OUR CLIENTS
மங்களகரமான மார்கழி மாத ராசி பலன்கள்
மங்களகரமான மார்கழி மாத ராசி பலன்கள் Posted on 16-Dec-2016 மங்களகரமான மார்கழி மாத ராசி பலன்கள்

மேஷம்
பள்ளிப் பருவத்திலேயே வைராக்கியத்துடன் எதையும் செய்து முடிக்கும் நீங்கள் மனதில் பட்டதை பளிச்சென பேசும் பழக்கம் உடையவர்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் தைரியம் பிறக்கும். தன்னம்பிக்கை அதிகமாகும். பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்த்து ஏமாந்துபோன உதவிகள் கிடைக்கும். பிரபலங்கள் பக்கபலமாக இருப்பார்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டாகும். ராசிநாதன் கேதுவுடன் இணைந்திருப்பதால் ரத்த சோகை, தொண்டைப் புகைச்சல் வந்துபோகும்.

உங்களுக்கு சாதகமான வீடுகளில் சுக்கிரனும் சென்று கொண்டிருப்பதால் விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு. மனைவி வழியில் சொத்துகள் வரவும் வாய்ப்பிருக்கிறது. 19ம் தேதி முதல் புதன் வக்ரமாகி 8ல் மறைவதால் சளித் தொந்தரவு, நரம்புச் சுளுக்கு, உறவினர் பகை, வீண் செலவுகள் வந்து போகும். ஆனால் 8ம் தேதி முதல் புதன் சாதகமாவதால் பழைய உறவினர், நண்பர்கள் தேடி வருவார்கள். அதிக வட்டிக் கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழிவகை பிறக்கும்.

குரு 6ல் மறைந்திருப்பதால் அடுத்தடுத்து வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். சிலர் உங்களை பயன்படுத்திக் கொண்டு தூக்கியெறிவார்கள். அதற்காக கலங்கிக் கொண்டிருக்காதீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரை அனுசரித்துப் போங்கள். பிரச்னைகள் என்றால் பேசித் தீர்ப்பது நல்லது. வழக்கென்றெல்லாம் அலைய வேண்டாம்.

மாணவ, மாணவிகளே! விடைகளை எழுதிப் பாருங்கள். மொழிப் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். விடைகளை எழுதிப் பாருங்கள். வேதியியல் சமன்பாடுகளை எழுதிப்பார்ப்பது நல்லது. எல்லாம் தெரிந்தது தானே என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.

கன்னிப் பெண்களே! உங்களைச் சுற்றியிருக்கும் நண்பர்களில் நல்லவர்கள் யார் என்பதை இனம் கண்டறிய நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

அரசியல்வாதிகளே! வீண்பழி, சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள். வழக்குகள் சாதகமாகும். கேது லாப வீட்டில் நிற்பதால் வியாபாரம் சூடுபிடிக்கும். விற்பனை உயரும். பாக்கிகளும் வசூலாகும். வாடிக்கையாளர்களும் அதிகரிப்பார்கள். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யும் அமைப்பு உருவாகும்.

ரியல் எஸ்டேட், புரோக்கரேஜ், துரித உணவகம் வகைகளால் லாபமடைவீர்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் வேலையாட்களிடம் வியாபார ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். சக ஊழியர்களின் விடுப்பாலும் உங்களுக்கு வேலைச்சுமை அதிகமாக இருக்கும். புது வேலை மாறுவதில் அவசர முடிவுகள் வேண்டாம்.

கலைத்துறையினரே! புதிய வாய்ப்புகள் கூடி வரும்.

விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லை அதிகரிக்கும். மாற்றுப் பயிர் மூலமாக ஆதாயமடைவீர்கள். வீரியத்தை விட்டு விட்டு காரியத்தில் கவனம் செலுத்தும் மாதமிது.

ராசியான தேதிகள்: டிசம்பர் 16, 22, 23, 24, ஜனவரி 1, 2, 3, 9, 10, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 25ம் தேதி இரவு 10.30 மணி முதல் 26, 27 மற்றும் 28ம் தேதி காலை 10 மணி வரை முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: திருத்தணி முருகப்பெருமனை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவி செய்யுங்கள்.

ரிஷபம்
உடுத்தும் உடையையும், உள்ளிருக்கும் மனசையும் வெள்ளையாக வைத்துக் கொள்ளும் நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்கள். தன்மானத்தை விட்டுக் கொடுக்காதவர்கள். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் சாதகமான வீடுகளில் இந்த மாதம் முழுக்கச் செல்வதால் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். உங்களுடைய ராசிக்கு 10ம் வீட்டில் செவ்வாய் நிற்பதால் புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

உங்களின் சுகாதிபதியான சூரியன் 8ல் மறைந்திருப்பதால் வேலைச்சுமை அதிகமாகும். தூக்கம் குறையும். பெற்றோரின் உடல் நிலை பாதிக்கும். அவர்களுக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். அவர்களுடன் மனத்தாங்கல் வரும். உங்களின் பூர்வ புண்யாதிபதி புதன் 19ம் தேதி முதல் வக்ரமாகி 7ல் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்கவிருப்பதால் பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

ஆனால், புதன் 30ம் தேதி முதல் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பிள்ளைகளின் ஆரோக்யம் சீராகும். அவர்களின் பிடிவாதப் போக்கும் மாறும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். கண்டகச் சனி தொடர்வதுடன், 4ல் ராகுவும் நீடிப்பதால் கொழுப்புச் சத்துள்ள, மசாலாக்கள் அதிகமுள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

மாணவ, மாணவிகளே! கணிதப் பாடத்தில் அக்கறை காட்டுங்கள். விளையாடும்போது சின்னச் சின்ன காயங்கள் ஏற்படக்கூடும். வகுப்பறையில் வீண் அரட்டைப் பேச்சை தவிர்ப்பது நல்லது.

