OUR CLIENTS
அமெரிக்காவைவிட்டு வெளியேற திட்டமிடும் நிறுவனங்களுக்கு கடுமையான வரி விதிப்பு: டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவைவிட்டு வெளியேற திட்டமிடும் நிறுவனங்களுக்கு கடுமையான வரி விதிப்பு: டிரம்ப் எச்சரிக்கை Posted on 25-Jan-2017 அமெரிக்காவைவிட்டு வெளியேற திட்டமிடும் நிறுவனங்களுக்கு கடுமையான வரி விதிப்பு: டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்
அமெரிக்காவைவிட்டு வெளியேறி வெளிநாடுகளில் புதிய தொழில் தொடங்கத் திட்டமிடும் நிறுவனங்களுக்கு கடுமையான இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

அமெரிக்காவின் 12 முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை வெள்ளை மாளிகையில் திங்கள்கிழமை காலை சந்தித்துப் பேசினார் டிரம்ப். காலை உணவுடன் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் ஃபோர்டு மோட்டார் நிறுவனம், டெல் கணினி நிறுவனம், மின்பொருள் நிறுவனமான டெஸ்லா, வேர்ல்பூல், ஜான்சன் அண்ட் ஜான்சன், விமான நிறுவனங்களான லாக்ஹீட், ஸ்பேஸ்-எக்ஸ், உள்ளிட்ட 12 முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். துணை அதிபர் மைக் பென்ஸ் அக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அந்த நாட்டின் மிகப் பெரிய கார் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் பிரதிநிதி அந்தக் காலை உணவுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத் தலைவர் தொழில் துறை தொடர்பான மற்றொரு முக்கிய ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ளதால் இந்தக் கூட்டத்தில் இடம் பெறவில்லை என்று அதிபர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அப்போது அதிபர் டிரம்ப் தெரிவித்ததாவது: அமெரிக்க நிறுவனங்களுக்குத் தற்போது நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் 75 சதவீதம் வரை விலக்கு அளிக்க எனது அரசு தயாராக இருக்கிறது. தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்படும். விரைவாகவும் எளிதாகவும் தொழில் தொடங்கலாம். பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளன. இங்குள்ள நிறுவனங்களுக்குப் புதிய வரிச் சுமை இருக்காது. தற்போதுள்ள வரிகளிலும் ஏராளமான சலுகைகள் அளிக்கப்படும். அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்கின்ற நிறுவனங்களுக்கு சாதகமான சூழல் ஏற்படுத்தப்படும். ஏற்கெனவே பல நிறுவனங்கள் அமெரிக்காவுக்குத் திரும்புவதாக அறிவித்துள்ளன. தாய்நாட்டுக்குத் திரும்பும் நிறுவனங்களின் பெரும் அலையை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்.

அதே வேளையில் வெளிநாடுகளில் தங்கள் தொழிலைத் தொடங்க நினைக்கும் நிறுவனங்களுக்கு கடுமையான இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

அமெரிக்காவில் செயல்படும் நிறுவனங்களை ஏதோ காரணம் கூறி மூடிவிட்டு, வெளிநாடுகளில் அதே நிறுவனத்தை அமைத்து, அங்கு பொருள்களை உற்பத்தி செய்து, அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யலாம் என்று யாரும் எண்ணம் கொள்ள வேண்டாம். அமெரிக்க எல்லைக்குள் அந்தப் பொருள்கள் நுழைய வேண்டுமானால், கடுமையான வரி விதிப்பை அவர்கள் எதிர்கொள்ள வேண்டி வரும் என்றார் அவர்.

வட அமெரிக்க வர்த்தக உடன்படிக்கையின் கீழ் மெக்சிகோ, கனடா போன்ற நாடுகளில் செயல்பட்டு வரும் அமெரிக்க நிறுவனங்களால் அந்நாடுகள் பொருளாதார ரீதியாகப் பயனடைந்து வருகின்றன. ஆனால் அந்த உடன்படிக்கையை மறு பரிசீலனை செய்து அமெரிக்க நிறுவனங்கள் தாய்நாடு திரும்பச் செய்ய வேண்டும் என்று டிரம்ப் கூறி வருகிறார். உள்நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்வதற்கு முதல் படியாக அதனை வலியுறுத்தி வருகிறார் டிரம்ப்.

இதனிடையே, அமெரிக்க அதிபரின் அறிவிப்புகளை கூர்ந்து கவனித்து வருவதாகவும் தக்க சமயத்தில் தங்களது தரப்பு வாதங்களை முன்வைப்போம் என்றும் மெக்சிகோ, கனடா அரசுகள் தெரிவித்தன.

Label