OUR CLIENTS
ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை, அதிகாரமில்லாத நடராஜன் கூறுவதா? : தமிழிசை கடும் கண்டனம்!
ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை, அதிகாரமில்லாத நடராஜன் கூறுவதா? : தமிழிசை கடும் கண்டனம்! Posted on 18-Jan-2017 ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை, அதிகாரமில்லாத நடராஜன் கூறுவதா? : தமிழிசை கடும் கண்டனம்!

சென்னை
அதிமுகவில் பாஜக எந்தவித குழப்பங்களையும் விளைவிக்கவில்லை என்றும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை, எந்த அதிகாரமும் இல்லாத நடராஜன் தான் அப்படியொரு குற்றம்சாட்டை கூறுகிறார் என்று தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
தஞ்சையில் நடந்த பொங்கல் விழாவில் பொங்கி பொங்கி பாஜகவை தாக்கி பேசியிருக்கிறார் நடராஜன், ஆவியை பார்த்து பயப்படுவதை போலவே காவியை பார்த்து பயப்படுவதாக எண்ணி காவி மயமாக்கப்படுகிறது என்றும் கூறி இருக்கிறார்.

அதுமட்டுமல்ல அதிமுகவை உடைக்கப் பார்க்கிறது, குழப்பம் விளைவிக்க பார்க்கிறது மத்திய அரசு, பாஜகவை இங்கு வளர விடமாட்டோம் என்றெல்லாம் சூளுரைத்திருக்கிறார்.

ராணுவ கட்டுப்பாட்டுடன் இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு கட்சி ஏன் இப்படி அரண்டுபோய் பேசுகிறது என்று எனக்கு தெரியவில்லை. அது மட்டுமல்ல எந்த விதத்தில் குழப்பம் விளைவிக்க முயற்சித்தோம், எந்த விதத்தில் உடைக்க முயற்சித்தோம், எந்த விதத்தில் அவர்களின் உட்கட்சி பிரச்சினையில் நாங்கள் தலையிடுகிறோம் என்பதற்கான ஆதாரங்களை சொல்லிவிட்டு அவர் இந்த குற்றச்சாட்டை சொல்லட்டும்.

ஜனநாயக முறைப்படி அந்த கட்சியில் எந்த குழப்பமும் வந்து விட கூடாது என்ற காரணத்திற்காக முதல்வர் ஜெயலலிதா இறந்த அந்த நடு இரவே மரியாதைக்குரிய ஆளுநர் அவர்களுக்கான பதவி பிரமாணத்தை செய்து வைத்தார்.

எந்த விதத்திலும் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சியில் குழப்பம் வந்து விட கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் தான், குழப்பம் விளைவிக்க வேண்டும் என்றால், சுயலாபம் பெற வேண்டும் என்றால் அன்றே அது பாஜகவால் பெற்று இருக்க முடியும், அதுமட்டுமல்ல இப்படி அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை, அந்த கட்சியின் அடிப்படையில் எந்த அதிகாரமும் இல்லாத நடராஜன் எப்படி சொல்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை அது மட்டுமல்ல முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது உண்மையான அன்போடு நட்பு பாராட்டிய மோடி குழப்பம் விளைவித்தாரா?

இல்லையென்றால் நடையை கட்டுங்கள் என்று சொன்ன நடராஜர்கள் குழப்பம் விளைவித்தார்களா என்பது அந்த கட்சியில் தொண்டர்களுக்கும் தெரியும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரியும். இன்னும் சொல்லப்போனால் பன்னீர்செல்வம் முதல்வராக நீடிக்கலாம் என்று சொல்கிறார். அதிகாரப்பூர்வமான ஆட்சியில் இருக்கும் பாஜகவும் அதைத்தான் சொல்கிறது.

ஆனால், பன்னீர்செல்வம் நீடிக்கலாம் என்று சொன்னால் முதல்வர் நீடிப்பதை பற்றிய முடிவையே இவர் எடுப்பதை போலவே பேசுகிறார் என்றால் குழப்பம் யாரால் ஏற்பட்டு இருக்கிறது என்பதை மக்கள் நன்றாக உணர்வார்கள்.

ஏன் இன்று பாஜகவை பார்த்து இவர்கள் பயப்படுகிறார்கள், முற்றிலுமாக அவர்களின் பொங்கல் விழா நோக்கமே பாஜகவை குறிவைத்து பேசுவது என்பதே, பாஜக தமிழகத்தில் அவர்களுக்கு சவாலாக இருக்கிறது என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.
எங்களை பொறுத்தமட்டில் தமிழகத்தை வளர்ச்சி மையமாக்க வேண்டும். அதற்கு எங்களை வளர்த்து எங்களை வளர்ச்சி அடைய செய்து எங்கள் கட்சியை உறுதியாக்கி நாங்கள் அதை அடைவோமே தவிர, இன்னொரு கட்சியை உதிர வைத்து அதை அடைவதற்கான அவசியம் பாஜகவிற்கு இல்லை.

நூற்றாண்டை கொண்டாடவிருக்கும் புரட்சி தலைவர் எம்ஜிஆர் உயிரோடு இருந்தால் பாஜகவை தான் ஆதரித்து இருப்பார், ஏன் இன்று நாமெல்லாம் வருத்தமடைந்திருக்கும் உயிரிழந்து இருக்கும் ஜெயலலிதா இருந்தாலும் கூட இன்று பாஜகவை தான் ஆதரித்து இருப்பார்.

ஏன் இன்று பாஜகவை பார்த்து இவர்கள் இப்படி பரிதவிக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் பாஜகவின் உண்மை தன்மையை விளக்க வேண்டியது எனது கடமை என்பதற்காகவே நான் இந்த பதில் அறிக்கையை தருகிறேன் என்று கூறியுள்ளார்.

Label