கன்னிப் பெண்களே! காதலும் கனியும், கல்வியிலும் அதிக மதிப்பெண் வரும். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

அரசியல்வாதிகளே! தலைமையைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். கோஷ்டிப் பூசலை தவிர்க்கப் பாருங்கள். சகாக்களால் குழப்பங்கள் வரும்.

வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். புது ஏஜென்சி எடுத்து நடத்தும் அமைப்பும் கூடி வரும். பழைய பாக்கிகள் வசூலாகும். கடையை விரிவுபடுத்துவீர்கள். கட்டுமானப் பொருட்கள், உணவு, ஸ்டேஷனரி வகைகளால் லாபம் அதிகரிக்கும்.

உத்யோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்கும் கூடும். கோபப்பட்ட அதிகாரி உங்களிடம் சாந்தமாக நடந்து கொள்வார். இடமாற்றம் சற்று தாமதமாகி கிடைக்கும். சிலருக்கு கன்னடம், ஹிந்தி மாநிலத்தில் வேலைகிடைக்க வாய்ப்பிருக்கிறது.

விவசாயிகளே! வாய்க்கால், வரப்பு தகராறுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பீர்கள். புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள்.

கலைத்துறையினரே! உங்களுடைய திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அனுபவ அறிவை பயன்படுத்தி அமைதியாக காய் நகர்த்தும் மாதமிது.

ராசியான தேதிகள்: டிசம்பர் 17, 18, 19, 20, 24, 26, 27, ஜனவரி 2, 3, 4, 5, 6, 11, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 28ம் தேதி காலை 10 மணி முதல் 29 மற்றும் 30ம் தேதி இரவு 8 மணி வரை எதிலும் நிதானித்து செயல் படப்பாருங்கள்.

பரிகாரம்: கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருவிசநல்லூர் தலத்தில் அருளும் சதுர்கால பைரவர்களை தரிசித்து வாருங்கள். அன்னதானம் செய்யுங்கள்.

மிதுனம்
மற்றவர்களின் தயவை எதிர்பார்க்காமல் தானே முயன்று முதலிடத்தை பிடிக்கும் வல்லமை கொண்ட நீங்கள், தானதர்மம் செய்து கொண்டே இருப்பீர்கள். ராகு வலுவாக 3ம் இடத்தில் அமர்ந்திருப்பதால் இழுபறியாக இருந்த வேலைகள் நல்ல விதத்தில் முடியும். சுப நிகழ்ச்சிகளில் முதல்மரியாதை கிடைக்கும். அக்கம் பக்கம் வீட்டாருடன் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் விலகும். ஷேர்மூலம் பணம் வரும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்யவழக்குகள் சாதகமாக முடியும்.

19ம் தேதி முதல் ராசிநாதன் புதன் வக்கிரமாகி 6ல் நிற்கும் சனியுடன் மறைவதால் அலைச்சலும், செலவினங்களும், உறவினர், நண்பர்களுடன் மோதல்கள், சைனஸ் தொந்தரவு, காலில் நரம்புச்சுளுக்கு வந்துபோகும். ஆனால், 8ம் தேதி முதல் புதன் 7ம் இடத்தில் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்கவிருப்பதால் சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். விலகிச் சென்ற சொந்தபந்தங்கள் விரும்பி வந்து பேசுவார்கள். சனிபகவான் 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள்.

நீண்டகால பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். உங்களுடைய ராசிக்கு 4ம் வீட்டில் குரு நிற்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வீட்டில் கூடுதல் அறை அமைப்பது, தளம் கட்டுவது நல்ல விதத்தில் முடிவடையும். சூரியன் இந்த மாதம் முழுக்க உங்களுடைய ராசியைப் பார்த்துக் கொண்டேயிருப்பதால் உடல் உஷ்ணம் அதிகமாகும். வேனல் கட்டி வரக்கூடும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, மூட்டு, முழங்கால் மற்றும் அடிவயிற்றில் வலி வந்துபோகும்.

மாணவ, மாணவிகளே! நல்லவர்களின் நட்பால் சாதிப்பீர்கள். சமூக அறிவியல் பாடத்தில் கவனம் செலுத்துங்கள். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி உண்டு.

கன்னிப் பெண்களே! நட்பு வட்டம் விரிவடையும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் நல்ல விதத்தில் முடியும். வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும்.

அரசியல்வாதிகளே! கோஷ்டிப் பூசல்கள் விலகும். தலைமையால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்கள், பங்குதாரர்களிடம் இங்கிதமாகவும், இதமாகவும் பேசிக் கவர்வீர்கள். பற்று, வரவு உயரும். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிக்கு கடையை மாற்றுவீர்கள். மருந்து, கெமிக்கல், ஸ்டேஷனரி தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். தெலுங்கு, கன்னடம் பேசுபவர்கள் பங்குதாரர்களாக அறிமுகமாவார்கள்.

உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு வேறுசிலர் உரிமை கொண்டாடுவார்கள். சிலர் உங்களுடைய சாதனைகளை குறுக்கு வழியில் சென்று பறிக்க முயல்வார்கள். சூழ்ச்சிகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

கலைத்துறையினரே! முடங்கிக் கிடந்த உங்களுடைய படம் ரிலீசாகும். விவசாயிகளே! எண்ணெய் வித்துக்கள், பயிர் வகைகளால் லாபமடைவீர்கள். நெருக்கடியிலிருந்து நீந்தி, அதிரடி முன்னேற்றங்களை சந்திக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: டிசம்பர் 17, 18, 19, 20, 25, 26, 27, 28, ஜனவரி 5, 6, 7, 8, 13.

