OUR CLIENTS
காற்று மாசு: இந்தியாவில் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் மரணம் : மாசு நகரங்களில் தில்லிக்கு முதலிடம்!
காற்று மாசு: இந்தியாவில் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் மரணம் : மாசு நகரங்களில் தில்லிக்கு முதலிடம்! Posted on 13-Jan-2017 காற்று மாசு: இந்தியாவில் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் மரணம் : மாசு நகரங்களில் தில்லிக்கு முதலிடம்!

புதுதில்லி
காற்று மாசுபாடு காரணமாக இந்தியாவில் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும், நாட்டிலேயே காற்று மாசு அதிகமாக உள்ள நகரம் தில்லி என்றும் கிரீன்பீஸ் இந்தியா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியாவில் உள்ள 168 நகரங்களில் எந்தவொரு நகரமும், உலக சுகாதார அமைப்பால் (டபிள்யுஹெச்ஓ) வரையறுக்கப்பட்டுள்ள காற்றுத் தர மதிப்பளவுகளுக்கு இணங்கியதாக இல்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையவழி அறிக்கைகள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களிடம் பெற்ற பதில்கள், இந்தியாவின் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 168 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட காற்றுத் தர ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் கிரீன்பீஸ் இந்தியா அமைப்பு இந்த ஆய்வறிக்கையை தயார் செய்துள்ளது.

மேலும், காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்பானது, புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் உயிரிழப்புக்கு நெருங்கிய அளவில் இருப்பதாகவும், காற்று மாசுபாடு காரணமாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தித் திறன் 3 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாகவும் அந்த “ஏர்போகலிப்ஸ்’ ஆய்வறிக்கையின் விவரங்கள் வருமாறு:

தென்னிந்தியாவில் உள்ள சில நகரங்களே, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் வரையறுக்கப்பட்டுள்ள காற்றுத் தர மதிப்பீடுகளுக்கு இணங்கிச் செயல்படுபவையாக உள்ளன.

நிலக்கரி, எண்ணெய் போன்ற படிம எரிபொருள்களைப் பயன்படுத்துவதே காற்று மாசுபாட்டுக்கான முக்கிய காரணியாகும். இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகமாக உள்ள முதல் 20 நகரங்களில், கடந்த 2015ம் ஆண்டில் பிஎம்10 என்ற காற்று மாசு குறீயீட்டின் அளவானது 268/168 என்ற அளவில் இருந்துள்ளது.

இந்தப் பட்டியலில் 268 என்ற குறீயிட்டு அளவுடன் தில்லி முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து 258 முதல் 200 என்ற குறீயிட்டு அளவுடன் காஜியாபாத், அலாகாபாத், பரேலி (உத்தரப் பிரதேசம்), ஃபரீதாபாத் (ஹரியாணா), ஜாரியா (ஜார்க்கண்ட்), அல்வார் (ராஜஸ்தான்), ராஞ்சி, குசுன்டா, பாஸ்டகோலா (ஜார்க்கண்ட்), கான்பூர் (உத்தரப் பிரதேசம்), பாட்னா (பிகார்) ஆகிய நகரங்கள் உள்ளன.

இதில் 268 என்ற காற்று மாசு குறியீடானது, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் ஆண்டுதோறும் நிர்ணயிக்கப்படும் தேசிய சுற்றுப்புற காற்றுத் தர மதிப்பீட்டு அளவை விட 4.5 மடங்கு அதிகமாகும். அதேவேளையில், உலக சுகாதார அமைப்பால் (டபிள்யுஹெச்ஓ) வரையறுக்கப்பட்ட அளவை விட 13 மடங்கு அதிகமாகும்.

இதில் தில்லியில் கடந்த 2015 அக்டோபர் முதல் 2016 பிப்ரவரி வரையிலான மாதங்களில் காற்று மாசுபாட்டு குறியீடானது 500 என்ற அபாய அளவை எட்டியதும் குறிப்பிடத்தக்கது.

சுவாசிக்க முடியாத அளவிலான காற்று நிலவும் பிரச்னையை தற்போது எதிர்கொண்டுள்ளோம். நாட்டின் வளர்ச்சி, மனித சுகாதாரத்தை முக்கியமானதாகக் கொண்டால், காற்று மாசுக்கு எதிராகப் போராடுவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று கிரீன்பீஸ் இந்தியா ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Label