OUR CLIENTS
‘இந்தியாவை பிளவுபடுத்த பாகிஸ்தான் சதி’ : ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
‘இந்தியாவை பிளவுபடுத்த பாகிஸ்தான் சதி’ : ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு Posted on 12-Dec-2016 ‘இந்தியாவை பிளவுபடுத்த பாகிஸ்தான் சதி’ : ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

கதுவா
இந்தியாவை பிளவுபடுத்த பாகிஸ்தான் சதி செய்வதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.


காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில் தியாகிகள் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இது தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாம் கடந்த 1947-ல் மத அடிப்படையில் பிரிவினைக்கு உள்ளானோம். அதை நம்மால் ஒருபோதும் மறக்க முடியாது. தற்போதும் இந்தியாவை மதரீதியாக பிளவுபடுத்த பாகிஸ்தான் சதி செய்கிறது. ஆனால் இது வெற்றி பெறாது. இந்தியர் அனைவரும் சகோதரர்கள்.

உலகில் வேறெங்கிலும் இல்லாத வகையில் இஸ்லாமியர்கள் இங்கு அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து வளர்ச்சியின் பாதையில் நடைபோடவே இந்தியா உறுதிபூண்டுள்ளது என்பதை உள்துறை மந்திரி என்ற முறையில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

பயங்கரவாதத்தை ஒழிக்க விரும்பியும் அதற்கான திறனின்றி இந்தியாவின் ஒத்துழைப்பை பாகிஸ்தான் விரும்பினால், அங்கு பயங்கரவாதத்தை ஒழிக்கும் பணிகளுக்கு உதவி புரிய இந்தியா தயாராக உள்ளது. பாகிஸ்தானுடன் அமைதியான முறையில் செல்லவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அவர்கள்தான் இந்தியாவுக்கு எதிராக மறைமுக போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாகிஸ்தானுடன் சீரான உறவுகளை தொடரவே இந்தியாவின் ஒவ்வொரு பிரதமரும் விரும்பினர். ஆனால் அமைதியின் மொழியை புரிந்து கொள்ளாத பாகிஸ்தான் இந்தியாவை 4 முறை தாக்கியது. ஆனால் துணிச்சல் மிக்க நமது வீரர்கள் அவர்களுக்கு தகுந்த பதிலடியை கொடுத்தனர்.

இந்த தொடர் தோல்விக்குப்பின் இந்தியாவை போரில் வீழ்த்த முடியாது என்பதை பாகிஸ்தான் உணர்ந்து கொண்டது. எனவே மறைமுக போரை பாகிஸ்தான் ஆதரித்து வருகிறது. பயங்கரவாதம் என்பது பலவீனத்தின் ஆயுதமே தவிர, வீரத்தின் ஆயுதமல்ல.

எனவே, இந்த நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் பாகிஸ்தான் 10 துண்டுகளாக உடையும். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

இதற்கிடையே பாகிஸ்தானின் சதி தொடர்பான ராஜ்நாத் சிங்கின் தகவலை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குறை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘ஆம் ராஜ்நாத் சிங்ஜி, இந்தியாவை மதரீதியாக பிளவுபடுத்த பாகிஸ்தான் முயன்று வருவது உண்மைதான். நீங்களும், உங்கள் தலைவரும் (பிரதமர் மோடி) அதையே செய்வதால்தான் இது உங்களுக்கு உறுத்தியதா?’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Label