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 30ம் தேதி இரவு 8 மணி முதல் 31 மற்றும் ஜனவரி 1ம் தேதி வரை வீண் அலைச்சல் அதிகரிக்கும்.

பரிகாரம்: செஞ்சிக்கு அருகேயுள்ள மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரியை தரிசித்து வணங்கி வாருங்கள். தந்தையிழந்த பிள்ளைக்கு உதவுங்கள்.

கடகம்
புரட்சிகரமான சிந்தனையையுடைய நீங்கள், தனக்கென துன்பம் வந்தாலும் கூட அடுத்தவர்களிடம் உதவி கேட்கத் தயங்குவீர்கள். உங்களின் தனாதிபதி சூரியன் இந்த மாதம் முழுக்க 6ம் வீட்டில் வலுவாக அமர்வதால் கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். தடைப்பட்டு, தள்ளிப் போயிருந்த அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடிவடையும். பணப் பற்றாக்குறை நீங்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும். ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் சென்று கொண்டிருப்பதால் வாகனப்பழுது சரியாகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். 5ம் வீட்டில் சனி தொடர்வதால் பிள்ளைகளுடன் சின்னச் சின்ன மோதல்கள் வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு நீதிமன்றத்தை நாடாமல் பெரியோர்களை வைத்து பேசி முடிப்பது நல்லது. செவ்வாய் இந்த மாதம் முழுக்க 8ம் வீட்டில் மறைந்து கிடப்பதால் அலைச்சல், செலவினங்கள், திடீர் பயணங்களால் திணறுவீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சிலருக்கு ரத்த சோகை வரக்கூடும். கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடன்பிறந்தவர்களிடம் உரிமையில் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். நிழல் கிரகமான ராகுவும், கேதுவும் உங்களுக்கு சாதகமாக இல்லாததால் உங்களை நீங்களே சில நேரங்களில் குறைத்து மதிப்பிடுவீர்கள். சிலர் உங்களது பெயரை தவறாகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. கவனமாகச் செயல்படுங்கள். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். சாட்சி கையெழுத்திடுவதை தவிர்க்கப் பாருங்கள். உணவில் காய், கனிகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

மாணவ, மாணவிகளே! சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளியிருங்கள். பெற்றோரின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தாருங்கள். உடல் உஷ்ணத்தால் தலைமுடி உதிரும்.

அரசியல்வாதிகளே! எதிர்ப்புகள், ஏமாற்றங்கள் நீங்கும். ஆனால், கோஷ்டிப் பூசலில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். பங்குதாரர்களுடன் மனத்தாங்கல் வரும். உணவு, ஏற்றுமதி மற்றும் மூலிகை வகைகளால் ஆதாயமடைவீர்கள். வேலையாட்களால் பிரச்னைகள் வந்து நீங்கும். அவர்களிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். புது முதலீடுகளை தவிர்க்கவும்.

உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளுடன் பிணக்குகள் வரும். சக ஊழியர்களாலும் சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். அதிகாரிகளைப் பற்றிய ரகசியங்களை வெளியே சொல்ல வேண்டாம். வெளிநாட்டில் வேலை தேடுபவர்கள் இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள்.

விவசாயிகளே! விளைச்சலில் கவனம் செலுத்தப்பாருங்கள். வாய்க்கால், வரப்புத் தகராறையெல்லாம் பெரிதுபடுத்திக் கொண்டிருக்க வேண்டாம். திட்டமிட்டு எதையும் செய்ய வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்: டிசம்பர் 19, 20, 21, 22, 23, 28, 29, ஜனவரி 7, 9, 10, 11.

சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 2, 3 மற்றும் 4ம் தேதி காலை 9 மணி வரை யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம்.

பரிகாரம்: திண்டிவனத்திற்கு அருகேயுள்ள தீவனூர் விநாயகப் பெருமானை வணங்கி வாருங்கள். ஏழை மாணவனின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.

சிம்மம்
வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அறிந்த நீங்கள், சின்னச் சின்ன வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள தயங்க மாட்டீர்கள். குருபகவான் 2ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். ஆனால், 29ந் தேதி வரை சுக்ரன் 6ல் மறைந்திருப்பதால் காய்ச்சல், சளித் தொந்தரவு, குடும்பத்தில், கணவன்மனைவிக்குள் கருத்து «மொதல்கள் வந்து நீங்கும். 30ந் தேதி முதல் சுக்கிரன் 7ல் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்கயிருப்பதால் சுறுசுறுப்பாவீர்கள்.

அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் முன்கோபத்தால் சிலரின் நட்பை இழந்து விடாதீர்கள். வாகனத்தை கவனமாக இயக்குங்கள். ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனத்திற்கான இன்ஸ்யூரன்சையெல்லாம் சரியாகப் பார்த்து புதுப்பித்துவிடுவது நல்லது. சூரியன் இந்த மாதம் முழுக்க 5ம் இடத்தில் நிற்பதால் பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம்.

அவர்களின் பிடிவாதப்போக்கை அன்பால் சரி செய்யப் பாருங்கள். கேது 7ல் நிற்பதுடன், யோகாதிபதி செவ்வாயும் சேர்ந்திருப்பதால் மனைவிக்கு வேலைச்சுமை, டென்ஷன், ஹார்மோன் பிரச்னைகள், கர்ப்பப்பை வலி வந்துபோகும். ராகு 12ல் மறைந்து கிடப்பதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது தூக்கம் குறையும்.

