OUR CLIENTS
அதிமுக எம்எல்ஏக்களுக்கு சொந்த ஊரில் பாதுகாப்பு
அதிமுக எம்எல்ஏக்களுக்கு சொந்த ஊரில் பாதுகாப்பு Posted on 20-Feb-2017 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சொந்த ஊரில் பாதுகாப்பு

சென்னை
சொந்த ஊருக்கு திரும்பும் அதிமுக எம்எல்ஏக்களின் வீடு, அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.


சட்டப் பேரவையில் சனிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவரை ஆதரித்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப்படுவதுடன் பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், அவர்கள் திங்கள்கிழமை தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப திட்டமிட்டுள்ளனர். இதனால், அவர்களுக்கும், வீடு, அலுவலகங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேபோல், முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள வீட்டிலும், சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் உள்பட 10 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் தாதகாப்பட்டி உழவர் சந்தை எதிரே பெரியார் குடியிருப்பு ஏ- பிளாக்கில் உள்ள சட்டப் பேரவைத் தலைவர் பி.தனபாலின் வீட்டிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் உள்பட 4 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் வரும் வாகனங்களை போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.

இதேபோல், எட்டயபுரம் கிருஷ்ணன்கோவில் தெருவில் உள்ள விளாத்திகுளம் எம்எல்ஏ உமாமகேஸ்வரியின் வீடு உள்ளிட்ட எம்எல்ஏக்களின் வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதேபோல், பேரவைத் தலைவர் பி.தனபாலின் சென்னை வீட்டுக்கும், அமைச்சர்களின் வீடுகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Label