OUR CLIENTS
அ.தி.மு.க.வினருக்கு, சசிகலா முக்கிய வேண்டுகோள்!
அ.தி.மு.க.வினருக்கு, சசிகலா முக்கிய வேண்டுகோள்! Posted on 22-Feb-2017 அ.தி.மு.க.வினருக்கு, சசிகலா முக்கிய வேண்டுகோள்!

சென்னை
ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளையொட்டி, வரும் 24-ம் தேதி ஏழை எளியோருக்கு பல வகையான நலத் திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும் என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா, கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா ஒப்புதலோடு கட்சியின் தலைமைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் முதலமைச்சராக, அ.தி.மு.க பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் நிகழ்ச்சிகள்  24.2.2017 அன்றும், அதன் பின்னரும் அமைந்திட வேண்டும் என்று அ.தி.மு.க உடன்பிறப்புகளை தலைமைக் கழகம் வேண்டி கேட்டுக்கொள்கிறது.

அ.தி.மு.க, ஜெயலலிதாவின் அயராத உழைப்பாலும், மதிநுட்பத்தாலும் ஆலமரமாய், ஆயிரங்காலத்துப் பயிராய் உயர்ந்து நிற்கும் வரலாற்றுக் காலகட்டம் இது. இத்தனை உயர்வுக்கும் சிறப்புக்கும் முழுமுதற் காரணமான ஜெயலலிதா இன்று நம்மிடையே இல்லை. ஆனாலும், அவர் நமக்கும் கழகத்துக்கும் இனி வரும் தலைமுறைகளுக்கும் வகுத்துத்தந்த பொதுவாழ்வுக்கான வழிமுறைகளும் இலக்கணங்களும் நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கின்றன.

ஜெயலலிதாவின் உழைப்பையும், எம்ஜிஆரின் மக்கள் செல்வாக்கையும் சூழ்ச்சியும் துரோகமும் சுருட்டிச்செல்ல மேற்கொண்ட கொடுஞ்செயல்களை வெற்றிகரமாக முறியடித்து, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நேரத்தில், கழகத்தின் ஆட்சி தொடர்வதை உறுதிசெய்திருக்கும் நாம், மேன்மேலும் மக்கள் நலப் பணிகளைத் தொய்வின்றி ஆற்றி, கழகத்துக்கும் கழக ஆட்சிக்கும் வலுவும் பொலிவும் சேர்க்கும் மக்கள் நலப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தலைமைக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

ஏழை எளியோருக்குப் பல வகையான நலத் திட்ட உதவிகள்; மாணவச் செல்வங்களுக்குக் கல்வி தொடர்பான உதவிகள்; முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களில் நற்சுவை உணவு வழங்குதல்; இன்னபிற வழக்கமான நலத்திட்ட உதவிகளை வழங்குவதோடு, எல்லா இடங்களிலும் ஜெயலலிதாவின் திருஉருவப் படங்களை மக்கள் பார்வைக்கு வைத்து, பிறந்தநாள் விழாவைச் சிறப்புற நடத்திட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கழக நிர்வாகிகளையும், கழக உடன்பிறப்புகளையும் தலைமைக் கழகம் கேட்டுக்கொள்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.

Label