OUR CLIENTS
ஜல்லிக்கட்டு போராட்டம்: மெரீனாவில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
ஜல்லிக்கட்டு போராட்டம்: மெரீனாவில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் Posted on 26-Jan-2017 ஜல்லிக்கட்டு போராட்டம்: மெரீனாவில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

கோயமுத்தூர்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்திய அறவழிப் போராட்டத்தை நினைவுகூறும் வகையில் தமிழக அரசு மெரீனாவில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என திமுக செயல் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


கோவை சிவானந்தா காலனியில் திமுக மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் முத்துசாமி, தெற்கு மாவட்டச் செயலாளர் நாச்சிமுத்து, புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், தெற்கு மாவட்டச் செயலாளர் தமிழ்மணி ஆகியோர் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

1965-ஆம் ஆண்டு மத்திய அரசு ஹிந்தியை திணித்தபோது, அதனை எதிர்த்து மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலர் போராட்டம் நடத்தினர். அப்போது, தமிழ் மொழியைக் காப்பதற்காக 50-க்கும் மேற்பட்டோர் உயிர்நீத்தனர்.

மொழிக்காகப் போராடியவர்கள் கைது செய்யப்பட்டபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தைக் கையில் எடுத்தனர். இப்போராட்டத்தின் காரணமாகவே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத அளவுக்கு மாணவர்கள் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டது பாராட்டுக்குரியது. ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டு வரப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். அச்சட்டம் குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை நேரில் சந்தித்து முதல்வர் விளக்கம் அளித்திருந்தால் வன்முறை நடைபெற்று இருக்காது.

தமிழக அரசின் தூண்டுதலின்பேரில், காவல் துறையினர் வன்முறையில் ஈடுபட்டனர். ஆனால், சமூக விரோதிகள் சிலர் வன்முறையைத் தூண்டியதாக பொய்யான குற்றச்சாட்டை தமிழக அரசு முன்வைக்கிறது. திமுக ஆட்சியில் இருந்த வரையில் ஜல்லிக்கட்டு மீது தடை இருந்தும் தமிழகத்தில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு மீது தடை இருப்பதாகக் கூறி வந்த அரசு, மாணவர்களின் போராட்டம் காரணமாக தற்போது அவசரச் சட்டத்தை இயற்றியுள்ளது. இதை முன்பே நிறைவேற்றி இருந்தால் மாணவர்கள் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது.

மாணவர்கள், இளைஞர்களின் அறவழிப் போராட்டம் வெற்றி அடைந்துள்ளது. அதன் நினைவாக மெரீனாவில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்றார்.

Label