில்லை. எனவே அவர்கள் யாரும் இயேசுவிடம் மன்னிப்பைக் கேட்கவும் இல்லை.

ஆனால், கேட்காமலேயே மன்னிப்பவர் இயேசு. ஒரு முறை 38 வருட காலம் நோயுற்று இருந்த மனிதனைத் தேடி சென்றார். அவரை யாரும் அழைக்கவில்லை. தாமாகவே சென்று அவருக்கு உதவி செய்தார். எழும்ப முடியாமல் கிடந்தவனை நடக்க வைத்தார்.

இங்கே சிலுவையிலும் அதைத்தான் செய்தார். ‘தந்தையே இவர்களை மன்னியும்’ என செபித்தார். வாழ்வின் ஓரத்திலும் அவர் மன்னிப்பின் ஈரத்தை விட்டு விடவில்லை.

நமது வாழ்க்கையில் நம்மைத் தேடி வரும் மக்களுக்கு நாம் உதவி செய்வதுண்டு. நம்மைத் தேடி வராதவர்கள் தேவையில் இருப்பதைக் கண்டால் நாமாகவே சென்று உதவுகிறோமா?.

ஒரு நபர் தேவையில் இருக்கிறார் என்றால் அது நமக்கு நன்றாகவே தெரியும். அவருக்கு என்ன உதவி தேவை என்பதும் தெரியும். ஆனாலும் கண்டும் காணாததுமாய் சென்று விடுவோம். அது தவறு. இறைமகன் இயேசு நமக்குப் போதிப்பது நாமாகவே சென்று உதவும் பாடத்தையே!

நாம் தவறு செய்த மனிதர்களைப் பார்க்கிறோம், அவர்கள் செய்த தவறுகள், அவர்கள் ஏற்படுத்திய வலிகள் நமக்குத் தெரிகின்றன. அதனால் தான் மன்னிப்பு நமக்கு எளிதாய் வருவதில்லை. அதை விடுத்து, இறைவனை நாம் பார்க்க வேண்டும். அப்போது பிறர் செய்த வலிகள் மறைந்து, இறைவன் செய்த பலி நினைவில் நிலைக்கும். மன்னிப்பு எளிதாக வரும். மன்னிப்புக்கு ஒரு ‘சிறப்பு சக்தி’ உண்டு. அது சமாதானத்தை தருகிறது. மன்னிப்பவருக்கும், மன்னிக்கப்படுபவருக்கும் அது நிம்மதியைத் தரும்.

1832-ம் ஆண்டு பாரீஸ் நகரம் காலராவினால் கொடுமையாய் பாதிக்கப்பட்டிருந்தது. அவர்களிடையே பணி செய்தார் அருட்சகோதரி மேரி. ஒரு நாள் மருத்துவப் பணிக்குச் செல்லும் வழியில் ஒரு மனிதர் அவரை தரக்குறைவாய் சபித்து, திட்டிக்கொண்டே இருந்தார். மேரி அமைதியாகச் சென்று விட்டார். நாட்கள் சென்றன, அதே மனிதர் காலராவினால் பாதிக்கப்பட்டார். அருட்சகோதரி மேரி அவரை மருத்துவமனையில் சேர்த்து மருத்துவம் செய்தார்.

எட்டு நாட்களுக்குப் பின், அவர் கண் விழித்தார். கண்ணீர் விட்டார். ‘என்னைக் காப்பாற்றிய அந்த தேவதையை என் கண்களில் காட்டுங்கள்’ என புலம்பினார். அருகில் இருந்த சகோதரிகள் சொன்னார்கள், ‘சகோதரி மேரி காலராவினால் பாதிக்கப்பட்டு நேற்றே இறந்து போனார்’.

‘மன்னிப்பை வழங்கியவர் மரித்துப் போகலாம், வழங்கிய மன்னிப்பு மரிப்பதில்லை’. நாம் மன்னிக்கக் கற்றுக்கொள்வோம். கேட்பவர்களுக்கு மட்டுமல்ல கேட்காதவர்களுக்கும் மன்னிப்பை வழங்குவோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

Label