OUR CLIENTS
போதை பாக்குகளின் விற்பனையை தடுக்க நடவடிக்கை இல்லை: ராமதாஸ்
போதை பாக்குகளின் விற்பனையை தடுக்க நடவடிக்கை இல்லை: ராமதாஸ் Posted on 08-Feb-2017 போதை பாக்குகளின் விற்பனையை தடுக்க நடவடிக்கை இல்லை: ராமதாஸ்

சென்னை
போதை பாக்குகளின் விற்பனையைத் தடுக்க அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: உலக புற்றுநோய் நாளையொட்டி தமிழகத்தில் புகையிலைப் பொருள்களின் நுகர்வு குறித்து சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனம் சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதில் கிடைத்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் போதைப் பாக்குகளுக்கு தடை விதிக்கப்பட்ட பிறகும் அவற்றின் விற்பனை தடையின்றி நடப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்டோரில் 28.64 லட்சம் பேர் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. 15 வயதுக்குட்பட்டவர்களில் இவ்வளவு பேர் புகையிலைக்கு அடிமையாவது நல்லது இல்லை.

போதைப் பாக்கு மட்டுமன்றி, கஞ்சா, அபின், ஹெராயின் உள்ளிட்ட அனைத்து வகையான போதைப் பொருள்களும் தமிழகத்தில் தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன.

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை குறிவைத்தே இந்த வணிகம் நடக்கிறது. இது குறித்த அனைத்துத் தகவல்களும் காவல்துறையினருக்கு நன்றாக தெரியும் என்ற போதிலும் அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் மாணவ சமுதாயம் தொடர்ந்து சீரழிகிறது.

புகையிலைப் பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் இந்திய அளவில் 10 லட்சம் பேரும், தமிழகத்தில் ஒரு லட்சம் பேரும் உயிரிழக்கின்றனர். இதைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் போதைப் பாக்குகளுக்கு விதிக்கப்பட்ட தடையைக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். தடையை மீறி போதைப்பாக்கு விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும். கல்லூரி வளாகங்களில் போதைப் பொருள்கள் விற்கப்படும் கலாசாரத்துக்கும் முடிவு கட்டப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Label