OUR CLIENTS
வெகு விமரிசையாக நடைபெற்ற காஞ்சி காமாட்சி கோயில் மகா கும்பாபிஷேகம்: லட்சக்கணக்கானோர் தரிசனம்
வெகு விமரிசையாக நடைபெற்ற காஞ்சி காமாட்சி கோயில் மகா கும்பாபிஷேகம்: லட்சக்கணக்கானோர் தரிசனம் Posted on 10-Feb-2017 வெகு விமரிசையாக நடைபெற்ற காஞ்சி காமாட்சி கோயில் மகா கும்பாபிஷேகம்: லட்சக்கணக்கானோர் தரிசனம்

காஞ்சிபுரம்
பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 சக்தி பீடங்களில் பிரதானமானதும், பழைமைவாய்ந்த திருத்தலங்களில் ஒன்றுமான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஆகம விதிகளின்படி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. எனினும் கடந்த 1995-ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்துக்குப் பின், 22 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், இந்தாண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து ரூ. 35 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
 அதன்படி, அர்த்த மண்டபம், காயத்ரி மண்டபம், ஊஞ்சல் வசந்த மண்டபங்கள், நவராத்திரி மண்டபம், கனு மண்டபம், வாகன மண்டபம், கோசாலை, சுக்ரவார மண்டபங்கள், ரிஷிகேஷபுரம், திருமடப்பள்ளி, திருக்குளம், வெளிப்பிரகாரம் உள்ளிட்டவை புனரமைக்கப்பட்டன.

 மேலும் 4 ராஜகோபுரங்கள் வர்ணம் பூசப்பட்டு, கொடிக் கம்பத்துக்கு தங்க முலாம் பூசப்பட்டது. மூலஸ்தானத்தின் காமகோடி விமானம், ஆதிசங்கரர் விமானங்களில் தங்கக் கவசம் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

 கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக சாலை அமைக்கப்பட்டு ஹோமங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கடந்த 3-ஆம் தேதி முதல் நாள்தோறும் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா பூர்ணாஹுதி, தீபாராதனை, யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவை நடைபெற்றன. வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு யாக சாலை பூஜை, ஜபம், 8.30 மணிக்கு நாடி சந்தானம், மகா பூர்ணாஹுதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. பின்னர் வேதமந்திரங்கள் முழங்க கலச யாத்திரை நடைபெற்றது.

 பின்னர், காலை 9.45 மணிக்கு விமான அபிஷேகம், 10.15 மணிக்கு மூலஸ்தானங்களுக்கு அபிஷேகம், மகா தீபாராதனை, பிரசாத விநியோகம் நடைபெற்றது.

 காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரால் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை பல்லக்கு மூலம் தங்க விமானத்துக்கு கொண்டு சென்றனர். கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றும் போது, வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன.

ஆளில்லா விமானம் மூலம் கோயில் வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கண்காணிக்கப்பட்டன. கோயிலைச் சுற்றி மாட வீதிகளிலும் பக்தர்கள் கூட்டம் நிறைந்திருந்தது.

 விழாவில், ஜம்மு-காஷ்மீர் மாநில துணை முதல்வர் நிர்மல் சிங், உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன், வைத்தியநாதன், ராம் மனோகர் ராம், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்  முத்தரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  கும்பாபிஷேகத்தையொட்டி காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ மடம் திருப்பணி கமிட்டித் தலைவர் ஏ.சி.முத்தையா, ஸ்ரீ மடம் கார்யம் வி.விஸ்வநாதய்யர், ஆதீன பரம்பரை தர்மகர்த்தா சல்லா விஸ்வநாத சாஸ்திரி ஆகியோர் செய்திருந்தனர்.

சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு
காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, அஞ்சல் துறை சார்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
இந்த அஞ்சல் தலையை ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிட, திருப்பணிக் குழுத் தலைவர் சிவ நாடார் பெற்றுக் கொண்டார். அப்போது, சென்னை மண்டல அஞ்சல் துறைத் தலைவர் (வணிகம்) ஜெ.டி. வெங்கடேஷ்வரலு, காஞ்சிபுரம் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் டி.வி.சுந்தரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.   

சிறப்புடன் நிறைவுபெற்ற கும்பாபிஷேகம்
 காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு லட்சக்கணக்கானோர் வருவர் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் செய்திருந்தது. இதனால், கோயிலைச் சுற்றி அமைக்கப்பட்ட தடுப்புகள் மூலம் பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றி கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். அப்போது, அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்து வெளியேற முடிந்ததைக் காண முடிந்தது.

 அதுபோல், மருத்துவ முகாம்கள், உதவி மையம், அவசர ஊர்திகள், அன்ன தானம், வாகன நிறுத்தம் உள்ளிட்டவை மூலம் பொதுமக்கள் பயனடைந்தனர். கும்பாபிஷேக நிகழ்ச்சியினை எல்இடி திரையில் பொதுமக்கள் பலரும் கண்டு மகிழ்ந்தனர். இதன் மூலம், எவ்வித இடையூறுமின்றி அவரவர் ஊர்களுக்கு திரும்பியதைக் காண முடிந்தது.  இதுகுறித்து மாவட்ட நிர்வாக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கையால் எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. அதுபோல், கோயில் நிர்வாகம், பொதுமக்கள் உள்ளிட்டோர் முழு ஒத்துழைப்பு அளித்ததால் கும்பாபிஷேகம் சிறப்புடன் நிறைவு பெற்றது என்றார்.

Label