மாணவ, மாணவிகளே! சக மாணவர்களின் ஆதரவும் பெருகும். வேதியியல் ஆய்வு கூடத்தில் பரிசோதனையின்போது அமிலங்கள் கை, காலில் விழுந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். பெற்றோரின் அரவணைப்பு அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளே! சட்டத்திற்கு புறம்பான வகையில் எதையும் செய்ய வேண்டாம். தொகுதி மக்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். மரியாதை கூடும்.

வியாபாரத்தில் தள்ளுபடி விலைக்கு பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால், வேலையாட்களால் நிம்மதி குறையும். அதிக வேலையிருக்கும் நாட்களில் பணியாட்கள் விடுப்பில் செல்வார்கள். கட்டுமானப் பொருட்கள், உணவு, பெட்ரோகெமிக்கல் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகத்தில் உங்களை பழி வாங்கிய அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். புது அதிகாரி உங்களுக்கு சாதகமாக இருப்பார். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். அதே சம்பளத்துடன் கூடிய புது வேலையும் வரும். உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

கலைத்துறையினரே! ஏமாற்றங்களும், வீண் பழியும் வந்து நீங்கும்.

விவசாயிகளே! அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். எலித் தொல்லை குறையும். முற்பகுதியில் கொஞ்சம் செலவுகள் இருந்தாலும் மாதத்தின் மையப்பகுதியிலிருந்து இழுபறி நிலை மாறி ஏற்றம் தரும் மாதமிது.

ராசியான தேதிகள்: டிசம்பர் 22, 23, 24, 25, 31, ஜனவரி 1, 2, 3, 9, 10, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 4ம் தேதி காலை 9 மணி முதல் 5 மற்றும் 6ம் தேதி நண் பகல் 12.30 மணி வரை எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது.

பரிகாரம்: மேல்மருவத்தூரை அடுத்துள்ள அச்சிறுப்பாக்கத்தில் அருளும் ஆட்சீஸ்வரரை தரிசித்து வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.

கன்னி
யதார்த்தமாகப் பேசும் நீங்கள், அவ்வப்போது கற்பனையில் மூழ்குவதுண்டு. தாராளமாக தர்மம் செய்யும் நீங்கள், பழைய கலைப் பொருட்களை பாதுகாப்பவர்கள். சனிபகவானின் ராசிக்கு 3ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். தடைகளெல்லாம் நீங்கும். உங்கள் யோகாதிபதியான சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் இந்த மாதத்தில் வீடு, மனை வாங்குவது, தங்க ஆபரணங்கள் வாங்குவது போன்ற அமைப்புகள் உண்டாகும். அனுபவபூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும் பேசத் தொடங்குவீர்கள்.

செவ்வாய் ராசிக்கு 6ல் அமர்ந்திருப்பதால் உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சிலர் வீடு மாறுவதற்கு முன்பு பணம் தருவீர்கள். ராசிநாதன் புதன் 19ம் தேதி முதல் 3ம் வீட்டில் வக்ரமாகி சனியுடன் சேர்வதால் கழுத்து வலி, கை, கால் வலி, அசதி, சோர்வு, தோலில் நமைச்சல், உறவினர், நண்பர்களால் தொந்தரவுகள் வந்துபோகும். ஆனால், 8ம் தேதி முதல் புதன் சனியை விட்டு விலகி 4ம் இடத்தில் அமர்வதால் ஆரோக்யம் சீராகும். சொந்த, பந்தங்களின் அன்புத் தொல்லைகள் குறையும்.

சூரியன் உங்கள் ராசிக்கு 4ல் நுழைந்திருப்பதால் குலதெய்வப் பிரார்த்தனைகளை முடிப்பீர்கள். அண்டை மாநிலத்திலுள்ள புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உங்களுடைய ராசிக்குள்ளேயே குரு நிற்பதால் அவ்வப்போது உணர்ச்சி வசப்படுவீர்கள். எல்லோரும் உங்களை ஏமாற்றுவதாக நினைப்பீர்கள். ஏமாற்றப்பட்டு விடுவோமோ என்ற பய உணர்வும் தலைதூக்கும். யூரினரி இன்ஃபெக்ஷன், அசிடிட்டியால் வயிற்றுவலி வரக்கூடும். பெரிய நோய்கள் இருப்பது போல அவ்வப்போது நினைத்துக் கொள்வீர்கள்.

மாணவ, மாணவிகளே! நினைவாற்றல் கூடும். வகுப்பாசிரியர் பாராட்டும்படி அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். விளையாட்டிலும் ஆர்வம் உண்டு.

கன்னிப் பெண்களே! உணர்ச்சி வேகத்தில் வந்த காதல் நீங்கி இனி உண்மை காதல் அரும்பும். பெற்றோரின் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளே! இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். புதிய பொறுப்பில் அமர்த்தப்படுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உற்சாகமாக வியாபாரத்தை கவனிப்பீர்கள். எதிர்பார்த்த ஆர்டர் வந்து சேரும். பங்குதாரர்கள் பணிவார்கள். நல்ல அனுபவமிக்க வேலையாள் உங்களுடன் வந்து சேருவார். கன்சல்டன்சி, வாகன உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் அதிகரிக்கும். அரசாங்கத்தாலும் மறைமுக ஆதாயம் உண்டு.

உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். உங்களுக்கு நெருக்கமாக இருந்த அதிகாரி வேறுயிடத்திற்கு மாற்றப்படுவார். புது அதிகாரிகள் உங்களை புரிந்து கொள்ளாமல் ஒருதலைப்பட்சமாக செயல்பட வாய்ப்பிருக்கிறது. சக ஊழியர்களிடம் அந்தரங்க விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். இடமாற்றம் உண்டு. சிலர் கட்டாய விடுப்பில் செல்ல வேண்டியிருக்கும்.

விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டை நீங்கும். மகசூல் பெருகும். வருமானம் உயரும்.

கலைத்துறையினரே! பெரிய வாய்ப்புகள் தேடி வரும். நினைத்ததை முடிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: டிசம்பர் 16, 17, 18, 24, 26, 27, 29, ஜனவரி 3, 5, 11, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 6ம் தேதி நண்பகல் 12.30 மணி முதல் 7 மற்றும் 8ம் தேதி மாலை 3 மணி வரை கொஞ்சம் சிக்கனமாக இருங்கள்.

பரிகாரம்: நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசித்து வணங்கி வாருங்கள். ஏதேனும் ஒரு மரக்கன்று நட்டு பராமரியுங்கள்.

துலாம்
உள்ளம் அழுதாலும் உதட்டில் புன்னகையை தவழவிடும் நீங்கள், சூழ்ச்சிகளால் புறக்கணிக்கப் பட்டாலும் முடங்கி விடாமல் முயற்சியால் முன்னுக்கு வருபவர்கள். கடந்த ஒருமாத காலமாக உங்களது ராசிக்கு 2ம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய சேமிப்புகளையெல்லாம் கரைத்த சூரியன் இப்போது உங்களுடைய ராசிக்கு 3ம் வீட்டில் நுழைந்திருப்பதால் வீண் செலவுகள் குறையும். திட்டமிட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். புதிய முயற்சிகளும் பலிதமாகும். பழைய கடனை அடைப்பதற்கு வழி கிடைக்கும். பிரிந்திருந்த கணவன்மனைவி ஒன்று சேருவீர்கள்.

சவாலான காரியங்களைக் கூட சாதுர்யமான பேச்சால் முடித்துக் காட்டுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வழக்கு சாதகமாகும். எதிரிகள் அடங்குவார்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். ராசிநாதன் சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயமடைவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழிவகைப் பிறக்கும். ஆனால், பாதச் சனி தொடர்வதால் சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள்.

அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். ராகு லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். பழைய இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். ஷேர் லாபம் தரும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். மாணவ, மாணவிகளே! வகுப்பாசிரியர் பக்கபலமாக இருப்பார். டி.வி., இமெயிலில் அதிக நேரம் போக வேண்டாம். இசை, இலக்கியப் போட்டிகளில் பரிசு பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். வேலை கிடைக்கும். உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு வரும்.

அரசியல்வாதிகளே! தொகுதி மக்களிடையே செல்வாக்குப் பெறுவீர்கள். ஆதாரப்பூர்வமாகவும், ஆணித்தரமாகவும் எதிர்க்கட்சியினர் மீது குற்றம்சாட்டி புகழடைவீர்கள். தலைமை உங்களை பாராட்டும்.

வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்கள், அண்டை மாநிலத்தில் இருப்பவர்களால் பண உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். சிலர் புது கிளைகள் தொடங்குவீர்கள். மின்னணு, மின்சாரம், பூ, கட்டுமானப் பொருள் விற்பனையால் லாபமடைவீர்கள். பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வேலையாட்களால் இருந்து வந்த பிரச்னைகள் ஓயும்.

உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து போகும். மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். அதிகாரிகளுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். சக ஊழியர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளால் புகழடைவீர்கள். பணமும் கைக்கு வரும்.

விவசாயிகளே! தண்ணீர் பஞ்சம் தீரும். தோட்டப் பயிர், மூலிகைப் பயிர்களால் ஆதாயமடைவீர்கள். தடைகள் பல வந்தாலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கரையேறும் மாதமிது.

ராசியான தேதிகள்: டிசம்பர் 16, 17, 18, 19, 20, 26, 27, 28, 29, ஜனவரி 1, 5, 6, 7, 13.

சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 8ம் தேதி மாலை 3 மணி முதல் 9 மற்றும் 10ம் தேதி மாலை 5.30 மணி வரை வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: வேலூருக்கு அருகேயுள்ள சேண்பாக்கம் பதினோரு விநாயகர்களான ஏகாதச விநாயகர்களை தரிசித்து வாருங்கள். அன்னதானம் செய்யுங்கள்.

விருச்சிகம்
பொதுவாக சட்ட திட்டங்களை மதிக்கும் நீங்கள் நியாயவாதிகளைக் காப்பாற்ற குறுக்கு வழியில் சில நேரங்களில் யோசிப்பீர்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய் கேந்திர பலம் பெற்று வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். எதிர்பார்த்து ஏமாந்து போன தொகையும் கைக்கு வரும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். சகோதர வகையில் நல்லது நடக்கும். ராசிநாதன் செவ்வாய் 4ல் நிற்கும் கேதுவுடன் சேர்ந்து நிற்பதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள்.

தலைச்சுற்றல், மூச்சுப் பிடிப்பு, நெஞ்சு எரிச்சல் வந்து போகும். உங்கள் ராசியை விட்டு விலகி சூரியன் 2ல் நிற்பதால் பேச்சால் பிரச்னைகள், கண் எரிச்சல், காது வலி, பார்வைக் கோளாறு வந்து போகும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் செல்வாக்குக் கூடும். எதிர்பார்த்த பணம் வரும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, மனை அமையும். குருபகவான் வலுவாக இருப்பதால் சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். புதிய முயற்சிகளிலும் வெற்றி கிட்டும்.

