OUR CLIENTS
ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் குவிந்த தொண்டர்கள்; முன்னாள் அமைச்சர்கள் ஆதரவு
ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் குவிந்த தொண்டர்கள்; முன்னாள் அமைச்சர்கள் ஆதரவு Posted on 09-Feb-2017 ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் குவிந்த தொண்டர்கள்; முன்னாள் அமைச்சர்கள் ஆதரவு

சென்னை
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தில் வீட்டின் முன்பு அதிமுகவின் தொண்டர்கள் பலர் குவிந்து அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

4 சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் பலரும் அவருக்கு நேரில் ஆதரவு தெரிவித்தனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவில் இருந்தே அதிமுகவின் தொண்டர்கள் வரத் தொடங்கினர். இதன் காரணமாக கிரீன்வேஸ் சாலையிலும், மெரீனா சாலையிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தடை இல்லாமல் அனுமதி: முதல்வர் வீட்டுக்கு அருகே போலீஸார் தடுப்பு அரண்கள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

எனினும், அவர் வீட்டுக்கு வந்த அதிமுகவின் தொண்டர்கள் அனைவரும் தடையில்லாமல் அனுமதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பன்னீர்செல்வம் இல்லத்துக்கு வருவதும் போவதுமாக இருந்தனர். இதில் குறிப்பிடத்தக்க அளவில் பெண்களும் இருந்தனர். ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தும், சசிகலாவை எதிர்த்தும் அங்கு கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கோஷங்கள் எழுந்தன.

இடைவிடாமல் பேட்டி: மெரீனாவில் ஜெயலலிதாவின் சமாதியில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு வந்தார். அதிலிருந்து தொடங்கி அதிகாலை 2.30 மணி வரை ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் பேட்டி அளித்தார். அதைப்போல, புதன்கிழமை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும், பத்திரிகைக்கும் தனித்தனியாகப் பேட்டி அளித்தார் அவர். அவ்வப்போது தொண்டர்களைச் சந்தித்து, கையசைத்து உற்சாகப்படுத்தினார்.

முன்னாள் அமைச்சர்கள் ஆதரவு: ஓ.பன்னீர்செல்வத்தை சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாணிக்கம், ஆறு.குட்டி, மனோரஞ்சிதம், எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் நேரில் ஆதரவு தெரிவித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, அரங்கநாயகம், முன்னாள் பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மனோஜ் பாண்டியன், புதுச்சேரி மாநில சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஓம்சக்தி சேகர் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். திரைப்பட இயக்குநர் பாக்யராஜ், நடிகர் மன்சூர் அலிகான் உள்பட பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

நல்ல அரசு அமையும்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்கள் மத்தியில் பேசும்போது, விரைவில் நல்ல அரசு அமையும் என்றார்.

Label