OUR CLIENTS
நாடாளுமன்றத்தில் பேசாமல் வெளியில் பேசுவதா? : மோடியின் செயலுக்கு வீரமணி கண்டனம்
நாடாளுமன்றத்தில் பேசாமல் வெளியில் பேசுவதா? : மோடியின் செயலுக்கு வீரமணி கண்டனம் Posted on 14-Dec-2016 நாடாளுமன்றத்தில் பேசாமல் வெளியில் பேசுவதா? : மோடியின் செயலுக்கு வீரமணி கண்டனம்

சென்னை
நாடாளுமன்றத்திற்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டிய பிரதமர் வெளியில் பேசிக் கொண்டு இருப்பது ஒரு பிரதமருக்கான செயல் அல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி கூறியுள்ளார்.


இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் நவம்பர் 8-ம் தேதி அன்று அறிவித்த பிறகு, இன்னமும், வங்கிகளின் முன் வரிசையில் நின்று தமது பணத்தை தங்கள் செலவுக்கு எடுக்க முடியாமல் புது நோட்டுகள் பற்றாக்குறை, ஏடிஎம் மிஷினில் போதிய இருப்பின்மை, போன்ற பல காரணங்களால் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர வங்கி வாடிக்கையாளர்களின் வேதனைக்கும், அவலங்களுக்கும் இன்னமும் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. வரிசையில் கால்கடுக்க நின்று, மயக்கம்போட்டு விழுந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 70 பேருக்குமேல் ஆகிவிட்டது - ஒரு சோக வரலாறாகும்; இது மத்திய ஆட்சியாளருக்கும், பிரதமர் மோடியின் ஆளுமைத் திறனுக்கும் ஏற்பட்ட நீங்காத கறையாகும்.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் சுமார் 17 நாட்களுக்கு மேலாக இரு அவைகளின் நடவடிக்கைகள் தொடர்ந்து நாளொரு மேனியும் ஒத்திவைக்கப்பட்ட அறிவிப்புகளின் பதிவுகளாகவே ஆகும் நிலை; ஒரு நாட்டின் ஜனநாயக மதிப்பு இவ்வளவுதானா என்று வேதனைப்படும் நிலை! பொறுப்புள்ளோர் எவரும் - மக்களாயினும், மற்ற ஊடகவியலாளர்களாயினும் மக்களின் வரிப்பணம் இப்படி அதிர்ச்சி அடையத்தக்க வகையில் கீறிழக்கமாக கோடிக்கணக்கான ரூபாய்கள் விரயமாக்கப்பட்டு வருவது மிகவும் வேதனையும், வெட்கப்படும் நிலைதானே!

இதற்கு யார் காரணம்? ஆளும் கட்சியா? எதிர்க்கட்சிகளா? இருதரப்பும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் மாற்றி, மாற்றி பழிதூற்றிக் கொள்கிறார்கள்! விவாதங்கள் ஆரோக்கியமாக நடைபெற அத்துணை முயற்சிகளையும் அசராமல் எடுக்க வேண்டிய கடமை ஆளுந் தரப்புக்கே உள்ளது. எந்த ஒரு நாடாளுமன்ற அவையும் முழுமையாக - விவாதங்கள் - மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நடந்ததாகவே தெரியவில்லை.

எதிர்க்கட்சிகள் ரகளை செய்து அவைகளை நடக்கவிடாமல் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்று எளிதில் குறை சொல்ல முடியாத அளவு, முந்தைய காலக்கட்டத்தில் பாஜக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு பட்ஜெட் தொடரையே முழுமையாக முடக்கினார்களே! நாட்டின் நிதிச் செலவை நடத்திட அனுமதியின்றித் திணறும் நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தை உருவாக்கிய நிலையில், இன்றைய ஆளுங்கட்சி முன்பு விதைத்ததை இன்று அறுவடை செய்கிறது என்று சொல்லப்பட்டாலும், அதை பொதுவான மக்கள் - வாக்களித்தவர்கள் ஏற்று இன்றைய நிலையை நியாயப்படுத்திட முடியாது.

என்ன செய்ய வேண்டும் பிரதமர்?
1. பிரதமர் அவைக்கு வந்து, ரூபாய் நோட்டு நாணய மதிப்பு இன்மை செயலைப்பற்றி விளக்கம் அளிக்க வேண்டும்.

2. வாக்கெடுப்புடன்கூடிய விவாதமாக அது அமைய வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் ஏகோபித்த கோரிக்கையாகும்.

இதை ஆளுங்கட்சி, பிரதமர் ஏற்று அவைகளுக்கு குறிப்பாக ஆளுங்கட்சிக்குப் பெரும்பான்மை உள்ள மக்களவையில் விவாதத்தினைத் துவக்கி நடத்தியிருக்கலாமே!

அதைவிடுத்து, நாடாளுமன்றத் தொடரின்போது உள்ளே பேசாமல், டெல்லியில் வெளியே சென்று பேசுதல், உ.பி.யில் போய் பேசுகிறேன் என்பதெல்லாம் ஒரு பிரதமர் செய்யும் செயலாகுமா?

மக்களவையில் வாக்கெடுப்பு நடத்த ஏன் தயக்கம் என்று எதிர்க்கட்சியினரின் கேள்வியில் உள்ள நியாயத்தை மறுக்க முடியாது. முன்பு வெங்கய்ய நாயுடு நாடாளுமன்ற அமைச்சராக இருந்தார். அவரை மாற்றிவிட்டு அனந்தகுமாரை ஏதோ தகுதி, திறமையில் முந்தையவரைவிட மேலான இணைப்பாளராக இருப்பார் என்று பிரதமர் போட்ட கணக்கு தப்புக் கணக்கு என்று புரிந்துவிட்டது நாட்டிற்கு, இப்போது இன்று முதல் தொடங்கும் நாடாளுமன்ற விவாதங்களிலாவது பிரதமர் அவைக்கு வந்து தக்க விவரங்களோடு தனது ரூபாய் நோட்டு பணமதிப்பு இழப்புக்கு தக்க விளக்கம் அளித்து, எதிர்க்கட்சியினரின் சந்தேகங்களைப் போக்கவேண்டிய கடமையைச் செய்தால், இனி எஞ்சிய முக்கிய தொடரில் பல பயனுள்ள விவாதங்கள் ஆரோக்கியமான முறையில் நடைபெற உள்ள வாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடும்!

எதிர்க்கட்சிகளின்மீது பிரதமர் ஒரு விரலை நீட்டிக் குற்றம் சுமத்தும்போது, மீதி எஞ்சிய 4 விரல்கள் அவர் பக்கமே உள்ளன என்பதை மறந்துவிடாமல், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்து மக்களுக்கு தனது நடவடிக்கைகளின் நியாயங்களைப் புரிய வைக்க வேண்டியது அவசர அவசியமாகும். இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்.

Label