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். அறிஞர்கள், ஆன்மிகவாதிகள் உதவிகரமாக இருப்பார்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

மாணவ, மாணவிகளே! படிப்பில் முன்னேறுவீர்கள். ஆனால், ஏழரைச் சனி நடைபெறுவதால் விடைகளை எழுதிப் பார்ப்பது நல்லது. வகுப்பறையில் கடைசி வரிசையில் அமராதீர்கள்.

கன்னிப் பெண்களே! உங்களுக்கு இருந்து வந்த சோர்வு, களைப்பு நீங்கும். நல்ல வரன் அமையும். எதிர்ப்புகள் நீங்கும்.

அரசியல்வாதிகளே! எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். புதிய பதவிகள், பொறுப்புகள் கூடி வரும்.

வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். எலக்ட்ரிக்கல், வீட்டு உபயோகப் பொருட்கள், கெமிக்கல், கட்டுமானப் பொருட்களால் லாபம் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்களால் மகிழ்ச்சியடைவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு மந்தமாகத் தான் இருக்கும்.

உத்யோகத்தில் நிம்மதி உண்டு. அதிகாரிகள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். சிலருக்கு புது வேலைகிடைக்கும். கன்னடம், மலையாளம் பேசுபவர்களால் நல்லது நடக்கும்.

கலைத்துறையினரே! புதிய வாய்ப்புகள் கூடி வரும். உங்கள் படைப்புகள் பரவலாக பாராட்டிப் பேசப்படும்.

விவசாயிகளே! விளைச்சல் அதிகமாகும். புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பீர்கள். சிலர் புது நிலம் கிரயம் செய்வீர்கள். தளராத மனதுடன் போராடி சாதிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: டிசம்பர் 19, 20, 21, 22, 29, 30, 31, ஜனவரி 1, 2, 7, 8.

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 16ம் தேதி நண்பகல் 12.45 மணி வரை மற்றும் ஜனவரி 10ம் தேதி மாலை 5.30 மணி முதல் 11, 12ம் தேதி இரவு மணி 8.45 வரை சகிப்புத் தன்மையுடன் செயல்படப்பாருங்கள்.

பரிகாரம்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளை தரிசித்து வாருங்கள். மூட்டை தூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள்.

தனுசு
எப்போதும் தியாகம் செய்து கொண்டிருக்கும் நீங்கள் முடியாது என்பதையும் கடின உழைப்பால் முடித்துக் காட்டுபவர்கள். கடந்த ஒருமாதமாக உங்கள் ராசிக்கு 12ல் அமர்ந்து உங்களுக்கு ஏகப்பட்ட செலவுகளையும், பிரச்னைகளையும் ஏற்படுத்திய சூரியன் இப்போது உங்கள் ராசிக்குள் நுழைந்திருப்பதால் வீண் செலவுகள், அலைச்சல்கள் குறையும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் விரைந்து முடியும். ஆனால் சூரியன் ராசிக்குள் நுழைந்திருப்பதால் உடல் உஷ்ணம் அதிகமாகும். கண் எரிச்சல், வயிற்று வலி வந்து நீங்கும்.

உங்களின் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் எல்லாவகையிலும் உங்களுக்கு முன்னேற்றம் உண்டு. குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கிருந்து வந்த கூடாப்பழக்க வழக்கங்கள் விலகும். ஏழரைச் சனியால் அடுத்தடுத்த செலவுகள், மனஇறுக்கம் அதிகமாகும். உங்கள் ராசிக்கு 10ல் குரு நீடிப்பதால் அவ்வப்போது தோற்று விடுவோமோ என்ற ஒரு பயம் வந்து போகும். உங்களுடைய தகுதி, திறமை குறைந்துவிட்டதாக சில நேரங்களில் நினைத்துக் கொள்வீர்கள்.

சிலர் உங்களை மதிக்காமல் போகிறார்கள் என்று நீங்களே நினைத்துக் கொள்வீர்கள். கேது வலுவாக 3ம் இடத்திலேயே அமர்ந்திருப்பதால் நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் உங்களது வாழ்க்கைத் தரம் ஒருபடி உயரும்.

மாணவ, மாணவிகளே! நட்பு வட்டம் விரிவடையும். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அலட்சியம் வேண்டாம். அன்றைய பாடங்களை அன்றே முடிப்பது நல்லது.

கன்னிப் பெண்களே! நல்ல வரன் அமையும். வேலை கிடைக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.

அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கட்சி மேல்மட்டம் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைக்கும்.

வியாபாரத்தில் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வாடிக்கையாளர்களின் கருத்தைக் கேட்டு கடையை இடமாற்றம் செய்வீர்கள். ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். இரும்பு, ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர் உதிரி பாகங்களால் லாபம் உண்டு. பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.

உத்யோகத்தில் சின்னச்சின்ன இடர்ப்பாடுகளை சமாளிக்க வேண்டி வரும். சக ஊழியர்களின் விடுப்பாலும் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். எதிர்ப்புகளும் இருக்கும். அலுவலக விஷயங்களை வெளியிட வேண்டாம். உயரதி காரிகளை கலந்தாலோசித்து முடிவுகளெடுப்பது நல்லது.

