OUR CLIENTS
துணை சபாநாயகருக்கு சேலை, வளையல் வழங்க முயன்ற தி.மு.க.வினர் கைது!
துணை சபாநாயகருக்கு சேலை, வளையல் வழங்க முயன்ற தி.மு.க.வினர் கைது! Posted on 22-Feb-2017 துணை சபாநாயகருக்கு சேலை, வளையல் வழங்க முயன்ற தி.மு.க.வினர் கைது!

பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் ஊர்வலமாக சென்று துணை சபாநாயகருக்கு சேலை,வளையல் வழங்க முயன்ற தி.மு.க.வினர் 33 பேரை போலீசார் கைது செய்தனர். சபாநாயகர் தனபாலுக்கு தபால் மூலம் சேலை அனுப்பி வைத்தனர்.

தமிழக சட்டசபையில் கடந்த 18ந்தேதி நடந்த சிறப்பு கூட்டத்தில் முதல்&அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பெரும்பான்மையை நிரூபித்தார். அப்போது நடந்த அமளியில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டார். அவரது சட்டை கிழிக்கப்பட்டது. இதற்கு தி.மு.க. தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனுக்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்தும் நூதன போராட்டம் நடத்தப்போவதாக அவர்கள் அறிவித்தனர். இதன்படி சேலை, வளையல்கள் மற்றும் பெண்களின் உடைகள்,பொருட்கள் ஆகியவற்றை அவருக்கு வழங்கப்போவதாக தி.மு.க.வினர் கூறினர். அதன்படி நேற்று காலை தி.மு.க.வினர் பொள்ளாச்சியில் உள்ள துணை சபாநாயகர் அலுவலகத்துக்கு வருவதாக தகவல்கள் வெளியானது.

இதை தொடர்ந்து அ.தி.மு.க. நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் 100க்கும் மேற்பட்டவர்கள் துணை சபாநாயகர் அலுவலகத்தில் திரண்டனர். இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இருதரப்பினரும் மோதி கொள்வதை தடுக்க போலீஸ் துணை சூப்பிரண்டுகள் முத்துராஜன், நீலக்குமார் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையில் தி.மு.க. நகர செயலாளர் தென்றல் செல்வராஜ் வீட்டு முன் தி.மு.க.வினர் ஏராளமானோர் திரண்டனர். மேலும் ஒரு தட்டில் சேலை, ஜாக்கெட், வளையல், பொட்டு, பூ மற்றும் பெண்கள் பயன்படுத்தும் பொருட்கள் வைக்கப்பட்டன. தி.மு.க. தொண்டர் ஒருவர் சேலை அணிந்து, பொள்ளாச்சி ஜெயராமன் போன்ற முக கவசத்தை அணிந்திருந்தார்.

அதை தொடர்ந்து தி.மு.க. நகர செயலாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் சேலை மற்றும் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்த தட்டுடன் தி.மு.க.வினர் ஊர்வலமாக துணை சபாநாயகர் அலுவலகத்துக்கு செல்ல முயன்றனர். அப்போது அவர்கள் சபாநாயகர், துணை சபாநாயகர் மற்றும் சசிகலாவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இதையடுத்து போலீசார் ஊர்வலமாக செல்ல முயன்றவர்களை தடுத்து நிறுத்தி 33 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் காரணமாக தி.மு.க. நகர செயலாளர் வீடு உள்ள குமரன் நகர் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

முன்னதாக சபாநாயகர் தனபாலின் அவினாசி வீட்டு முகவரிக்கு தபாலில் இதேபோல சேலை மற்றும் பொருட்களை அனுப்பியதற்கான ரசீதை தி.மு.க.வினர் காண்பித்தனர்.சபாநாயகர்,துணை சபாநாயகர் ஆகியோர் நடுநிலையோடு செயல்படாமல் கடமை தவறிவிட்டதாவும், இருவரும், சட்டசபை நிகழ்ச்சியின் போது தங்களது உரிமையை நிலைநாட்டவில்லை என்பதாலும் இந்த போராட்டத்தை நடத்தி அவர்களுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்ததாக தி.மு.க.வினர் தெரிவித்தனர்.

தி.மு.க. போராட்டம் காரணமாக பொள்ளாச்சி&பாலக்காடு ரோட்டில் உள்ள துணை சபாநாயகர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் திப்பம்பட்டியில் உள்ள துணை சபாநாயகர் வீட்டில் கோமங்கலம் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து வடக்கு ஒன்றியம் குரும்பபாளையத்தில் தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்தனர். இதற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அறிவழகன் தலைமை தாங்கினார். தடையை மீறி உண்ணாவிரதம் இருந்ததாக கூறி தி.மு.க.வினர் 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

Label