கலைத்துறையினரே! எதிர்பார்த்த நிறுவனத்திலிருந்து வாய்ப்புகள் வரும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

விவசாயிகளே! மஞ்சள், கரும்பு, எண்ணெய் வித்துக்களால் ஆதாயமடைவீர்கள். வாய்க்கால், வரப்புச்சண்டை வந்து போகும். தொலை நோக்குச் சிந்தனையால் முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்: டிசம்பர் 22, 23, 24, 25, ஜனவரி 1, 2, 3, 8, 9, 10.

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 1ம் தேதி நண்பகல் மணி 12.45 முதல் 17, 18ம் தேதி மாலை மணி 6 வரை மற்றும் ஜனவரி 12ம் தேதி இரவு மணி 8.45 முதல் 13ம் தேதி வரை எதிலும் முன்யோசனையுடன் செயல்படப்பாருங்கள்.

பரிகாரம்: திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குச் சென்று வணங்கி வாருங்கள். உழவாரப்பணியை மேற்கொள்ளுங்கள்.

மகரம்
எல்லாம் தெரிந்திருந்தாலும் அடக்கமாக இருக்கும் நீங்கள், சண்டை சச்சரவு என வந்துவிட்டால் பதுங்கமாட்டீர்கள். அடுத்தவர் சொத்திற்கு ஆசைப்பட மாட்டீர்கள். ராஜ கிரகங்களான குருவும், சனியும் வலுவாக இருப்பதால் உங்களுடைய அந்தஸ்து, தகுதி உயரும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பணவரவு உண்டு. சிலருக்கு ஷேர் மூலமாகவும் பணம் வரும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.

புது பதவி, பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். சூரியன் ராசிக்கு 12ல் நுழைந்திருப்பதால் தவிர்க்க முடியாத செலவுகளும், சிக்கல்களும் இருந்து கொண்டிருக்கும். அரசு காரியங்கள் இழுபறியாகி முடியும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். அவ்வப்போது தூக்கம் குறையும். உங்கள் யோகாதிபதியான புதனும், சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் சென்று கொண்டிருப்பதால் வருமானம் உயரும். வசதி, வாய்ப்புகள் கூடும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.

புது வாகனம் வாங்குவீர்கள். அக்கம்பக்கம் வீட்டாருடன் இருந்த சச்சரவுகள் விலகும். உறவினர், நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். செவ்வாய் 2ம் இடத்தில் நிற்பதால் இடம், பொருள், ஏவலறிந்து பேசப்பாருங்கள். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாற வேண்டாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.

மாணவ, மாணவிகளே! படிப்பில் இருந்த அலட்சியப் போக்கு மாறும். கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும்.

கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். எதிர்பார்த்தது போல் நல்ல வரன் அமையும். உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பிறமொழிக்காரர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள்.

அரசியல்வாதிகளே! சகாக்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். கட்சி மேல்மட்டத்தைப் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

வியாபாரத்தில் பெரிய முதலீடுகளால் போட்டிகள் ஒருபுறமிருந்தாலும் ராஜதந்திரத்தால் லாபத்தை பெருக்குவீர்கள். பாக்கிகள் வசூலாகும். வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அவர்களால் இருந்த பிரச்னைகள் விலகும். வாடிக்கையாளர்களிடம் நற்பெயரை சம்பாதிப்பீர்கள். போர்டிங், லாட்ஜிங், ஆட்டோ மொபைல்ஸ் மூலமாகவும் லாபம் அதிகரிக்கும்.

உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்து கொள்வார். சக ஊழியர்களை அன்பால் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.

விவசாயிகளே! தண்ணீர் பற்றாக்குறை தீரும். ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். புது யுக்திகளை கையாண்டு விளைச்சலை அதிகப்படுத்துவீர்கள்.

கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புத் திறன் வளரும். மக்கள் மத்தியில் பிரபலமாவீர்கள். எதிர்பாராத திடீர் திருப்பங்களும், பணவரவும் அதிகரிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: டிசம்பர் 16,17,24,25,26,27, ஜனவரி 4,5,6,7,11,12,13.

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 18ம் தேதி மாலை மணி 6 முதல் 19 மற்றும் 20ம் தேதி வரை யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

பரிகாரம்: உங்கள் வீட்டிற்கு அருகேயுள்ள ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வாருங்கள். முதியோர் இல்லங்களுக்குச் சென்று உதவுங்கள்.

கும்பம்
தானுண்டு தன் வேலையுண்டு என்றில்லாமல் நாலு பேருக்கு நல்லது செய்யும் நீங்கள், எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சமாட்டீர்கள். உங்களின் சப்தமாதிபதி சூரியன் இந்த மாதம் முழுக்க லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் தடைப்பட்டு, தள்ளிப் போன காரியங்களெல்லாம் முடிவடையும். முக்கிய முடிவுகளும் எடுப்பீர்கள். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். கணவன்மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மனைவி வழியிலும் ஆதரவு பெருகும்.

அரசு காரியங்கள் சாதகமாக முடிவடையும். ராசிக்குள் கேது நிற்பதுடன், செவ்வாயும் அமர்ந்திருப்பதால் முன்கோபத்தை கட்டுப்படுத்தப்பாருங்கள். உங்கள் மீது வீண் பழிகளும் வந்து சேரும். சகோதர வகையிலும் அலைச்சல், செலவுகள் இருக்கும். சொத்துப் பிரச்னையும் தலைத்தூக்கும். பூர்வீக சொத்தில் பணத்தை முதலீடு செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். பண விஷயத்தில் கறாராக இருங்கள். சிறுசிறு விபத்துகளும் வரக்கூடும். ராகுவும் 7ல் நீடிப்பதால் மனைவிக்கு அடிவயிற்றில் வலி, ரத்த அழுத்தம், ஹார்மோன் பிரச்னைகள் வந்து போகும்.

முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுவதற்கு முன்பாக வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. உங்கள் ராசிநாதன் சனிபகவான் 10ல் அமர்ந்திருப்பதால் சிலருக்கு வேலை கிடைக்கும். புதுத் தொழில் தொடங்கும் அமைப்பு உண்டாகும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாணவ, மாணவிகளே! அதிகாலையில் எழுந்து படிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று நினைப்பீர்கள்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வைத்துவிட்டு உயர்கல்வியில் கவனத்தை திருப்புங்கள்.

அரசியல்வாதிகளே! மதிப்பு, மரியாதைக் கூடும். சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும்.

வியாபாரம் சுமாராக இருக்கும். போட்டிகளால் திணறுவீர்கள். தொழிலை விரிவுப்படுத்த முயற்சிப்பீர்கள். விளம்பர யுக்திகளை கையாளுவது நல்லது. ஏற்றுமதிஇறக்குமதி, துணி, உணவு வகைகளாலும் லாபமடைவீர்கள்.

உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். உங்களுடைய உழைப்பிற்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். ஒரு பக்கம் பிரச்னைகள் இருந்தாலும் மற்றொரு பக்கம் இழந்த உரிமைகளை மீண்டும் பெறுவீர்கள். சக ஊழியர்களால் பிரச்னைகள் வெடிக்கும்.

விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லையால் மகசூல் குறையும்.

கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள் கரடு, முரடான பாதைகளையும் தாண்டி முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்: டிசம்பர் 17,18,19,20,26,27,28,29 ஜனவரி 5,6,9,13

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 21, 22 மற்றும் 23ம் தேதி காலை மணி 11 வரை புது முயற்சிகள் தாமதமாகி முடியும்.

பரிகாரம்: வேலூர் மாவட்டம் ஆற்காடு, அருகேயுள்ள அருங்குன்றம் மலையின் மேலுள்ள மகாதிரிபுரசுந்தரி ஆலயத்திற்குச் சென்று வாருங்கள். சாலையோரம் வாழும் சிறார்களுக்கு துணி மணிகள் வாங்கித் தாருங்கள்.

மீனம்
தன் குறையை பிறர் சுட்டிக் காட்டினால் உடனே திருத்திக் கொள்ளும் நீங்கள், மற்றவர்கள் செய்யும் தவறையும் தயங்காமல் தட்டிக் கேட்பீர்கள். ராஜ கிரகங்களான சனியும், குருவும் சாதகமாக இருப்பதால் தன்னம்பிக்கை உண்டாகும். இழந்த பணத்தையெல்லாம் மீண்டும் பெறுவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். சுறுசுறுப்பாவீர்கள். கணவன்மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். சொத்துப் பிரச்னை தீரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். எதிர்ப்புகள் அடங்கும்.

சொந்த ஊரில் செல்வாக்கடைவீர்கள். கோவில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். இந்த மாதம் முழுக்க சூரியன் 10ல் நுழைந்திருப்பதால் புது வேலை கிடைக்கும். அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் புது வாகனம் வாங்குவீர்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு.

உயர்கல்வி, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த சுற்றுலாத் தலங்களுக்கு குடும்பத்தினருடன் சென்று வருவீர்கள். செவ்வாய் 12ல் மறைந்திருப்பதால் சகோதரங்களால் அலைச்சல், டென்ஷன் இருக்கும். சொத்து விஷயங்களிலும் உஷாராக இருப்பது நல்லது.

மாணவ, மாணவிகளே! படிப்பில் முன்னேறுவீர்கள். அதிக மதிப்பெண் பெறுவீர்கள். வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.

கன்னிப்பெண்களே! தவறானவர்களை நல்லவர்கள் என்று நினைத்து ஏமாந்தீர்கள். காதலில் தெளிவு கிடைக்கும். வேலை அமையும். பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்திற்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். தொகுதி மக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். மருந்து, எரிபொருள், ஸ்டேஷனரி, எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன் வகைகளால் லாபமடைவீர்கள். கடையை மாற்றுவீர்கள். விரிவுப்படுத்தி அழகுபடுத்துவீர்கள். குறைந்த லாபம் வைத்து விற்பதன் மூலாம் வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள்.

உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். மூத்த அதிகாரியின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள். சிலருக்கு அதிக சம்பளத்துடன் அயல்நாட்டிலிருந்தும் வேலை வாய்ப்பு வரும்.

கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். மக்கள் மத்தியில் பிரபலமாவீர்கள்.

விவசாயிகளே! பழைய கடனை பைசல் செய்ய வழி பிறக்கும். விளைச்சல் பெருகும். நெல், கரும்பு வகைகளால் ஆதாயமடைவீர்கள். திடீர் யோகங்களையும், வெற்றிகளையும் தரும் மாதமிது.

ராசியான தேதிகள்: டிசம்பர் 19, 20, 21, 22, 29, 30, 31, ஜனவரி 1, 7, 9, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 23ம் தேதி காலை மணி 11 முதல் 24 மற்றும் 25ம் தேதி இரவு மணி 10.30 வரை நாவடக்கத்துடன் செயல்படுவது நல்லது.

பரிகாரம்: சென்னை ராமாவரம் தலத்தில் அருளும் லட்சுமி நரசிம்மரை தரிசித்து வாருங்கள். மாற்றுத் திறனாளிக்கு உதவுங்கள்.

Label